Showing posts with label comedy stories in tamil. Show all posts
Showing posts with label comedy stories in tamil. Show all posts

அன்புச்சிறை! - நகைச்சுவை கதை

“என்னங்க அழறிங்க?”

“இது நமது ஐம்பதாவது திருமண நாள்!”
“அதுக்காக..அழணுமா?
“உணர்ச்சிவசப்படறேன்…அவ்வளவுதான்!”
“ஓ அப்படியா?”
“ஐம்பதாண்டுக் காலமா உன்னுடைய அன்புச் சிறைக்குள்ளே
அடைபட்டுக் கிடக்கிறேன்!”

”திடீர்னு ஏன் சிறை உதாரணம் ஞாபகத்துக்கு வருது!”
”இப்பதான் பேப்பர்லே படிச்சேன். இங்கிலாந்துல மிதக்கும்
சிறைச்சாலைகள் வரப்போகுதாம்!”

அது எப்படி?

”உபயோகப்படாத போர் விமானம் தாங்கிக்கப்பலை
சிறைச்சாலையா மாற்றலாமான்னு பார்க்கறாங்களாம்!”
”எதுக்காக அப்படி?”
”இட நெருக்கடி…அதே நேரம் கைதிகளின் எண்ணிக்கை அதிகம்…
என்ன பண்றது…அதனால கப்பல்ல கைதிகளை வச்சுடறதுன்னு
முடிவு பண்றாங்க”

”எவ்வளவு பேரை அடைக்க முடியும் அதுல?”
”1500 பேர் வரைக்கும் அதுல இருக்க முடியுமாம்!”
”கைதிகள் சுலபமா தப்பிக்க முடியாது!”
”என்னை மாதிரி!”
”என்ன சொல்றீங்க?”

”உனக்கு ஞாபகம் இருக்கா…50 வருஷத்துக்கு முன்னாடி நீயும்
நானும் ஒரு குதிருக்குள்ளே ஒளிஞ்சிருந்தப்போ,
உங்கப்பா நம்மை கையும் களவுமா பிடிச்சுட்டார்…
அப்போ அவர் என்ன சொன்னார்…’’மரியாதையா என் மகளைக்
கல்யாணம் பண்ணிக்கோ! இல்லேன்னா உன்னை 50 வருஷம் உள்ளே
தள்ளிப்புடுவேன்….கல்யாணமா…ஜெயிலா இப்பவே முடிவு
பண்ணிக்கோ’’ன்னார்

நான்…உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதா முடிவு பண்ணிட்டேன்…
அது…அது…அதனால…”

என்ன இது மறுபடியும் அழறீங்க…?

அது வந்து ஒண்ணுமில்ல… அன்றைக்கு நான் ஜெயில்னு முடிவு
எடுத்திருந்தா இன்றைக்கு நான் விடுதலை ஆயிருப்பேன்.
இல்லையா…அதை நினைச்சுப் பார்த்தேன்!


நன்றி
தென்கச்சி.கோ.சுவாமிநாதன்

தெனாலிராமன் கதைகள் - கூன் வண்ணான்

ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் மக்களுக்கு போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தை உட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள். பலர் மாண்டார்கள்.

இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச் சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன் நட்புக் கொண்டான். தகுந்த சமயம் பார்த்து சாமியாரைக் கொன்று விட்டான்.

இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார். ஏன் சாமியாரைக் கொன்றாய் என்று கேட்டார். அதற்குப் போதை மருந்தால் பலர் பைத்தியம் பிடித்து மாண்டனர். ஆகையால் தான் கொன்றேன் என்றான்.

போலிச்சாமியார் தவறு செய்து இருந்தாலும் அவனைக் கொல்ல உனக்கு ஏது அதிகாரம்? அதை என்னிடமல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால் நானே அந்தப் போலிச் சாமியாருக்குத் தக்க தண்டனை கொடுத்திருப்பேன்.

இவ்விஷயத்தில் நீ தன்னிச்சையாக செயல் பட்டதற்கு உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன் என மன்னர் தீர்ப்புக் கூறினார்.

உடனே தன் ஆட்களை அழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குழியை வெட்டி அதில் தெனாலிராமனை கழுத்தளவு புதைத்து யானையை விட்டு தலையை இடறுமாறு பணித்தார்.

அவ்வாறே தெனாலிராமனும் குழியில் கழுத்தளவு புதைக்கப்பட்டான். பின் யானையைக் கொண்டு வர பணியாளர்கள் சென்று விட்டனர்.

அப்போது சிலகழுதைகளை ஓட்டிக்கொண்டு ஒரு கூன் வண்ணான் வந்து கொண்டிந்தான்.

ஒரு மனிதன் பூமிக்குள் கழுத்தளவு புதையுண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின் தெனாலிராமனிடம் வந்து ஐயா, தாங்கள் ஏன் இவ்வாறு புதையுண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான்.

அதற்கு தெனாலிராமன் எனக்கு மிக நீண்ட நாட்களாகவே முதுகு கூன் விழுந்து விட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தேன். நேற்று ஒரு வைத்தியரை ஆலோசனை கேட்டேன். அவர்தான் ஒருநாள் முழுவதும் இவ்வாறு இருந்தால் கூன் நிமிரிந்து விடும் என்று சொன்னார். நான் குழியில் புதையுண்டு ஒருநாள் ஆகப் போகிறது. ஆகையால் மண்ணைத் தோண்டி என்னை மேலே எடு என்றான்.

அதன்படியே கூன் வண்ணானும் மண்ணைத் தோண்டி தெனாலிராமனை மேலே தூக்கி விட்டான். இப்போது தெனாலிராமனைப் பார்த்தான். அவன் முதுகு கூன் இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றான். இதை உண்மை என்று நம்பிய கூன் வண்ணான் அதே குழியில் அவனைக் கழுத்தளவு புதைக்கச் சொன்னான். தெனாலிராமனும் கூன் வண்ணானை அவ்வாறே செய்தான்.

உடனே தெனாலிராமன் அவ்விடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். சிறிது நேரத்தில் பணியாட்கள் யானையுடன் அங்கு வந்தனர். யானையை விட்டு குழியில் புதையுண்ட மனிதனின் தலையை இடறச் செய்தனர். கூன் வண்ணான் தலை சின்னா பின்னமாகியது.

அச்சமயத்தில் தன் அரண்மனை அதிகாரிகளும் போலிச் சாமியாரைக் கொன்றது நியாம்தான் அதனால் தெனாலிராமனைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

அந்நேரத்தில் பணியாட்களும் அங்கு வந்து "தெனாலிராமனின் தலையை யானையை விட்டு இடறிவிட்டோம்" என்று தெரிவித்தனர்.

தெனாலிராமனின் மரணத்துக்கு மன்னர் வருந்திக் கொண்டிருக்கையில் மன¢னர் முன் தெனாலிராமன் தோன்றினான். தெனாலிராமனைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். நீ யானையால் இறந்ததாகப் பணியாட்கள் தெரிவித்தார்களே........ பின் எப்படி உயிரோடு வந்தாய் என்று வினவினார்.

அதற்குத் தெனாலிராமன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான். மன்னரும் அவனுடைய சாமர்த்தியத்துக்கு மனமாரப் பாராட்டி பரிசு வழங்கினார்.

தெனாலிராமன் கதைகள் - கிடைத்ததில் சம பங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.

இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான்.

நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான்.

வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன்
மசியவில்லை.

இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.

அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான்.

ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிதைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேட்ம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான்.

இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத் தெனாலிராமன் "கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு பாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன்.

ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டான்.

உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார்.

அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.

அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கினார்.

தெனாலிராமன் கதைகள் - நீர் இறைத்த திருடர்கள்

ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.

இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.

"அதற்கு என்ன செய்யலாம்?" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.

"வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.

அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.

திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.

பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.

சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.

இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், "நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று பேசிக் கொண்டு சென்றனர்.

அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, "நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!" என்று கூறினான்.

திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.

தெனாலிராமன் கதைகள் - பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.

பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது. அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், "தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, "ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?'' எனக் கேட்டார்.

"அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

"அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, "ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

"பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.

தெனாலிராமன் கதைகள் - தெனாலிராமனின் மறுபிறவி

தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் தீ போல் பரவியது.

அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார்.

இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால் நலம் என்றனர்.

உடனே மன்னர் ராஜகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்ய உத்தரவு விட்டார்.

இதைக்கேட்ட ராஜகுரு நடுநடுங்கினார். நடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது என்றார். அப்படியென்றால் துணைக்கு சில புரோகிதர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார்.

மன்னர் கட்டளையை மீற முடியாத ராஜகுரு பூஜைக்கு ஒத்துக்கொண்டார்.

அமாவாசை அன்று நள்ளிரவு புரோகிதர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூஜை நடத்தினார்கள். ராஜகுரு பூஜையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப் பார்த்து தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில் அழைத்து எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே.......... உன் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது.

இதைப்பார்த்த ராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறி அடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள்.

அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பினார். நடந்தவற்றை நடுக்கத்தோடு கூறினார்.

இதைக் கேட்ட மன்னர் இதற்கு பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தார்.
தெனாலிராமன் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்று பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்.

இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை.

சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்காண வந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக் கட்டும்படி வேண்டினார்.

இதைக்கேட்ட துறவியர், மன்னர் பெருமானே, கவலையை விடுங்கள், பிரம்மராட்சசனை என்னால் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால் தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும் என்றார்.

அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர். ஓ.......... தாராளமாக என்னால் முடியும் என்றார் துறவு.

மன்னர் மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக் காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும் என்றார்.

உடனே துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக் கலைத்தார். நான்தான் தெனாலிராமன். துறவி வேடத்தில் வந்தேன் என்றார்.

இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டார். பின் ஆயிரம் பொன் பரிசளித்தார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More