ரூ 1 கோடிக்குமேல் வாங்கும் நடிகர்களுக்கு வசூல் அடிப்படையில் சம்பளம்!

சினிமாவில் ரூ 1 கோடிக்கு மேல் வாங்கும் நடிகர்களுக்கு இனி வசூல் அடிப்படையில்தான் சம்பளம் தரவேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.20, அதிகபட்சம் ரூ.100 என்ற அடிப்படையில் கட்டண முறையை அரசு மாற்றி நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், மாநில துணைத்தலைவர் ரமேஷ்பாபு, துணைச்செயலாளர் ஸ்ரீதர், ராமநாதபுரம் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுகுமாறன், செயலாளர் தினேஷ்பாபு, மதுரை நகர் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் கஜேந்திரன், சேலம் டி.என்.டி.ராஜா உள்பட தமிழகம் முழுவதும் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த 466 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

வசூல் அடிப்படையில் சம்பளம்

தமிழகத்தில் 3-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். கேளிக்கை வரிவிலக்கு பெற புதிய நிபந்தனைகளை விதித்திருப்பதற்கும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

திரைப்பட தயாரிப்பு செலவுகள் அதிகரித்து வருவதால் திரையரங்க நுழைவு கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே திரைப்பட தயாரிப்பு செலவை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் சம்பளம் திரைப்படத்தின் வசூல் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

ரூ.20, 100 கட்டணம்

இது சம்பந்தமாக வினியோகஸ்தர்கள் மற்றும் நடிகர் சங்கத்தினருடன் கலந்து ஆலோசித்து எந்த அடிப்படையில் நடிகர், நடிகைகளுக்கு சம்பளத்தை நிர்ணயிப்பது என்பது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் நுழைவு கட்டணத்தை மாற்றி அமைத்து தரும்படி முதல்வரிடம் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி குளிர்சாதன வசதி உள்ள திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.20-ம், அதிகபட்சம் ரூ.100-ம், குளிர்சாதன வசதி செய்யப்படாத சாதாரண திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.10-ம், அதிகபட்சம் ரூ.70-ம் கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும்.

பராமரிப்பு செலவை உயர்த்துக

திரையரங்குகளின் பராமரிப்பு செலவுகள் அதிகரித்து விட்டதால் திரையரங்குகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை குளிர்சாதன திரையரங்குகளுக்கு ரூ.5 ஆகவும், சாதாரண திரையரங்குகளுக்கு ரூ.3 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். திரையரங்குகளுக்கான 'சி' உரிமம் பெறுவதற்கான கால அளவை 5 ஆண்டுகளாக அரசு நீட்டிக்க வேண்டும்.

திரையரங்குகளுக்கான கட்டிட உறுதி சான்றிதழை அங்கீகரிக்கப்பட்ட தனி பொறியாளர்களிடம் இருந்து பெறுவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். திரையரங்குகளுக்கான கேளிக்கை வரியை முன்காலத்தில் நடைமுறையில் இருந்ததை போலவே மீண்டும் பின்பற்றி கேளிக்கை வரியை கழித்து மீதமுள்ள தொகையில் வினியோகஸ்தர்களுக்கான பங்கு தொகையை தருவது என்று தீர்மானிக்கப்பட்டது.

வேறு உபயோகத்துக்கு....

திரைப்படங்கள் கிடைக்காத காலங்களில் திரையரங்குகளை வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசு விதிகளுக்குட்பட்டு காலை 9 மணி முதல் இரவு 1.30 மணி வரை எத்தனை காட்சிகளை வேண்டுமானாலும் நடத்திக்கொள்ள அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tamil Cinema News

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More