Showing posts with label perarivaalan. Show all posts
Showing posts with label perarivaalan. Show all posts

பேரறிவாளன், சாந்தன், முருகனின் உயிரை பறிகொடுக்க மாட்டோம்: வைகோ

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் உயிரை பறிகொடுக்க மாட்டோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தூக்கு தண்டனைக்கு எதிராகப் போராடும் தமிழக மக்களின் மனநிலைமையைப் பிரதிபலிக்கும் வகையில் கருத்துரிமை களம் அமைப்பின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே மனித நேய மணல் சிற்பம் அமைக்கப்பட்டது.

மனித தலையில் போடப்பட்ட தூக்கு கயிறு அறுந்தது போன்றும், சிங்கத்தின் கையில் தூக்கு இருப்பது போன்றும் அந்த சிற்பம் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

அந்த சிற்பத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரை தூக்கிலிட மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் மாநில அரசோ தமிழக மக்களின் உணர்வுகளுககு மதிப்பு கொடுத்து அந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த பிரமாண்ட மணல் சிற்பம் கடல் நீரிலும், காற்றிலும் அழிந்துவிடலாம். ஆனால் தமிழக மக்களின் மனதில் இருக்கும் உயிர் சிற்பத்தை எதனாலும் அழித்துவிட முடியாது. இலங்கையில் உடன்பிறப்புக்களை பறிகொடுத்தோம். ஆனால் இந்த 3 பேரின் உயிரை பறிகொடுக்க மாட்டோம். அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். மரண தண்டனையை ரத்து செய்ய மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றார்

நடை பயணத்துக்கு அனுமதி மறுப்பு... சீமான் உள்ளிட்ட 1000 பேர் வேலூரில் கைது!

மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி வேலூரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட நடைப் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

தடையை மீறி நடைப்பயணத்தைத் தொடர்ந்த சீமான், இயக்குநர் செல்வமணி, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் தானே முன் மொழிந்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அந்த மூன்று பேரின் குடும்பத்தினரின் வாழ்வில் மீண்டும் விளக்கேற்றி வைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலூர் முதல் சென்னை வரை சீமான் தலைமையில் பரப்புரை நடைபயணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று காலை வேலூர் கோட்டை பூங்காவிலிருந்து சீமானின் நடைப் பயணம் தொடங்கியது. அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் இந்த பேரணிக்கு திரண்டு வந்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகிக்க, இயக்குநர் ஆர்கே செல்வமணி, ஷாகுல் அமீது உள்ளிட்ட நிர்வாகிகள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

அனுமதி இல்லை

வேலூர் நகர எல்லையில் சீமானின் நடைப் பயணம் நெருங்கியபோது, போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். நடைப் பயணத்துக்கு அனுமதி கிடையாது என்றும், மீறி பயணத்தைத் தொடர்ந்தால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் போலீசார் எச்சரித்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசாரும் சீமான் தரப்பும் பேச்சுவார்த்தையில் இறங்கினர். முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிற பேரணி இது என்பதை விளக்கிச் சொல்லியும் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. சில நிமிடங்கள் பேச்சு நடந்தது. ஆனாலும் போலீசார் பிடிவாதமாக இருந்தனர்.

சீமான் கைது

எனவே தடையை மீறி, நடைப் பயணத்தைத் தொடர்ந்தார் சீமான். இதனால் அவரை உடனடியாக கைது செய்து வேனில் ஏற்றினர் போலீசார். அவருடன் வந்த 1000-க்கும் மேற்பட்டவர்களையும் கைது செய்து வேனில் ஏற்றினர்.

முதல் கைது

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு நாம் தமிழர் கட்சி நடத்திய பரபப்புரை நிகழ்வுக்காக சீமான் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

யாரிடமும் உயிர்ப்பிச்சை கேட்கவில்லை, மறுக்கப்பட்ட நீதியைத்தான் கேட்கிறோம்- சீமான்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு மறுக்கப்பட்ட நீதியைத்தான் நாங்கள் கேட்கிறோமே தவிர யாரிடமும் உயிர்ப் பிச்சை கேட்கவில்லை என்று நாம் தமிழர் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத் இடைக்காலத் தீர்ப்பு குறித்து சீமான் கருத்து தெரிவிக்கையில்,

தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. நீதிக்கு கிடைத்த வெற்றி. நாங்கள் யாரிடமும் உயிர் பிச்சை கேட்கவில்லை. மறுக்கப்பட்ட நீதியைத்தான் கேட்கிறோம்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியுடன் திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள். இடைக்கால தடை உத்தரவு, அந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. செங்கொடியின் அர்ப்பணத்திற்கு கிடைத்த வெற்றி.

தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சினையை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று மரண தண்டனையை ரத்துசெய்ய தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.

வெற்றியின் முதல் படி - பேரறிவாளன், சாந்தன், முருகனை தூக்கிலிட 8 வாரங்களுக்குத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

டெல்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோஹித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் வழக்கில் ஆஜராக வந்தனர். மூவரின் வக்கீல்களான துரைசாமி, சந்திரசேகர் ஆகியோரும் அவர்களுடன் வந்திருந்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்களும் குவிந்து விட்டனர்.

வழக்கை விசாரித்த பெஞ்ச், அதை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்து 8 வார இடைக்காலத் தடையை அறிவித்தது.

உற்சாக வெள்ளத்தில் ஸ்தம்பித்தது உயர்நீதிமன்றம்

இதைக் கேட்டதும் வக்கீல்கள் உற்சாகக்குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் உயர்நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த வரலாறு காணாத மிகப் பெரிய வக்கீல்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கூட்டமும் பூரிப்பில் மூழ்கியது.

அனைவரும் பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்து முழக்கமிட்டதால் உயர்நீதிமன்றமே கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போனது.

தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்

தூக்குத் தண்டனை 8 வாரங்குக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தமிழகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இனிப்புகளை வழங்கியும், மகிழ்ச்சி முழக்கமிட்டும் சந்தோஷத்தைப் பகிர்நது கொண்டனர்.

பொதுமக்களும் மகிழ்ச்சி

பொதுமக்களுக்கும் இந்த உத்தரவு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 21 வருடமாக சிறையில் கிட்டத்தட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்தவர்களுக்கு தூக்குத் தண்டனை என்பது இரண்டு தண்டனை கொடுப்பதற்குச் சமம். இது நியாயமற்றது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

மனுவில் கூறப்பட்டிருந்தது என்ன?

முன்னதாக தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் நேற்று வழக்கறிஞர் தடா சந்திரசேகர் ரிட் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுக்களில், 1991-ல் கைது செய்யப்பட்ட நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளோம். எங்களுக்கு தூக்கு தண்டனை விதித்து 1998 ஜனவரியில் தடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை உறுதி செய்து 1999 மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு தமிழக ஆளுநருக்கு நாங்கள் 2 முறை அளித்த கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக 26.4.2000-ல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினோம். எனினும், எங்கள் மனு மீது பல ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், உடனடியாக முடிவெடுக்கும்படி நினைவுபடுத்தி அடுத்தடுத்து கடிதம் எழுதினோம். எனினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பின் இம்மாதம் 12-ம் தேதி எங்கள் கருணை மனுக்களை நிராகரித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வரும் செப்டம்பர் 9-ம் தேதி நாங்கள் தூக்கிலிடப்பட உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இது ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிகமாகும். மேலும், இந்த தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, வாடி வருகிறோம்.

இவ்வளவு நீண்ட காலம் நாங்கள் சிறையில் வாடிய பிறகும்கூட, எங்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது ஒரு குற்றத்துக்கு 2 தண்டனை அளிப்பதாகும். இவ்வாறு தண்டனை அளிப்பது சட்ட விரோதமானதாகும். மேலும், இது வாழ்வதற்குரிய சட்ட ரீதியிலான எங்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.

மேலும், கருணை மனுக்களின் மீது உடனடியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை மனுக்களின் மீதான முடிவுகள் தாமதமானதால் ஏராளமான தூக்கு தண்டனை உத்தரவுகளை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், நாங்கள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பிவிட்டு அதன் முடிவு தெரியாமல் 11 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவித்தோம். வாழ்வோமா, சாவோமா எனத் தெரியாமல் 11 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நாங்கள் தனிமைச் சிறையில் தவித்த தவிப்பும், அனுபவித்த சித்திரவதையும் மரண தண்டனையை விடவும் மிகக் கொடுமையானது.

ஆகவே, 11 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கருணை மனு மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்ததால், எங்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

காப்பாற்ற முடியும்-ராம்ஜேத்மலானி:

முன்னதாக உயர்நீதிமன்றத்திற்கு வந்த ராம்ஜேத்மலானியிடம் செய்தியாளர்கள் வழக்கின் தன்மை குறித்து கேட்டபோது, இது மிகவும் சவாலான வழக்கு. இருப்பினும் திறமையாக வாதாடினால் நிச்சயம் மூவரையும் காப்பாற்ற முடியும். காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

மூவரின் தூக்கை குறைக்க சட்டசபையில் தீர்மானம்; மூவரையும் தூக்கில் போட 8 வாரம் தடை - உயர்நீதிமன்றம்

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்றார்.

இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர்.

இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிரடியாக அவர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரின் விடுதலைக்காக கடுமையாக போராடி வருவோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.


குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் 3 பேரின் தூக்குத் தண்டனையும் ரத்தாகும் வாய்ப்புள்ளது.

மூவரையும் தூக்கில் போட 8 வாரம் தடை

ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், மூவரையும் தூக்கில் போட 8 வாரம் தடை விதித்தது.


3 பே‌ரி‌ன் தூ‌க்கை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி ‌பிரதம‌ர், ஜெயல‌லிதாவு‌க்கு ஒரு ல‌ட்ச‌ம் பே‌ர் கடித‌ம்

பேர‌றிவாள‌ன், சா‌‌ந்த‌‌ன், முருக‌ன் ஆ‌‌கியோ‌ரின் தூ‌க்கு‌த் த‌ண்டனையை ர‌த்து செ‌ய்‌ய‌க் கோ‌ரி சேல‌த்‌தி‌ல் ஒரு ல‌ட்ச‌ம் பே‌ர் ‌பிரதம‌ர், த‌மிழக முதலமை‌ச்ச‌ர், ஆளுந‌ர் ஆ‌கியோரு‌க்கு கடித‌ம் அனு‌ப்பு‌கி‌ன்றன‌ர். மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ரா‌ஜி‌வ்கா‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் தூ‌க்கு‌த் த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு சேல‌ம் ம‌த்‌திய ‌சிறை‌யி‌ல் உ‌ள்ள பேர‌றிவாள‌ன், சா‌‌ந்த‌‌ன், முருக‌ன் ஆ‌‌கியோ‌ரு‌க்கு வரு‌ம் 9ஆ‌ம் தே‌தி த‌ண்டனை ‌நிறைவே‌ற்ற‌ப்பட உ‌ள்ளன. இ‌ந்த தூ‌க்கு‌த் த‌ண்டனையை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி த‌மிழக‌ம் முழுவது‌ம் இர‌யி‌ல் ம‌‌றிய‌ல், ம‌னித ச‌ங்‌கி‌லி, உ‌ண்ணா‌விரத‌ம் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு வகைக‌ளி‌ல் போரா‌ட்ட‌ங்க‌ள் நடைபெ‌ற்று வரு‌கிறது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் 3 பே‌ரி‌ன் தூ‌க்கு‌த் த‌ண்டனையை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், த‌மிழக முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா, ஆளுந‌ர் ஆ‌கியோரு‌க்கு ஒரு ல‌ட்ச‌ம் கடித‌ம் அனு‌ப்பு‌ம் போரா‌ட்ட‌‌ம் சேலத்தில் இ‌ன்று நடைபெ‌ற்று வரு‌கிறது. ஏராளமானோ‌ர் ஒரே நேர‌த்‌தி‌ல் கடித‌ம் எழுது‌ம் ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் ஒரே நேரத்தில் கடித‌ங்க‌ள் அனு‌ப்ப உ‌ள்ளன‌ர்.

மூ்ன்று தமிழர்களை விடுவிக்க டெல்லி ஜந்தர்மந்தரில் 10 பேர் சாகும் வரை உண்ணாவிரதம்

வேலூர் சிறையில் தூக்குக் கயிற்றின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள மூவரைக் காப்பாற்றக் கோரி டெல்லியில், தூக்குத் தண்டனைக்கான மாணவர் அமைப்பு சார்பில் 10 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்த இவர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட யாரையும் தூக்கில் போடக் கூடாது. தூக்குத் தண்டனையை இந்தியாவிலிருந்து ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்த திடீர் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல்-அண்ணா சாலை ஸ்தம்பிப்பு

இதற்கிடையே, சென்னையில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இன்று அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் பெரும் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு இன்று காலை மாணவ, மாணவியர் பெரும் திரளாக கூடினர். அங்கிருந்து ஊர்ர்வலமாக ஆளுநர் மாளிகைக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். ஊர்வலம் போகக் கூடாது என்று அவர்கள் மாணவ, மாணவியரை தடுத்து நிறுத்தினர். ஆனால்அதை மீறி அவர்கள் செல்ல முயன்றதால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் அப்படியே அண்ணா சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

இதநால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

சிங்கள வீரர்களை மன்னித்தது தான் பிரபாகரன் செய்த ஒரே தவறு: சீமான்

சரண் அடைந்த 15 ஆயிரம் சிங்கள் வீரர்களை மன்னித்து அனுப்பியது தான் என் தலைவன் பிரபாகரன் செய்த ஒரே தவறு என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி நேற்றிரவு பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய சீமான் கூறியதாவது,

ஒவ்வொரு நொடியும் உயிர் நொடி தான். இந்திய, இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் கிரிக்கெட் ஆடியபோது மும்பையை தீவிரவாதிகள் தாக்கினர். உடனே பயந்துபோன இங்கிலாந்து அணி இந்தியா பாதுகாப்பான நாடு அல்ல என்று கூறி நாடு திரும்பியது. அதே நேரம் இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் தைரியமாக விளையாடலாம் என்றது மத்திய அரசு. அந்த மாநிலம் நம் தமிழகம் தான்.

போர்க்குற்றவாளியான ராஜபக்சே மீது விசாரணை நடத்தக் கோரி தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதனால் தான் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை அறிவித்து மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறது மத்திய அரசு.

2 ஆண்டுகளாக என் இன மக்கள் காப்பாற்றச் சொல்லி கதறிக் கொண்டிருக்கின்றனர். இனி நாங்கள் யாரிடமும் உயிர் பிச்சை கேட்கப்போவதில்லை. எங்களிடம் தான் உயிர் பிச்சை கேட்பார்கள்.

சரண் அடைந்த 15 ஆயிரம் சிங்கள் வீரர்களை மன்னித்து அனுப்பியது தான் என் தலைவன் செய்த ஒரே தவறு ஆகும். மன்னிப்பது தான் மாண்பு. மரண தண்டனையை ஒழிப்போம், மனித நேயம் காப்போம் என்றார்.

முருகன், சாந்தன், பேரறிவாளனை காக்கக் கோரி நாடாளுமன்றத்தில் திருமாவளவன் முழக்கம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் முழக்கமிட்டார். பின்னர் தூக்கு தண்டனையை எதிர்த்து அவர் வெளிநடப்பு செய்தார்.

மூவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதிய அட்டையை ஏந்தியபடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார் திருமாவளவன்.

அவையின் மையப் பகுதிக்குச் சென்ற அவர் அட்டையை உயர்த்தி பிடித்து மூன்று பேரின் தூக்கு தண்டனையயும் உடனே ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் முழக்கமிட்டார். பின்னர் அவர் வெளிநடப்பு செய்தார்.

வெளியே நிருபர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை மத்திய அரசு உடனே ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும்.
மரண தண்டனை கொள்கையையே மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

சேலத்தில் ரயில் மறியல்:

இந் நிலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

தர்மபுரியில் மனித சங்கிலி:

அதே போல இந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தர்மபுரியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பாமக, மதிமுக மற்றும் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் இதில் கலந்து கொண்டனர்.

முதல்வரை சந்திப்பேன், பேரறிவாளனை மீட்பேன்-தாய் அற்புதம்மாள்:

இந் நிலையில் பேரறிவாளனின் தாயார் நிருபர்களிடம் பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் என் மகனுக்கு தூக்கு என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மகனை தண்டனையில் இருந்து மீட்போம்’. இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிடுவேன் என்றார்.

வேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகனை சந்தித்தார் வைகோ

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வேலூர் மத்திய சிறையில் சந்தித்துப் பேசினார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை உறுதி செய்யும் ஜனாதிபதி அலுவலக உத்தரவு (கருணை மனு ரத்து ) நகல் இன்று வேலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இந் நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று வேலூர் சிறையில் மூவரையும் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக நேற்று பேரறிவாளன் எழுதிய நூலின் இந்திப் பதிப்பு டெல்லியில் வெளியிடப்பட்டது. வைகோ தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர் ஏ.பி.பரதன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ள ராஜீவ் காந்தி கொலை வழக்கு-உண்மை கடிதங்கள் என்ற இந்தி மொழி பெயர்ப்பின் பணியை எழுத்தாளர் சரவணா ராஜேந்திரன் செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் நிருபர்களிடம் வைகோ கூறுகையில்,

மத்திய அரசு நினைத்தால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும். தமிழ்நாட்டு முதல் அமைச்சர் அவர்கள், கருணை உள்ளத்தோடு, தாய் உள்ளத்தோடு இந்த மூன்று உயிர்களையும் காப்பற்ற வேண்டும் என்று கட்சியினரையெல்லாம் கடந்து அனைவரும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

மத்திய அரசு இந்தக் கட்டத்தில் கூட இதைத் தடுத்து நிறுத்த முடியும். எப்படியாவது இந்த மூன்று உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று கோருகிறோம் என்றார்.

முதல்வர் கையில் தான் உள்ளது-பேரறிவாளனின் தந்தை:

இந் நிலையில் இந்த மூவரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, ஜோலார் பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் உண்ணாவிரம் நடைபெற்றது. பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோர் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றனர்.

குயில்தாசன் கூறுகையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரின் உரிரை காப்பாற்றுவது தமிழக முதல்வரின் கையில் தான் உள்ளது. எனது மகனை காப்பாற்றி என்னிடம் ஒப்படைக்குமாறு அவரை வேண்டுகிறேன் என்றார்.

ராஜீவ் கொலையின்போது காங் தலைவர்கள் எங்கே போனார்கள்?!: சீமான் கேள்வி!

நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பேசுகையில், பேரறிவாளனை சிறைச்சாலை ஒரு மனிதனாக மாற்றியிருக்கிறது. அதேசமயம் சிறை பேரறிவாளனை சீர்த்திருத்தவில்லை. சிறையை பேரறிவாளன் சீர்த்திருத்தியிருக்கிறார். வேலூர் சிறை ஒரு கல்லூரியாக மாறியிருப்பதற்கு பேரறிவாளன் தான் காரணம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இதில் தலையிட்டு மூவரையும் மீட்க முயற்சிக்க வேண்டும்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காவல்துறை ஆணையரிடம் போய், என்னைக் கைது செய்ய வேண்டும். எங்கள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார். சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அந்தக் கட்சியினர் பேசாமல் விலகி எங்கள் கட்சிக்கு வந்துவிடலாம்.

நீங்கள் (யுவராஜா) எங்களை எதிர்த்து போராட வேண்டாம். நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களிடம் கேளுங்கள். அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்திற்கு வரும்போது, தன் தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய தலைவியாக இருந்த அம்மையார் இந்திரா காந்தியின் சிலை. காங்கிரஸ் கட்சியின் தலைவியின் சிலை. அய்யா ராஜீவ்காந்தி அவர்களுடைய தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள்.

திரளாக திரண்டு இருக்கிற என் தமிழ் உறவுகள் சாதாரணமான சீமான் நான் என்னுடைய வாகனத்தில் இருந்து இறங்கி இந்த மேடைக்கு வரும்போது கூட என்னை சுற்றி நூற்றுக்கணக்கான தம்பிகள் என்னை பாதுகாப்பாக பத்திரமாக அழைத்து வருவதை நீங்கள் பார்த்தீர்கள்.

பெருமைக்குரிய பெருமகள், இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர் அம்மையார் இந்திரா காந்தி அதுவும் உங்கள் கட்சியின் தலைவி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அந்த தலைவர் வரும்போது, அவரைவிட்டு எங்கே போனீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். அதற்கு பின்னர் சொல்லுங்கள் பேரறிவாளன் உள்பட மூன்று பேரை தூக்கில் போட வேண்டும் என்று.

அன்றைக்கு டாஸ்மாக் கூட இல்லையே...:

எங்கே போனார் அய்யா மூப்பனார். என் தம்பிகள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன் என்று சொன்ன தங்கபாலு எங்கே போனார். ப.சிதம்பரம் போனது எங்கே. ஜெயந்தி நடராஜன் போனது எங்கே. அய்யா ஈவிகேஎஸ் இளங்கோவன் எங்கே போய் நின்று கொண்டிருந்தார். அன்றைக்கு டாஸ்மாக் கூட இல்லையே, எங்கே போனீங்க நீங்க?

யுவராஜ் அவர்களே தன் தலைவனுக்கு அருகே வராமல் தனித்து சாகவிட்ட துரோகத்திற்காக உங்கள் தலைவர்களை முதலில் தூக்கிலிடு. பிறகு என் தம்பிகளை தூக்கிலிட சொல்லுங்கள். ராஜீவ் காந்தி மீது பற்றுக்கொண்டவர் என்று சொல்லுகிறீர்கள். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த நான் சொல்லுகிறேன், இந்திரா காந்தி செத்ததுக்கு மூன்று நாள் என் வீட்டில் சோறு ஆக்கவில்லை. படிக்கிற காலத்தில் அழுது கிடந்தேன். என் தாய் போல நேசித்து வாழ்ந்தேன். உங்களுக்கு இந்திரா காந்தி யார் என்று தெரியுமா?.

என்னை கைது செய்யச்சொல்லி மனு கொடுக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளாக ஆண்ட நீங்கள், சோனியா காந்திக்கு இந்த நாட்டில் வைத்தியம் பார்க்க கூட வசதியில்லாத நிலையில் இந்த நாட்டை வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் பணம் இருக்கு. அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கிறீர்கள். என்னிடம் பணம் இல்லை. என்ன செய்வது. நேராக சுடுகாட்டில் போய் படுத்துவிடுவதா?.

யுவராஜ் அவர்களே, நீங்கள் சரியான ஆளாக இருந்தால், இதேபோல் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள். இந்த இடத்தில் நான் தீக்குளிக்கிறேன். மறுபடி உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 500 ஓட்டு வாங்கி காட்டுங்கள். இல்லையேல் அனைத்து கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைத்து, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி. யுவராஜ் அவர்களே உங்களுக்கு ராகுல்காந்தி மட்டும்தான் தெரியும். மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு என எனக்கு எல்லாம் தெரியும் என்றார் சீமான்.

பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுவிக்க கோரி 1000 பேர் ஊர்வலம்; சத்யராஜ் தொடங்கி வைத்தார்!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி சென்னையிலிருந்து வேலூர் வரை 500 இருசக்கர வாகனங்களில் 1000 பேர் ஊர்வலம் சென்றனர்.

இதனை நடிகர் சத்யராஜ், இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னையில் இருந்து வேலூர் செல்லும் வழி நெடுக பல கிராமங்களில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டனர். மக்கள் இதற்கு பெரும் ஆதரவை அளித்தனர்.

இதுவரை இப்படி ஒரு பெரு முழக்கக் கூட்டத்தை வேலூர் சிறைச்சாலை காவலர்கள் பார்த்ததில்லை எனும் அளவுக்கு உணர்ச்சிப்பூர்வமான ஊர்வலம் இது.

சிறைச்சாலை வந்தடைந்ததும் ஓங்கி முழக்கமிட தொடங்கிய தமிழுணர்வாளர் படையை கண்டவுடன் ஒரு கணம் அதிர்ச்சியுற்றனர் சிறைக் காவலர்கள்.

தாரை தப்பட்டைகளை முழக்கி பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுவிக்க கோரி மீண்டும் மீண்டும் முழக்கங்களை எழுப்பினர்.

பேரறிவாளன், முருகன், சாந்தனை விடுவிக்க கோரி மனித சங்கிலி- வைகோ

ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தனை விடுவிக்கக் கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்திலும், உலகெங்கும் உள்ள தமிழர்கள், உள்ளம் வேதனைத் தீயால் வெந்து கொண்டு இருக்கின்ற நிலையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று இளம் தமிழர்களுடைய உயிர்களை காக்க வேண்டும். அறிவிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையைத் தடுக்க வேண்டும்.

மூன்று தமிழர் உயிர் காக்கும் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்து உள்ளவாறு, 22-ம் தேதி திங்கள் கிழமை மாலை, தலைநகர் சென்னையில் எம்.ஜி.ஆர்.நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. அனைத்து அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், தமிழ் உணர்வாளர்களின் அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள், இக்கூட்டத்தில் பங்கு ஏற்கிறார்கள்.

இன்றைய கால கட்டத்தில் நடைபெறுகின்ற இந்த முக்கியமான கூட்டத்தில், நானும் பங்கு ஏற்கிறேன். கழக தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன். வருகின்ற 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி இணைப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், வணிக பெருமக்கள், சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் மூன்று உயிர் காக்கும் மனித நேயத்தோடு பங்கு ஏற்க இருகரம் கூப்பி வேண்டுகிறேன். குறிப்பாக, தாய்மார்கள் பெருமளவில் பங்கு ஏற்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More