Showing posts with label interesting tamil stories. Show all posts
Showing posts with label interesting tamil stories. Show all posts

பிசிராந்தையார் நட்பு - Tamil Friendship Stories


பாண்டிய நாட்டில்  உள்ளது  பிசிர்  என்ற  ஊர்.ஆந்தையார்  என்பது  இவரது  இயற்பெயர்.ஆதலால்  பிசிராந்தையார்  என்று  அழைக்கப்பெற்றார்.  இவர்  சோழ  மன்னன் கோப்பெருஞ்சோழன்  மீது  அன்பு  கொண்டு  அவனைப்  பற்றிய  பாடல்களைப்  பாடியுள்ளார்.சோழனைக்  காணவேண்டும்  என்னும்  பேரவா  கொண்டிருந்தார்.  ஆனால்  பாண்டிய  நாட்டிலுள்ள  பிசிர்  வெகு  தொலைவு  உள்ளதால்  இவரால்  சோழ  நாட்டுக்குச்  செல்ல  இயலவில்லை.

இவரது புகழையும்  தமிழையும்  கேள்விப்பட்ட  சோழனும்  இவரைக்  காணவேண்டும்  என்னும்  அவா  கொண்டிருந்தான்.  எனவே  இருவரும்  உயிர்  ஒன்றாகவும்  உடல்  வேறாகவும்  வாழ்ந்து  வந்தனர். இருவரும்  தாம் ஒருவருக்  கொருவர் சந்திக்கும்  திருநாளை  ஆவலுடன்  எதிர்  பார்த்துக்  கொண்டிருந்தனர்.

கோப்பெருஞ்சோழனின்  தலைநகர்  உறையூர்.  இம்மன்னன்  பிசிராந்தையாரை  நேரில்  காணாமலேயே  அவருடன்  நட்புக் கொண்டவன்.  இவனது  ஆட்சி  நடந்துகொண்டிருக்கும்  போதே  இவனது  இரண்டு  புதல்வர்களும்  சோழ  ஆட்சிக்  கட்டில்  ஏறுவதற்காக  தந்தையுடன்  போரிடத்  துணிந்தனர்.

இதை  அறிந்த  கோப்பெருஞ்சோழன்  ஆட்சியை  விட்டு  வடக்கிருந்து  உயிர்  விடத்  துணிந்தான்.  அப்போது  தன்  மந்திரியிடமும்   மற்றையோரிடமும்   பிசிராந்தையார்  என்னைக்  காண  வருவார்.  என்னுடன்  வடக்கிருப்பார்.  அவருக்கும்  ஓர்  இடத்தைத்  தயார்  செய்யுங்கள்  எனக்  கூறினார்.    அதேபோல்  பிசிராந்தையாருக்கும்  ஒரு  இடம்  அமைக்கப்பட்டது.  நாட்கள்  கடந்தன.  சோழன்    பிசிரந்தையாரைக்  காணாமலேயே  வடக்கிருக்கத்  துணிந்தான்.   எப்படியும்  ஆந்தையார்  வந்து  விடுவார்  எனக்  கூறித்  தன்  தவத்தை  மேற்கொண்டான்.   

இவ்வுலக  வாழ்வைத்  துறக்க  விரும்பும்  மன்னவர்  வடக்கிருந்து  உயிர்  விடுதல்  அக்கால  மரபு.  வடக்கிருத்தல்  என்பது  தன்நாட்டில்  உள்ள  ஆறு  குளம்   போன்ற    நீர்  நிலைக்குச்  சென்று  அதன்  இடையே  மணல்  திட்டு  ஒன்றை    அமைத்து   வடக்கு  திசை  நோக்கி  அமர்ந்து  உண்ணாநோன்பிருந்து  உயிர்  விடுதல்.

தன்  மக்கள்  மீது  இருந்த   மனக்  கசப்பின்  காரணமாக  கோப்பெருஞ்சோழனும்   வடக்கிருந்தான்.
இதனைக்  கேள்விப்பட்டார்  பிசிராந்தையார்.  உடனே   சோழ  நாட்டை  நோக்கி  ஓடி  வந்தார்.
வழியில்  எதிர்ப் பட்டவர்  இவரைப்  பார்த்து  மிகவும்  ஆச்சரியப்  பட்டனர்."புலவரே!  நான்  என்  சிறுவயது  முதலே  தங்களைப்  பற்றி  என்  தந்தையார்   கூறக்  கேட்டிருக்கிறேன்.  தங்கள்  மிகவும்  வயதானவராக  இருப்பீர்கள்  என்று  எண்ணியிருந்தோம்.  தங்களோ  மிகவும்  இளமையாக  இருக்கின்றீர்களே, அது  எப்படி?"என்று  வியந்து  கேட்டனர்.  அதற்கு  மறுமொழியாக  ஆந்தையார்   ஒரு  பாடல்  பாடினார்.  புறநானூற்றில்  உள்ள  இப்பாடல்  நமது  வாழ்வியலுக்கு  மிகவும்  தேவையான  ஒன்று.

         " யாண்டு  பலவாக  நரையில வாகுதல்
          யாங்காகியர்  என வினவுதிராயின், 
           மாண்ட  என்  மனைவியொடு  மக்களும்  நிரம்பினர்
           யான்  கண்டனையர்  என்  இளையரும்   வேந்தனும் 
          அல்லவை  செய்யான்   காக்கும்  அதன்  தலை 
           ஆன்று  அவிந்து  அடங்கிய  கொள்கைச்
           சான்றோர்  பலர்  யான்  வாழும்  ஊரே."    

என்று  பாடிய  பாடல்  மூலம்  " வயோதிகரானாலும்  இளமையோடிருக்கும்  காரணத்தைக்  கேட்பீரானால்   சிறந்த  பண்புள்ள  மனைவி,  மக்கள்  குறிப்பறிந்து  பணி  செய்யும்  பணியாளர்கள்  அறத்தையே  நாடிச்  செய்யும்  மன்னன்  இத்துணை  பேருடன்  நன்கு  கற்று    நல்ல  பண்புகளுடன்  விளங்கும்  சான்றோர்  பலரும்  எம்மைச்  சூழ்ந்து  இருக்க  நான்  வாழ்வதால்  எனக்கு  நரை  தோன்றவில்லை.  மூப்பும்  எம்மை  அணுகவில்லை."   என்று  விளக்கினார்.   

சோழனின்  இறுதி  நேரம்  வந்துற்றபோது  பிசிராந்தையார்  ஓடிவந்தார்.  நண்பனைக்  கண்டார்  தனக்காக த்  தயாராக  அமைக்கப்பட்ட  இடத்தில்  வடக்கிருந்து  சோழனுடன்  தானும்   தன்  இன்னுயிர்  விடுத்தார்.

இச்செய்தியை    இக்காட்சியைக்  கண்ட   பொத்தியார்  என்னும்  புலவர்   தன்  பாடலில்  இதனைக்  கூறுகிறார்.

      "இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக
       இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்
       வருவன்  என்ற  கோனது  பெருமையும் 
       அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்
       வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே."

பிசிராந்தையார்  என்ற  புலவரும்  கோப்பெருஞ்சோழன்  என்ற  மன்னனும்  தம்முள்  காணாமலேயே  நட்புக்  கொண்டு  ஒன்றாக  உயிர்  நீத்த  இச்சிறப்பினை  இலக்கியங்கள்  நமக்கு  எடுத்து  இயம்புகின்றன.  இத்தகு  நண்பர்களை  நம்மால்  மறக்க  இயலுமா?


Tags: Tamil Friendship Stories, Pisiraanthaiyaar, Kopperum Chozhan, Tamil History Stories, Historical Stories

திருப்பதி எழுமலையான் தனது திருமணத்துக்கு குபேரனிடம் வாங்கிய கடன் எவ்வளவு?

திருப்பதி எழுமலையான் தனது திருமணத்துக்கு குபேரனிடம் வாங்கிய கடன் எவ்வளவு என்று கேள்வி எழுப்பி பெங்களூரை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு மனு கொடுத்துள்ளார்.

பத்மாவதி தாயாரை காதலித்த எழுமலையான் அவரை திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

வாங்கிய கடனை அடைக்க பக்தர்கள் காணிக்கை கொடுக்க வேண்டும் என்று திருப்பதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாசகத்தின் அடிப்படையில் பெங்களூரை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர், தேவஸ்தானத்திடம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் புராண காலத்தில் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள, குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? அதற்கு எவ்வளவு வட்டி? கடனை அடைக்க பக்தர்களிடம் காணிக்கை பெற்று வரும் ஏழுமலையான் இதுவரை எவ்வளவு கடனை அடைத்துள்ளார்? பாக்கி கடன் எவ்வளவு உள்ளது? குபேரனிடம் வாங்கிய கடனுக்கான அசல் தொகை செலுத்தப்படுகிறதா? வட்டி மட்டும் செலுத்தப்படுகிறதா? அல்லது அசல் மற்றும் வட்டி இரண்டும் சேர்த்து செலுத்தப்படுகிறதா? எழுமலையான் வாங்கிய கடனுக்காக இதுவரை பக்தர்களிடம் வசூல் செய்துள்ள காணிக்கை எவ்வளவு என்பது உள்பட பல கேள்விகள் எழுப்பி இருந்தார்.

பெங்களூர் நரசிம்மமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு கடந்த 6 மாதம் கடந்தும் திருமலை – திருப்பதி தேவஸ்தானம் பதில் கொடுக்கவில்லை.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு மாதத்துக்குள் பதில் கொடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் 6 மாதம் கடந்தும் பதில் கொடுக்காததால், தேவஸ்தானத்துக்கு எதிராக 2 நாட்களுக்கு முன் ஆந்திர மாநில தகவல் அறியும் உரிமை ஆணையத்திடம் நரசிம்மமூர்த்தி புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் கேட்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

கல்சிலைபோல்! கல்சிலைபோல்! - விவேகானந்தர்

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.
ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.
பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.
விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.
அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை - பாகம் 2

பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை - பகுதி 1

"அரசே! கவலைப் படாதீர்கள். இவர்களுக்கு சமமான அர்வுடியவர் இல்லை என்று சொல்லும்படி நான் ஆறு மாதத்திற்குள் மாற்றிக் காட்டுகிறேன். நீங்கள் அதுவரை பொறுமையாக நாளை கணக்கிட்டு கொண்டிருங்கள்" என்றார் உறுதியான குரலில்.

அவ்வுரையை கேட்ட அரசன் மிகவும் மகிழ்ந்தான். சோமசன்மாவுக்கு உபசாரம் செய்தான். அவர் வசத்தில் தன் பிள்ளைகளையும் முறைப்படி ஒப்படைத்தான். தந்தையின் கடமைகளில் ஒரு தலையாய கடமை நிறைவேற்றபட்ட திருப்தி அப்போது உண்டாயிற்று.

சோமசன்மா அரச குமாரர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். முறைப்படி நீதி சாஸ்திரத்தை, "கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி சர்க்கரைக் கட்டியாகிய கல்கண்டாக கொடுப்பதுபோல்" கற்பிக்க எண்ணி பஞ்சதந்திரக் கதையாகக் கூறத் தொடங்கினார்.

"ஓ... ராஜ குமாரர்களே உங்களுக்கு வேடிக்கையான சில கதைகளைச் சொல்லப் போகிறேன். கேளுங்கள் கவனமாக" என்றார்.

"ஆசானே! அதென்ன கதை? சொல்லுங்கள்" என்றார்கள் அவர்கள்.

"நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போவது பஞ்சதந்திரக் கதையாகும் மிகவும் சுவாரசியமாக இருக்கும்" என்றார் அவர் அவர்களின் ஆர்வத்தை தூண்டும் நிலையில்.

"அந்த பெயருக்கு என்ன அர்ச்சம்?" என்று கேட்டான் ஒருவன்.

"பஞ்சதந்திரம் என்றால் ஐந்து தந்திரங்கள் என்று பொருள். அவை மித்திரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்கிரகம், அர்த்த நாசம், அசம்பிரேட்சிய காரித்துவம் என்பன."

"அப்படியென்றால்?" மற்றொருவன் கேட்டான்.

"சொல்லுகிறேன். மித்திரபேதம் என்றால் சினேகத்தைக் கொடுத்துப் பகை உண்டாக்கல். சுகிர்லாபம் என்பது தங்களுக்குச் சமமானவர்களோடு கூடி பகையில்லாமல் வாழ்ந்திருத்தல். சந்திவிக்கிரகம் என்பது பகைவரை அடுத்துக் கெடுத்தல், அர்த்த நாசம் என்பது தன் கையில் கிடைத்த பொருளை அழித்தல். அசம்பிரேட்சிய காரித்துவம் என்பது ஒரு காரியத்தைத் விசாரிக்காமல் செய்தல் என்று அர்த்தம். இக்கதைகளை கேட்டால் இவ்வுலக நடைமுறைகளையும் அதில் உண்டாகும் பிரச்சனைகளைச் சமாளிக்கிற விதங்களையும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

உடனே அரசகுமாரர்கள் ஒரே குரலில் "ஐயா! அவைகளை எங்களுக்கு இப்போதே தெளிவாக விளங்கும்படி சொல்ல வேண்டும்" என்று வேண்டினார்கள்.

கதை என்றாலே காதுகள் சிலிர்க்கும். அத்துடன் தந்திரக் கதைகள் என்றால் உள்ளம்கூடத் துள்ளுமே!

"சொல்லுகிறேன். இக்கதைகளை உங்களுக்கு அறிவில் தெளிவை உண்டாக்குவதாக!" என்று கதையைக் கூற ஆரம்பித்தார்.

பஞ்சதந்திரக் கதைகள் எந்தப் பிரபஞ்சத்தில் இப்படித்தான் பிறந்தன. வளர்ந்தன. இன்றும் அழியா நிலையில் மக்களிடயே மிகுந்த வரவேற்போடு உலா வருகின்றன.

அத்தகைய சுவாரசியம் மிக்க கதைகளை இனி வரும் படைப்புகளில் காண்போம்...

பஞ்சதந்திரக் கதைகள்

நண்பர்களே தினம் ஒரு பஞ்ச தந்திர கதை எழுதலாம் என்று இருக்கிறேன் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன். முதலில் முன்னுரையுடன் துவங்குவோம். இக்கதைகள் மிகவும் பழங்கால வரலாறு கொண்டவை என்றாலும் இப்பொழுதும் சுவை தருவதும், பயன் அளிக்க வல்லதும் ஆகும். இக்கதைகள் சொல்லும் நீதி ஒரு அரசன் அரசு நடத்த தேவையான அனைத்து வழிகளையும் தருகிறது. மொத்தம் (86) கதைகள் இருந்தாலும் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு ஒரே கதையாக அமைகிறது. நான் மிகவும் சிறிய கதைகளை மட்டுமே இங்கு எழுத போகிறேன். இதில் மொத்தம் ஐந்து தந்திரங்களை மையமாக கொண்டு கதை சொல்லப் பட்டுள்ளது. அவை பின் வருமாறு;
  1. மித்திர பேதம் -நட்பை கெடுத்து பகை உண்டாக்குவது
  2. சுகிர்லாப தந்திரம் -தங்களுக்கு இணை ஆனவர்களுடன் கூடி பகை இல்லாமல் வாழ்வது
  3. சந்தி விக்ரகம் -பகைவரை உறவு கொண்டு வெல்லுதல்
  4. லப்தகாணி (அர்த்த நாசம்) -கையில் கிடைத்ததை அழித்தல்
  5. அசம்ரெஷிய காரியத்துவம் - எந்த காரியத்தையும் விசாரணை செய்யாமல் செய்வது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More