அன்னக்கிளிக்காக மேசையில் தாளம்போட்டுக் காட்டினேன்! - இளையராஜா

அன்னக்கிளி பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் மச்சானைப் பார்த்தீங்களா பாட்டுக்கு மேசையில் தாளம் போட்டுக் காட்டினேன். அவர் வாய்ப்புத் தந்தார் எனறார் இளையராஜா.

சஞ்சய், நந்தினி ஜோடியாக நடிக்க சுப்பு சுஜாதா இயக்கிய 'தாண்டவக் கோனே' படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.

பிரசாத் லேப் தியேட்டரில் இசையை வெளியி்ட்ட பின் அவர் பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே மைக் பாதியில் கட்டாகிவிட்டது.

உடனே மைக் இல்லாமல் பேச ஆரம்பித்தார் ராஜா. மீண்டும் மைக்கை சரி செய்து அவரிடம் கொடுத்தபோது, அதை வாங்க மறுத்த ராஜா, மைக் இல்லாமலேயே கணீரென்று பேச ஆரம்பித்துவி்ட்டார்.

அன்னக்கிளி படத்துக்கு வாய்ப்பு பெற்றது எப்படி என அவர் சுவாரஸ்மாக விளக்கினார். அவர் பேசுகையில், "புதுசா வருபவர்களை ஊக்குவிப்பது என் சுபாவம். ஆரம்ப காலங்களில் நானும் சிரமப்பட்டேன்.

எனக்காக என் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் சினிமா கம்பெனிகள் படியேறி வாய்ப்பு கேட்டு அலைவார். எங்கேயாவது சிறிய சினிமா கம்பெனி போர்டு தொங்கினால் கூட அங்குபோய் என்தம்பி நல்ல மியூசிக் போடுவான். கேட்டுப் பாருங்க என்பார்.

பிறகு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மாதிரி பாடகர்கள் மற்றும் ஆர்கெஸ்ராவோடு போய் வாய்ப்பு கேட்க ஆரம்பித்தோம். தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் உட்கார வைத்து பாடி காட்டுவோம். யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஆனால் எந்த ஆர்கெஸ்ட்ராவும் இல்லாமல் பஞ்சு அருணாசலத்துக்கிட்ட 'மச்சானை பார்த்தீங்களா மலைவாழ தோப்புக்குள்ளே' என்ற பாட்டை பாடி மேஜையில் தாளம் போட்டு காட்டினேன். அவர் எனக்கு உடனே வாய்ப்பு கொடுத்தார்.

இளையராஜா கிட்ட திறமை இருக்குன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க என்று அவரிடம் கேட்டவர்களிடம், 'நான் கண்டுபிடிக்காவிட்டாலும் பெரிய இசையமைப்பாளராக வந்திருப்பார். காரணம் அவர்கிட்ட திறமை இருக்கு,' என்றார்.

இந்த படத்தின் இயக்குநர் சுப்புசுஜாதாவும் அப்படித்தான். அவரிடம் திறமை இருக்கிறது. அந்த திறமைக்கும் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்," என்றார்.

விழாவில் நடிகர்கள் சம்பத், சுப்பு, தயாரிப்பாளர் பிரபாகர் சீனிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More