skip to main |
skip to sidebar
11:46 AM
ரா: அரசகுமாரன்
தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், முதன்முறையாக அனைத்து முக்கியக் கட்சிகளும் தனித் தனியே தேர்தலை சந்திக்கவுள்ளன. இதனால் ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலமும் வெளியே தெரியப் போகிறது.
திமுகவும் அதிமுகவுக்கும் மாறி மாறி காங்கிரஸ் கட்சியுடனும் பாமகவுடனும் கூட்டணி வைப்பது வாடிக்கை. காங்கிரசுக்கு வாடிக்கையே இன்னொரு கட்சியின் மீது ஏறி சவாரி செய்வது தான். பாமகவின் வாடிக்கை தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுவது.
நடிகர் விஜய்காந்தின் தேமுதிக மக்களுடன் தான் கூட்டணி என்று உலக நியாயம் எல்லாம் பேசிவிட்டு கடைசியில் அதிமுகவுடன் கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்தது.
மதிமுகவைப் பொறுத்தவரை அந்தக் கட்சியை தேர்தலுக்குத் தேர்தல் இடப் பங்கீட்டில் ஏமாற்றுவதையே ஒரு வேலையாக வைத்துள்ளன திமுகவும் அதிமுகவும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை எப்போது யாருடன் எதற்காக கூட்டணி சேருவார்கள், எதற்காக விலகுவார்கள் என்பது அவர்களுக்கே சரியாகத் தெரியாது.
சின்னச் சின்னக் கட்சிகளைப் பொறுத்தவரை யார் அதிக சீட் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி சேர்வார்கள். பாஜகவைப் பொறுத்தவரை ஒரு காலத்தில் அவர்களை கூட்டணியில் சேர்க்க திமுக, அதிமுக இடையே போட்டா போட்டி நிலவியது. ஆனால், இப்போது அந்தக் கட்சியை எவ்வளவு தூரத்தில் வைத்திருப்பது என்பது கடும் போட்டி நிலவுகிறது.
இது தான் தமிழகத்தில் இதுவரை நடந்து வந்த கதை.
ஆனால், 'உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக' என்பது மாதிரி இந்த முறை காங்கிரசை நடுத் தெருவில் விட்டுவிட்டது திமுக. வழக்கமாக திமுகவால் கைவிடப்படுவோர் அதிமுகவால் கைதூக்கி விடப்படுவதும், அதிமுகவால் கைவிடப்பட்டோர் திமுகவிடம் சரணடைவதும் வழக்கம்.
இந்த முறை அது நடக்கவில்லை. காங்கிரசுக்கு உதவ யாரும் இல்லை. சரி, தேமுதிகவின் முதுகில் ஏறியாவது கங்காரு பயணம் போகலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த சில முயற்சிகளும் படுதோல்வி அடைந்துவிட்டன. இவர்களுக்காக தேர்தல் வேலை பார்த்துவிட்டு, அவர்களிடம் திமுகவும் அதிமுகவும் பட்ட அவமானங்களை மனதில் கொண்டு, காங்கிரஸை உடன் சேர்க்க மறுத்துவிட்டார் விஜய்காந்த்.
ஆக திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இந்தத் தேர்தலில் தனித் தனியே களம் காண்கின்றன. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை இன்னும் அதிமுகவுடன் இடப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். இது அடுத்த மாதம் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கா அல்லது 2014 மக்களவைத் தேர்தலுக்கா என்பது தெரியவில்லை. அவ்வளவு சாவகாசமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சில மாவட்ட நிர்வாகிகள், மாநிலத் தலைவர்கள் அதிமுகவிடம் பணிந்து போவதை கண்டு சகிக்காமல், தங்கள் மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அப்படி ஏதும் இதுவரை சலசலப்புகள் இல்லை. அதிமுக தருவதை தா.பாண்டியன் வாங்கிக் கொள்வார் போலிருக்கிறது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிமுக கூட்டணியை விட்டு வெளியே வந்தால், இந்திய கம்யூனிஸ்டும் கடுமையான நிலையை எடுக்க வேண்டி வரலாம். கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் எடுப்பாரா என்பது தெரியவில்லை.
தேமுதிகவையும் அதிமுகவையும் சட்டமன்றத் தேர்தலில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிய அதிபுத்திசாலி பத்திரிக்கையாளர் இந்த முறையும் கூட்டணியைக் காக்க முயன்றதாகவும், ஆனால், அவரது யோசனையை அதிமுக தரப்பு நிராகரித்துவிட்டதாகவும் தெரிகிறது.
இதனால் அதிமுகவை விட அந்த அதிபுத்திசாலி மீது தான் அதிக கடுப்பில் இருக்கிறார் விஜய்காந்த் என்கிறார்கள்.
அதிமுகவை முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டைலிலேயே கையாண்டும் காட்டிவிட்டார் விஜய்காந்த். அதாவது, தங்களுடன் இடப் பங்கீடு பேச்சு நடத்த தேமுதிக போயஸ் தோட்டத்தில் வந்து வரிசையில் நிற்க வேண்டும் என்று அதிமுக நினைக்க, தேவைப்பட்டால் நீங்கள் தான் எங்களை அழைக்க வேண்டும் என்றரீதியில் பேச்சுவார்த்தைக்கே வரவில்லை தேமுதிக.
இது அதிமுகவுக்கு தேமுதிக தந்த முதல் ஷாக். இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான முக்கிய பதவிகளுக்கெல்லாம் வரிசையாக வேட்பாளர்களை அறிவித்துவிட்டால், விஜய்காந்த் ஓடி வருவார் என்று நினைத்து ஜெயலலிதா பட்டியலை வெளியிட்டுக் கொண்டே போக, அது குறித்து ஒரு கருத்து கூட தெரிவிக்காமல் அமைத்து காத்து அடுத்த 'நோஸ்-கட்' தந்தார் விஜய்காந்த்.
இந் நிலையில் தேமுதிகவின் அமைதி அதிமுகவுக்கு கோபத்தைத் தர, அடுத்தடுத்த பட்டியல்களையும் அதிமுக வெளியிட, தடாலடியாக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டார் விஜய்காந்த்.
அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம் என்றோ, தனித்துப் போட்டியிடுகிறோம் என்றோ ஒரு அறிக்கை விட விடவில்லை விஜய்காந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒன்னுமே நடக்காதது போல தடாலடியாக நடந்து கொள்வது வழக்கமாக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டைல். ஆனால், அதே பாணியில் செயல்பட்டு அந்தக் கட்சிக்கே ஷாக் தந்துள்ளார் விஜய்காந்த்.
இப்படியாக இடதுசாரிகள் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தலில் 7 முனைப் போட்டி உருவாகியுள்ளது. இந்த முக்கியக் கட்சிகள் தவிர்த்து புதிய தமிழகம், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், கொங்கு இளைஞர் பேரவை, பாஜக ஆகியவையும் உள்ளன. இதில் பாஜகவும் கொங்குநாடு முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்துள்ளன. இதையும் கணக்கில் சேர்த்தால் '8 பிளஸ்' முனைப் போட்டி உருவாகியுள்ளது எனலாம்.
இடதுசாரிகளும் தனியே வந்தால் '9 பிளஸ்' முனைப் போட்டி உருவாகும்.
இதன்மூலம் தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின், கூட்டணி இல்லாத ஒரு தேர்தலாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதனால் ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலமும் வெளியே தெரியப் போகிறது.
12:27 PM
ரா: அரசகுமாரன்
தனது கணவரைக் கொன்ற ராஜபக்சேவைக் கைதுசெய்து விசாரித்து தண்டனை வழங்கக் கோரி நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணத் தளபதியான கர்ணல் ரமேஷின் மனைவி வழக்குத் தொடர்ந்துள்ளார்.அவரது சார்பில் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் இந்த வழக்கைப் பதிவு செய்தார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்து தங்கியுள்ள ராஜபக்சே, இந்த வழக்கைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இலங்கைத் தரப்பும் இந்த திடீர் வழக்கால் பீதியடைந்துள்ளது.
ரமேஷின் மனைவி அளித்துள்ள வழக்கில், இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சிப் படத்தில், ரமேஷ், இலங்கைப் படையினரால், அடையாளம் தெரியாத இடம் ஒன்றில் வைத்து விசாரணை செய்யப்படும் காட்சி, அவர் கொல்லப்பட்டதன் பின்னர் மற்றும் ஒரு தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அவரது உடலை மனைவி அடையாளம் காட்டியமை ஆகியவை சாட்சியங்களாக் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் முப்படைகளுக்கும் தளபதி என்ற அடிப்படையில் அந்த நாட்டின் அதிபரான ராஜபக்சவே ரமேஷின் கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவரே போர்க்குற்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு, இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக வெளியிட்ட அறிக்கை. அதில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல், தாக்கப்பட்ட மற்றும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கணக்கு காட்டப்பட்டாத இன்னும் 140 ஆயிரம் பொதுமக்களின் உயிரிழப்பு என்பன கூடுதல் சாட்சியங்களாக இணைக்கப்பட்டுள்ளன.
5:59 PM
ரா: அரசகுமாரன்
சொந்த மகனைப் போல என்மீது பாசம் காட்டினார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார்.
சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஜெயலலிதாவுடனான தனது சந்திப்பு குறித்து அவர் பேசுகையில், "அம்மா என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன்.
அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம். சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க அம்மா!," என்று கூறியுள்ளார்
திரையுலக விழாவில் எதிர்த்துப் பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரை மிரட்டியதாகக் கூறப்பட்டது குறித்த கேள்விக்கு, "ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும் என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்!," என்று கூறியுள்ளார்.
என் சாவுக்கு கூடும் கூட்டம்....
மேலும் அவர் கூறுகையில், "எனக்கு இப்போ 40-வயசாகுது. இன்னும் 20-வருஷம் உயிரோட இருப்பேனானுகூடத் தெரியாது. ஒவ்வொரு மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், அவன் சாவுக்குக் கூடுற கூட்டத்தில்தான் தெரியும்னு சொல்வாங்க. என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜீத்குமார் யார்னு நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்," என்று தெரிவித்துள்ளார்.
12:21 PM
ரா: அரசகுமாரன்
மங்காத்தா தண்ணி பார்ட்டியில் சோனாவை பலாத்காரம் செய்துவிட்டார்கள் என ஊரெங்கும் பேச்சாய் கிடப்பது, படத்தின் நாயகன் அஜீத்தை வருத்தப்பட வைத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது மங்காத்தா மூலம் அஜீத்துக்கு.
ஆனால் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த இயக்குநர் வெங்கட் பிரபு, அவர் தம்பி பிரேம், படத்தில் நடித்த மகத், வைபவ் என எல்லோருமே மது விருந்து கொண்டாடிய லட்சணம், படத்தின் வெற்றிக்கே கரும்புள்ளி போலாகிவிட்டதே என பெரிதும் வருத்தப்படுகிறாராம் படத்தின் ஹீரோவான அஜீத்.
ஏற்கெனவே ஜோசியம், ஜாதகம் போன்றவற்றில் ஏக நம்பிக்கை கொண்டவர் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பார்ட்டியில் அஜீத்தும் கலந்து கொண்டார் என்றாலும், அவர் வந்த வேகத்தில் எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.
'தல' போனபிறகுதான், தண்ணியில் கவிழ்ந்து தலை கால் புரியாமல் சோனா பலாத்காரம் வரை போய்விட்டதாம் நிலைமை. அடுத்தநாள் சோனா போலீசில் புகார் கொடுத்த பிறகுதான் விவரம் தெரிய வந்ததாம் அஜீத்துக்கு. விளைவு, மதுவிருந்து வைத்தவர், அதில் அத்துமீறியவரின் நண்பர் என அனைவரையும் கூப்பிட்டு, 'என்னங்க இது... தல தலன்னு சொல்லி தல குனிய வச்சிட்டீங்களே... இனி இதை மங்காத்தா பார்ட்டின்னு வெளிய சொல்லாதீங்க," என்று சொன்னதாக கிசுகிசுக்கிறார்கள்.
'பெரிய நட்சத்திரங்களுக்கு வரும் வழக்கமான சங்கடங்களில் இதுவும் ஒன்று. ஆனா ரசிகர்களுக்கு 'தல'யைப் பத்தி தெரியும்... விடுங்க', என்கிறார்கள் அஜீத்துக்கு நெருக்கமானவர்கள்!
11:24 AM
ரா: அரசகுமாரன்
போர்க்குற்றம் புரிந்த ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி விசாரணை நடத்தித் தண்டிக்க வேண்டும். தமிழ் ஈழம் அமைக்க பொது ஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடி பிரமாண்ட பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
தமிழ் ஈழக் கொடி, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய படம், மூன்று தமிழர் உயிரைக் காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த இளம் பெண் செங்கொடி ஆகியோரின் புகைப்படங்களைக் கையில் ஏந்தியபடி பல ஆயிரம் தமிழர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்து வந்து இவர்கள் இதில் கலந்து கொண்டனர். ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 18வது கூட்டம் நடைபெற்ற வேளையில் நடந்த இந்தப் பிரமாண்டப் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ்சைச் சேர்ந்த மேயரான ஸ்டீபன் கட்டிக்னான் கூறுகையில், எனது தொகுதியில் 30 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதற்காகவே நான் இங்கு வந்தேன் என்றார். பேராசிரியர் ஜான் நீல்சன் என்பவர் கூறுகையில், இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலை குறித்து மனித உரிமைக் கவுன்சில் விரிவாக விசாரிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும் என்றார்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் விராஜ் மெண்டிஸ். இவர் ஒரு சிங்களர் ஆவார். தமிழர்களின் மனித உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தருபவர். நீண்ட காலமாக தமிழர்களின் போராட்டத்தோடு பங்கேற்றும் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனைச் சேர்ந்த கந்தையா ராஜ மனோகரன் என்பவர் கூறுகையில்,
இலங்கை அரசின் போர்க்குற்றம் பற்றி சர்வதேச அளவிலான சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினார். சுதந்திர தனித்தமிழ் ஈழ விடுதலைக்காக, தாங்கள் போராடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகள் இதுவரை காணாத அளவில் பெரும் திரளான தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம், ரயில், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் திரண்டு வந்திருந்தனர்.
11:07 AM
ரா: அரசகுமாரன்
ஐ.நா.: ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்துள்ள ராஜபக்சேவை, ஐநா. கூட்டத்தைத் தவிர வேறு எங்கும் போக வேண்டாம். நியூயார்க்கை விட்டு வெளியேற வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் எங்கும் போக முடியாமல் நியூயார்க்கோடு முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ராஜபக்சே.
ராஜபக்சேவுக்கு இலங்கையை விட்டு எங்கும் சுதந்திரமாக இருக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து சென்ற அவர் லண்டனில் மிகப் பெரிய தமிழர் எதிர்ப்பைச் சந்தித்தார்.மேலும் அவர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் போன வேகத்தில் அவர் நாட்டுக்கு ஓடி வர வேண்டியதாயிற்று.
இந்த நிலையில் தற்போது ஐநா. கூட்டத்தில் பேசுவதற்காக வந்துள்ள ராஜபக்சேவை, நியூயார்க் நகரை விட்டு வெளியேற வேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனராம். வெளியேறினால் போர்க்குற்ற வழக்கில் சிக்கிக் கைதாக நேரிடலாம் என்றும் அவருக்கு எச்சரிக்கப்பட்டுள்ளதாம்.
ஐநா. கூட்டத்திற்கு வருவதற்கு மட்டும்தான் உரிய பாதுகாப்பு தர முடியும். மாறாக பிற இடங்களுக்குப் போவதாக இருந்தால் அந்தப் பாதுகாப்பு தர முடியாது என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் நியூயார்க்கைத் தவிர வேறு எங்கும் போக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ராஜபக்சே.
அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் உடையவர் ராஜபக்சே. இதனால் ஏற்பட்ட உடல் நலப் பாதிப்புக்கும் அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார்.