Showing posts with label மருத்துவக் குறிப்புகள். Show all posts
Showing posts with label மருத்துவக் குறிப்புகள். Show all posts

ஆன்மீகம் மற்றும் மருத்துவம் கூறும் துளசியின் மகத்துவம் தெரியுமா?

துளசி இலையின் நுனியில் நான்முகனும் அடியில் சங்கரனும் மத்தியில் நாராயணனும் வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. துளசி அனைத்து இலை பூ, வேர்கள், கிளைகள், நிழல் எல்லாம் ஆன்மீகமானவை. பக்தியுடன் துளசியின் இலையை கிருஷ்ணருக்கு அளிப்பவர் அவர் அருகிலேயே வாழ்வர். துளசியின் மண்ணை எடுத்து உடலில் பூசிக்கொண்டு கிருஷ்ணரை வணங்குபவர், ஒவ்வொரு நாளும் நூறுநாள் பூஜை செய்த பயனை அடைவர்.

துளசியின் மருத்துவ குணங்கள்: எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.

உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

நன்றி @அன்புடன் புஷ்பராஜ்

பப்பாளியின் மருத்துவக் குணம்

17_ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.

எளிதில் கிடைக்கக்கூடிய, மிக மலிவான விலையுள்ள பழம் பப்பாளி. மிகவும் இனிக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் வரையான மாதங்களிலும் பப்பாளி வரத்து இருக்கும். பழுக்காத காய்கள் பச்சை நிறத்திலும், நன்கு பழுத்தவுடன் மஞ்சளாகவும் இருக்கும். பழுத்தபின் விதைகள் மிளகு போன்று இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும்.

நல்ல மலமிளக்கியாகவும், பித்தத்தைப் போக்குவதாகவும் உள்ள பப்பாளி சற்றே எண்ணெய்ப் பசையாக உள்ள பழமாகும். இதுவும் உடலுக்குத் தெம்பூட்டும். இதயத்திற்கு நல்லது. மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும். கல்லீரலுக்கும் ஏற்றது. கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறுநீர்க் கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு அருமருந்து பப்பாளி.

பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸாகவும், மீதி ஃபிரக்டோஸ் (பழச் சர்க்கரை) ஆகவும் உள்ளது. பழங்களிலேயே வைட்டமின் ‘ஏ’ சத்து கூடுதலாக உள்ள பழம் பப்பாளி. பழுக்கப் பழுக்க வைட்டமின் ‘சி’ கூடும்.

100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே பழுத்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் ‘சி’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் வைட்டமின் ‘சி’யும் மிக அதிகமாக இருக்குமாம். பப்பாளியில் சிறிதளவு வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நியாசினும் உண்டு.

பச்சைக் காயிலுள்ள பாலில், செரிமானத்திற்கு உதவும் நொதிப் பொருட்கள் (என்சைம்) உள்ளது. இதற்கு ‘பப்பாயின்’ என்று பெயர். இது புரோட்டீனை செரிக்க மிகவும் உதவும். நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்.

பச்சைக்காயை வேண்டுமானால் சாறாக்கிக் குடிக்கலாம். பழுத்த பப்பாளியை அப்படியே உண்ணலாம். இதை சாறாக்கத் தேவையில்லை. அப்படியே சாறாக்கிப் பயன்படுத்த வேண்டுமானால் கொஞ்சம் பால் அல்லது நீர் கலந்து கொள்ளலாம். புத்துணர்ச்சியை ஊட்டக்கூடியது பப்பாளியின் சாறு.

மருத்துவப் பயன்கள்

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. ரத்தச்சோகைக்கு பப்பாளி நிவாரணமளிக்கும். மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது. மேலும், பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் ரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றன.

இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது. தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் அருந்துபவர்களுக்கு உடலில் கழிவுகளே இருக்காது. எனில், நோய்வாய்ப் படுவதற்கும் சாத்தியமில்லை. இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.

பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது. ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும். சிறுநீரகக் கோளாறுகளுக்கும் பப்பாளி மருந்தாகும். மலச்சிக்கலுக்கும், ஆஸ்துமாவுக்கும் பப்பாளி உண்பது நல்லது.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்கவேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும். பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.

கரிசலாங்கண்ணி மூலிகை - மருத்துவ குணங்கள்

கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ‘‘கண்ணிக்காணம்’’ என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.

மஞ்சள் காமாலைக்கு:
கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில் உப்பில்லாப்பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.

மகோதர வியாதிக்கு:
கரிசலாங்கண்ணியைச் சுத்தம் செய்து இடித்துச்சாரெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை பதினைந்து தினங்களுக்குக் குறையாமல் சாப்பிட வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் நிவாரணம் அடையும். உப்பில்லாப்பத்தியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு அடையும். மகோதர வியாதி குணமடையும்.

மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகைக் காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.

ஆஸ்துமா குணமாக:
கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.

சிறுநீர் எரிச்சல், பெண்களின் பெரும்பாடு நோய் நீங்க:
கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

குழந்தைகளின் மாந்த நோய்க்கும், சோகை வீக்கத்திற்கும் கப நோய்க்கும் கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. மிக விரைவில் நோய் நீங்கி ஆச்சரியப்படும் படியான பலனைக் கொடுக்கும்.

பெண்களின் பெரும்பாட்டு நோய்க்கு கரிசலாங் கண்ணிச்சாறு நல்ல பலன் அளிக்கும்.

குழந்தைகளின் சளி நீங்க:
குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

கரிசலாங்கண்ணித்தைலம்:
கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.

இரத்தசோகை நீங்கி நல்ல ரத்தம் உண்டாக:
இரத்தசோகை நோய்க்கு கரிசலாங்கண்ணி ஒரு பங்கும், வெல்லம் இரண்டு பங்கும், எள் ஒரு பங்கு வீதம் தேவைக்கு ஏற்ப சேகரித்து வைத்துக் கொண்டு, வெல்லத்தைப் பாகாக்கி மற்ற இரண்டு பொருள்களையும் பொடி செய்து சேர்த்துக் கிண்டி, கேக் வடிவில் தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்ல ரத்தம் உண்டாகும்; நினைவாற்றல் அதிகரிக்கும்.

கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும்.

தலைமுடி நன்கு வளர:
கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங் கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டிவைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணி இலைச் சூரணமும், ஜாட்டை கரந்தை இலைச் சூரணமும் சமம் கலந்து தேவையான அளவிற்கு வைத்துக்கொண்டு அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இரண்டு மாத உபயோகத்தில் இளநரை மாறி விடும்.

கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்.

தலைப்பொடுகு நீங்க:
கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும். கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும். நரையும் மாறிவிடும்.

பல் உறுதிக்கு!
கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.

பித்தத்தைலம் :
கரிசலாங்கண்ணிச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 500 மில்லி சேகரித்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து இக்கலவையில் சேர்த்து தைலமாய் எரித்து, பதத்தில் வடித்து வைத்துக் கொண்டு தலை முழுகி வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி விடும். நல்ல தூக்கம் வரும். கண் நோய்கள், காது நோய்கள் ஒற்றைத் தலைவலி முதலியன நீங்கிவிடும்.

நரை நீக்கும் தைலம்:
புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும். வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் போட்டு பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் சென்றபின் வடிகட்டி வைத்துக் கொணடு தேவைக்கு தகுந்தாற்போல் வாசனை கொடுக்க ஜாஸ்மின் ஆயில் கலந்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் தலைக்குத் தடவி வந்தால், இளமையில் ஏற்பட்ட நரை மாறி நல்ல கருப்பு நிறமாக வந்து விடும்.

நாள்பட்ட புண் ஆற...
கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.

கே.எஸ். ராமலிங்கம்
நன்றி குமுதம்


மூட்டு வலி (மூட்டு தேய்மானம்) - Health Tips in Tamil

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:
1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்:
மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்:முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.
முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும்.
பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்:
1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்:
* வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.
காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
* கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

- சுரேஷ் குமார்
தமிழ் பிரவாகம்

Health Tips in Tamil

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More