Showing posts with label Tamil Historical Stories. Show all posts
Showing posts with label Tamil Historical Stories. Show all posts

கல்சிலைபோல்! கல்சிலைபோல்! - விவேகானந்தர்

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.
ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.
பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.
விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.
அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

தெனாலிராமன் கதைகள் - அரசவை விகடகவியாக்குதல் - Tenali Raman Stories

அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான்.

மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர்.

தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னார்.

இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார்.

சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான்.

தத்துவஞானியைப் பார்த்து, "ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?" எனக் கேட்டான்.

அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான்.

அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று.

அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டளை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார்.

Tenali Raman Stories

தெனாலிராமன் கதைகள்! ராஜகுருவின் நட்பு ஏற்படுதல் - Tenali Raman Stories

விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.

தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார்.

அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் "சிஷ்யன் ஆனான். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோள்படியே ராஜகுருவும் அரண்மனையில் வேலையில் சேர்த்து விடுவதாக வாக்களித்தார்.

நான் போய் ஆள் அனுப்புகிறேன். அதன் பின் நீ வா என்று சொல்லி விஜயநகரத்துக்குச் சென்று விட்டார்.

தெனாலிராமன் மிகக் கெட்டிக்காரனாக இருக்கிறான். இவனை மன்னரிடம் சொல்லி அரண்மனையில் விகடகவியாக சேர்த்துவிட்டால் நம் வேலை போய்விடும் என்று எண்ணிய ராஜகுரு தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பவே இல்லை.

தெனாலிராமனும் ராஜகுருவிடமிருந்து ஆள் வரும் வரும் என்று எதிர்பார்த்து பல மாதங்கள் ஓடிவிட்டன. எந்தத் தகவலும் அவனுக்குக்கிட்டவில்லை. ஆகையால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான்.

அதன்படியே மனைவி, மகனுடன் பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து சேர்ந்தான்.
ராஜகுருவை சந்தித்தல்

பலவித இடையூறுகளுக்கிடையே தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தான்.

தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் பதறினார்.

ராஜகுருவே நான்தான் தெனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம். நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொன்னீர்கள். ஆள் அனுப்பிய பின் வா என்றீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து ஆள் வராததால் தான் நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் சொல்லி அரசபையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான்.

உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா...... மரியாதையாக வெளியே போ...... இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார்.

வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். காளி மகாதேவியைத் துதித்தான்.

தொடரும்......
Tenali Raman Stories

புதுமைப்பித்தனின் சிறுகதை - பால்வண்ணம் பிள்ளை

இக்கால இலக்கிய வகைகளுள் மிக முக்கியமானவை இரண்டு; ஒன்று நாவல், மற்றொன்று சிறுகதை. இவ்விருவகை இலக்கியங்களும் ஐரோப்பியர் வருகையால் நகக்குக் கிட்டியவை எனலாம். இரண்டாவதான சிறுகதை இலக்கியம் தனது செம்மாந்த பயணத்தை வ.வே.சு. ஐயரில் தொடங்கியது எனலாம். இதன் உயர்ந்தபட்ச வளர்ச்சியில் புதுமைப்பித்தனுக்கு மிக முக்கிய இடமுண்டு. அவர் தமிழ் சிறுகதையின் 'மன்னன்' என அழைக்கப் பெறுகிறார். அவருடைய கதைகளில் சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகளும் எடுத்துப் பேசப்பட்டுள்ளன. அவற்றைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புது அனுபவத்தைக் கொடுக்கும் கதைகளாகும். எளிய நடை, திரண்ட கருத்து என அவரது சிறுகதைகள் அனைத்துமே சிறப்பு மிக்கவை. நாம் அனைவரும் புதுமைபித்தனின் கதைகளை படித்துப் பயன்பெற வேண்டும். அதன் தொடக்கமாக 'பால்வண்ணம் பிள்ளை' என்னும் ஒரு சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பால்வண்ணம் பிள்ளை

பால்வண்ணம் பிள்ளை கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா. வழக்கையே தஸ்தாவேஜிக் கட்டுகளாகவும் அதன் இயக்கமே அதட்டுதலும் பயமுமாகவும் அதன் முற்றுப்புள்ளியே தற்பொழுது 35 ரூபாயாகவும் அவருக்கு இருந்து வந்தது. அவருக்குப் பயமும் அதனால் ஏற்படும் பணிவும் வாழ்கையின் சாரம். அதட்டல் அதன் விதி விலக்கு.

பிராணி நூல், மிருகங்களுக்கு, முக்கியமாக முயலுக்கு நன்கு கால்கள் என்று கூறுமாம். ஆனால் பலவண்ணம் பிள்ளையை பொறுத்தவரை அந்த அபூர்வப் பிராணிக்கு மூன்று கால்கள்தான். சித்த உறுதி, கொள்கையை விடாமை, அம்மாதிரியான குணங்களை எல்லாம் படை வீரனிடமும் சத்தியாக்கிரகிகளிடமும் இருந்தால் பெருங்குனங்களாக கருதப்படும். அது போயும் போயும் ஒரு கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவிடம் தஞ்சம் புகுந்தால் அசட்டுத்தனமான பிடிவாதம் என்று கூறுவார்கள். (அதாவது முயலுக்கு மூன்று கால் என்று சொல்லும் ஒரு குணம்)

பால்வண்ணம் பிள்ளை ஆபீசில் பசு. வீட்டிலோ ஹிட்லர். அன்று கோபம். ஆபீசில் இருந்து வரும்பொழுது ஹிட்லரின் மீசை அவருக்கு இல்லாவிட்டாலும் உதடுகள் துடித்தன. முக்கியமாக மேல் உதடு துடித்தது. காரணம், ஆபீசில் பக்கத்து குமச்தாவுடன் ஒரு சில பூசல். இவர் மெக்ஸிகோ தென் அமெரிக்காவில் இருக்கிறது என்றார். இவருடைய நண்பர் பூகோள சாஸ்திரம் வேறு மாதிரி கூறுகிறது என்றார். பால்வண்ணம் பிள்ளை தனது கட்சியை நிரூபிப்பதற்காக வெகு வேகமாய் வீடிற்கு வருகிறார்.

தொடரும்.........

நன்றி மீண்டும் வருக
பிழை ஏதும் இருப்பின் தொடர்பு கொள்க rajkumareco@gmail.com


வலைப்பூ நண்பர்கள் குழுவில் இணைந்த நண்பர்கள் விஜயராஜா, ராஜ்குமார் சாரதி, அருண் சேவியர், பார்த்த சாரதி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னை ஊக்கப்படுத்தும் வகையில் என்னுடைய "லைவலி தீர பத்து ஆலோசனைகள்" என்னும் பதிப்புக்கு கருது தெரிவித்த நண்பருக்கு நன்றி..

தெனாலிராமன் கதைகள்! - காளி மகாதேவியின் அருள் கிடைத்தல்

நண்பர்களே இன்று முதல் தெனாலி ராமனின் நகைச்சுவை கதைகளை இங்கு தொகுத்து வழங்க போகிறேன். அனைவரும் தங்களின் ஆதரவை கருத்துக்கள் மூலமாக தெரிவிக்கவேண்டும்.

என்னுடைய இந்த முயற்சியை பெரிதும் ஆதரித்து வலைப்பூ நண்பர்கள் குழுவில் இணைந்த என்னுடைய நண்பர்கள் பாபு, நாராயணன், முரளி, பாட்டில் மணி, ஜேகே, கௌரி ஆகியோருக்கு நன்றியை தேரிவித்து கொள்கிறேன்


தெனாலிராமன் வரலாறு:

சுமார் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.

சிறு வயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை.
சிறு வயதிலேயே விகடமாகப் பேசுவரில் வல்லமை பெற்றான். அதனால் அவன் பிற்காலத்தில் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான்.

காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். பின் வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான்.

அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார்.

காளி மகாதேவியின் அருள் கிடைத்தல்

அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. அதனால் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலை விரித்தாடியது.

அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்ய தொடங்கியது. ஆறு, ஏரி, குளம், குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன.

சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்துள்ளது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை வாயாரப் புகழ்ந்து அவரை வணங்கி ஆசி பெற்றனர்.

இதை பார்த்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்? என வினவினார்.

அதற்கு தெனாலிராமன் "மழை பெய்வதும் பெய்யாமல் போவதும் இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன் தங்கள் மகிமையால்தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். காக்கை உட்கார்ந்ததும் பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதை பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததனால் தான் பனம் பழம் விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலவே இவ்வூர் மக்கள் செயலும் இருந்ததால் தான் சிரித்தேன்" என்றான் தெனாலிராமன்.
இதைக் கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து அவன் மேல் கோபப்படவில்லை. தம்பி உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப் பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய் என்று நல்லாசி கூறினார்.

இதைக்கேட்ட தெனாலிராமன் காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தான். அவளின் திருஉருவத்தைக் காண பலவாறு வேண்டி தவம் இருந்தான். கடைசியில் தெனாலிராமன் முன் தோன்றினாள் காளிதேவி. அவளது உருவத்தைப் பார்த்துப் பயப்படுவதற்குப் பதிலாக பலமாக சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்த காளிதேவி, என் கோர உருவத்தைப் பார்த்து எல்லோரும் அஞ்சுவார்கள். நீயோ பலமாகச் சிரிக்கிறாய்? ஏன் என்று வினவினாள்.

அதற்கு தெனாலிராமன் எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. அப்படியிருக்க உனக்கு ஆயிரம் தலை உள்ளது. ஆனால் கைகள் இரண்டே பெற்றுள்ளாய். உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன். அதனால் எனக்கு சிரிப்பு வந்தது என்றான். இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்து விட்டாள்.

பின் மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுத்திகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும் போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன் எனக்கூறி மறைந்தாள் காளிதேவி.

தொடரும்.....
நன்றி மீண்டும் வருக
பிழை ஏதும் இருப்பின் தொடர்பு கொள்க rajkumareco@gmail.com

தமிழக வரலாறு

தமிழ்நாடு ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.

பாண்டியர்களுடைய காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.


கி.பி 1 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை

முற்காலச் சோழர் கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்..


கி.பி 4 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகின்றது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது. இக்காலகட்ட பகுதியில் (கி.பி. 300- கி.பி. 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


கி.பி 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிஸ்ஸா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது. இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, ஜாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.


14 ஆம் நூற்றாண்டு

14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316ல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இஸ்லாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இஸ்லாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். ஹம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விஜய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.

ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விஜயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது.தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.

இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.


17 ஆம் நூற்றாண்டு

1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீர பாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.


20 ஆம் நூற்றாண்டு

1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராஸ் மாகாணம் மதராஸ் மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராஸ் மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராஸ் மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராஸ் மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்னாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1968இல், மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


நன்றி: தமிழ் விக்கிபீடியா

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More