ஜன் லோக்பால் மசோதாவை ஏற்பதாக பிரதமர் அறிவிப்பு-அன்னா தரப்புடன் பேச மத்தியஸ்தராக பிரணாப் நியமனம்


லோக்பால் மசோதா விவகாரத்தில் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதாகவும், அன்னா குழு உருவாக்கிய ஜன் லோக்பால் மசோதாவை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததையடுத்து அரசுத் தரப்புடன் பேச்சு நடத்த அன்னா ஹசாரே ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து மத்திய அரசின் சார்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அன்னா ஹசாரே தரப்புடன் பேச்சு நடத்தவுள்ளார்.

பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்த 3 பேர் குழுவை அன்னா ஹசாரே நியமிக்கவுள்ளார். இரு தரப்பினரும் விரைவில் பேச்சுவார்த்தையை துவக்கவுள்ளனர்.

அன்னா தொடர்ந்து இன்று 8ம் நாளாக ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். பிரதமர் அல்லது ராகுல் காந்தியுடன் மட்டும் தான் லோக்பால் மசோதா குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அன்னா ஹஸாரே நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானை பிரதமர் மத்தியஸ்தராக நியமித்தால் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைவோம் என்று அன்னா இன்று காலை தெரிவித்தார். பேச்சுவார்த்தையை உடனே துவங்க நாங்கள் திறந்த மனதுடன் தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார், அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோருடன் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார். (அன்னா ஹஸாரே, சரத் பவார், விலாஸ்ராவ் தேஷ்முக், பிரிதிவிராஜ் சவாண் ஆகியோர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

இக் கூட்டத்தையடுத்து ஹசாரே மற்றும் அவரது குழுவினருடன் பேச்சு நடத்த விலாஸ்ராவ் தேஷ்முக்கை மத்திய அரசு நியமித்தது.

அதே நேரத்தில் அன்னா தரப்பில் அரவிந்த் கெஜரிவாலுடன் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தைகளை இன்று காலை ஆரம்பித்தார்.

அன்னாவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று சல்மான் கேட்டுக் கொண்டார். அப்போது, பிரதமர் உறுதியளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் என்று கெஜரிவால் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து அன்னா ஹசாரேவுக்கு பிரதமர் ஒரு அவசர கடிதம் அனுப்பினார்.

அதில், நாம் எல்லோருமே ஊழலுக்கு எதிரான போரில் ஒருங்கிணைந்து செல்வோம். நானும் ஊழலுக்கு எதிரானவனே. லோக்பால் மசோதா விவகாரத்தில் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதாக தனிப்பட்ட முறையில் உறுதியளிக்கிறேன்.

இதனால் உண்ணாவிரதத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். ஜன் லோக்பால் மசோதாவை உடனடியாக நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பத் தயாராக உள்ளேன்.

சபாநாயகர் அனுமதிக்கும்பட்சத்தில் உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவும் தயாராக உள்ளேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இதையடுத்து அரசுத் தரப்புடன் பேச்சு நடத்த அன்னா ஹசாரே ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அன்னா தரப்புடன் பேச்சு நடத்த பிரணாப் முகர்ஜியை நியமித்து பிரதமர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, அன்னாவின் சார்பில் 3 பேர் கொண்ட குழு பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தும் என்று அரவிந்த் கெஜரிவால் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வரும் முன் அதை அனைத்துக் கட்சிகளும் கொண்ட நிலைக் குழுவுக்கு அனுப்பி, விவாதித்து, அனுமதி பெற்று பின்னர் சபாநாயகரின் அனுமதி கிடைத்த பின்னரே அதை சமர்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், ஜன் லோக்பால் மசோதாவை இப்போது அரசு ஏற்றுக் கொண்டாலும் நாடாளுமன்ற சட்ட திட்டங்களின்படி அதை நிறைவேற்ற குறைந்தபட்சம் 1 மாத காலமாவது ஆகும்.

இதை அன்னா ஒப்புக் கொண்டால் அவரது உண்ணாவிரதம் விரைவிலேயே முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம்: ராசாவோடு பிரதமரும், சிதம்பரமும் சேர்ந்து தான் முடிவெடுத்தனர்- கனிமொழி

2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் விற்பனை செய்வதில்லை என்று அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவோடு சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் சேர்ந்து தான் முடிவெடுத்தனர் என்று திமுக எம்பி கனிமொழி சிபிஐ நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில், இன்று கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில் குமார் இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும், இது தொடர்பாக ராசா, பிரதமர், சிதம்பரம் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான ஆதாரத்தையும் (minutes of the meeting) அவர் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

இந்த விவகாரத்தில் எனக்குத் தெரியாமலேயே ராசா தன்னிச்சையாக முடிவெடுத்துவிட்டார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வரும் நிலையில், கனிமொழி இன்று சமர்பித்த ஆதாரம், அவருக்கு எதிராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வழக்கறிஞர் சுஷில் குமார் கூறுகையில், கனிமொழியால் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவிட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அவரை கைது செய்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று நாடாளுமன்றத்திலேயே பிரதமரும் சிதம்பரமும் கூறியுள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் விற்பனை விஷயத்தில் பிரதமரும், நிதியமைச்சராக இருந்த சிதம்பரமும் சேர்ந்து தான் ராசாவுடன் முடிவெடுத்துள்ளனர். இதனால், நாட்டுக்கு இழப்பு என்ற புகாரே தவறானது என்பது உறுதியாகிறது.

எப்போது நாட்டுக்கு இழப்பு என்ற வாதம் தனது பலத்தை இழக்கிறதோ.. அப்போதே கனிமொழி மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டும் பலம் இழக்கிறது.

அதே போல இந்த விவகாரத்தில் நாட்டுக்கு ரூ. 1.76 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தணிக்கை அதிகாரி யூகத்தின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்னும் ஏற்கவில்லை. இதனால் அந்த அறிக்கையை ஒரு சாட்சியாக இந்த நீதிமன்றம் ஏற்க முடியாது என்றார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் லாபம் அடைந்ததாக் கூறப்படும் ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் வயர்லெஸ் ஆகியவற்றின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களான எடிசலாட் மற்றும் யூனிநார் ஆகியவற்றுக்கு விற்பனை செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனாலும் அவர்கள் தங்களது உரிமங்களை விற்பனை செய்யவில்லை. எனவே அதில் இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றார்.

மங்காத்தாவை வாங்கிய சூர்யா உறவினர் ஞானவேல் ராஜா!

அஜீத் குமாரின் 50 வது படமான மங்காத்தாவை வாங்கியுள்ளார் நடிகர் சூர்யாவின் உறவினரும் பிரபல தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜா.

மங்காத்தாவின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. இவரது க்ளவுட் நைன் மூவீஸ்தான் மங்காத்தாவைத் தயாரித்தது, சோனியுடன் இணைந்து ஆடியோவையும் வெளியிட்டது.

ஆனால் தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல், ஆட்சி மாற்றங்கள் காரணமாக இப்போது தயாநிதி அழகிரி மங்காத்தாவின் தயாரிப்பாளராக தொடர முடியாத நிலை. அவரது பேனரில் படம் வெளியானால் பாதுகாப்பு இருக்குமா என விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் தயங்கவே, படத்தின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இன்னொரு பக்கம் ரசிகர்களின் அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு படத்தின் ரிலீஸை தள்ளிப் போட முடியாத அளவுக்கு இருந்தது.

இந்த நெருக்கடியைத் தீர்க்கும் வகையில், மங்காத்தா படத்தை வாங்கி ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பேனரில் வெளியிடுகிறார் கே இ ஞானவேல் ராஜா. பருத்தி வீரன், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் இவர். நடிகர் சூர்யாவின் நெருங்கிய உறவினர்.

இதற்கிடையே, மங்காத்தா திரைப்படம் உலகெங்கும் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாவதை உறுதி செய்துள்ளது, படத்தின் சர்வதேச வெளியீட்டு உரிமை பெற்றுள்ள அய்ங்கரன் நிறுவனம்.

இந்த திடீர் மாறுதல்கள் அஜீத் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

எல்லாம் சட்டப்படிதான்! - சிறுகதை Tamil Short Story

முயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு நினைத்தது. எனவே ஒரு சட்டம் இயற்றி முயலிடம் அறிவித்தது.

“முயலே நான் சொல்வதைக் கேள். நான் இனி மேல் முன்கூட்டியே சொல்லாமல் உன் வீட்டுக்குள் நுழைய மாட்டேன். கதவைத் தட்டி முன் அனுமதி பெற்றுத்தான் வருவேன். சொல்லாமல் வீட்டுக்குள் வந்துவிட்டால், நீ பயப்படாமல் என்னிடம் புகார் செய்யலாம். அந்த உரிமையை உனக்கு கொடுக்கிறேன்”

இப்படி ஒரு சட்டத்தையும், உரிமையையும் அறிவித்த பிறகு ’இந்தச் சட்டத்தை முயல் சரியாக பயன்படுத்துமா, பயன்படுத்தாதா?’ என யோசித்த பாம்பு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒருநாள் முயலின் வீட்டுக்குள் புகுந்து முயலின் குட்டி ஒன்றை விழுங்கி விட்டது. பின்னர் வெளியே வந்து நின்று கொண்டது. முயல் புகார் செய்ய வருகிறதா இல்லையா என காத்திருந்தது.

நீண்ட நேரம் ஆகியும் முயல் வெளியே வரவில்லை. பாம்புக்கு கோபம் அதிகரித்துக் கொண்டே போனது. பொறுமையிழந்து முயலின் வீட்டுக்குள் பாய்ந்து சென்று முயலைப் பிடித்து கேட்டது.

“நான் கொண்டு வந்த சட்டத்தை நீ ஏன் பின்பற்றவில்லை?”

முயல் அமைதியாகப் பதில் சொன்னது.”குற்றவாளியும் நீதான். நீதிபதியும் நீதான். நான் எந்தக் குற்றவாளிக்கு தண்டனை வழங்க எந்த நீதிபதியிடம் முறையிடுவது? நீயே சொல்லு.”

பாம்பு கோபத்தோடு சீறி, முயலைக் கவ்வி ஒரே வாயில் விழுங்கி விட்டது. பின்னர் இப்படி அறிவித்தது:

“இந்த முயலைக் கொன்றது சும்மா இல்லை. சட்டப்படிதான். அனைத்துச் சட்ட நெறிமுறைகளும் சரியாகவே பின்பற்றப்பட்டுள்ளன. ஆமாம்”.


Tamil Short Stories, Tamil Blogspot Stories

ராஜீவ் கொலையின்போது காங் தலைவர்கள் எங்கே போனார்கள்?!: சீமான் கேள்வி!

நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பேசுகையில், பேரறிவாளனை சிறைச்சாலை ஒரு மனிதனாக மாற்றியிருக்கிறது. அதேசமயம் சிறை பேரறிவாளனை சீர்த்திருத்தவில்லை. சிறையை பேரறிவாளன் சீர்த்திருத்தியிருக்கிறார். வேலூர் சிறை ஒரு கல்லூரியாக மாறியிருப்பதற்கு பேரறிவாளன் தான் காரணம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இதில் தலையிட்டு மூவரையும் மீட்க முயற்சிக்க வேண்டும்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காவல்துறை ஆணையரிடம் போய், என்னைக் கைது செய்ய வேண்டும். எங்கள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார். சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அந்தக் கட்சியினர் பேசாமல் விலகி எங்கள் கட்சிக்கு வந்துவிடலாம்.

நீங்கள் (யுவராஜா) எங்களை எதிர்த்து போராட வேண்டாம். நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களிடம் கேளுங்கள். அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்திற்கு வரும்போது, தன் தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய தலைவியாக இருந்த அம்மையார் இந்திரா காந்தியின் சிலை. காங்கிரஸ் கட்சியின் தலைவியின் சிலை. அய்யா ராஜீவ்காந்தி அவர்களுடைய தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள்.

திரளாக திரண்டு இருக்கிற என் தமிழ் உறவுகள் சாதாரணமான சீமான் நான் என்னுடைய வாகனத்தில் இருந்து இறங்கி இந்த மேடைக்கு வரும்போது கூட என்னை சுற்றி நூற்றுக்கணக்கான தம்பிகள் என்னை பாதுகாப்பாக பத்திரமாக அழைத்து வருவதை நீங்கள் பார்த்தீர்கள்.

பெருமைக்குரிய பெருமகள், இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர் அம்மையார் இந்திரா காந்தி அதுவும் உங்கள் கட்சியின் தலைவி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அந்த தலைவர் வரும்போது, அவரைவிட்டு எங்கே போனீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். அதற்கு பின்னர் சொல்லுங்கள் பேரறிவாளன் உள்பட மூன்று பேரை தூக்கில் போட வேண்டும் என்று.

அன்றைக்கு டாஸ்மாக் கூட இல்லையே...:

எங்கே போனார் அய்யா மூப்பனார். என் தம்பிகள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன் என்று சொன்ன தங்கபாலு எங்கே போனார். ப.சிதம்பரம் போனது எங்கே. ஜெயந்தி நடராஜன் போனது எங்கே. அய்யா ஈவிகேஎஸ் இளங்கோவன் எங்கே போய் நின்று கொண்டிருந்தார். அன்றைக்கு டாஸ்மாக் கூட இல்லையே, எங்கே போனீங்க நீங்க?

யுவராஜ் அவர்களே தன் தலைவனுக்கு அருகே வராமல் தனித்து சாகவிட்ட துரோகத்திற்காக உங்கள் தலைவர்களை முதலில் தூக்கிலிடு. பிறகு என் தம்பிகளை தூக்கிலிட சொல்லுங்கள். ராஜீவ் காந்தி மீது பற்றுக்கொண்டவர் என்று சொல்லுகிறீர்கள். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த நான் சொல்லுகிறேன், இந்திரா காந்தி செத்ததுக்கு மூன்று நாள் என் வீட்டில் சோறு ஆக்கவில்லை. படிக்கிற காலத்தில் அழுது கிடந்தேன். என் தாய் போல நேசித்து வாழ்ந்தேன். உங்களுக்கு இந்திரா காந்தி யார் என்று தெரியுமா?.

என்னை கைது செய்யச்சொல்லி மனு கொடுக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளாக ஆண்ட நீங்கள், சோனியா காந்திக்கு இந்த நாட்டில் வைத்தியம் பார்க்க கூட வசதியில்லாத நிலையில் இந்த நாட்டை வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் பணம் இருக்கு. அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கிறீர்கள். என்னிடம் பணம் இல்லை. என்ன செய்வது. நேராக சுடுகாட்டில் போய் படுத்துவிடுவதா?.

யுவராஜ் அவர்களே, நீங்கள் சரியான ஆளாக இருந்தால், இதேபோல் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள். இந்த இடத்தில் நான் தீக்குளிக்கிறேன். மறுபடி உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 500 ஓட்டு வாங்கி காட்டுங்கள். இல்லையேல் அனைத்து கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைத்து, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி. யுவராஜ் அவர்களே உங்களுக்கு ராகுல்காந்தி மட்டும்தான் தெரியும். மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு என எனக்கு எல்லாம் தெரியும் என்றார் சீமான்.

பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுவிக்க கோரி 1000 பேர் ஊர்வலம்; சத்யராஜ் தொடங்கி வைத்தார்!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி சென்னையிலிருந்து வேலூர் வரை 500 இருசக்கர வாகனங்களில் 1000 பேர் ஊர்வலம் சென்றனர்.

இதனை நடிகர் சத்யராஜ், இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னையில் இருந்து வேலூர் செல்லும் வழி நெடுக பல கிராமங்களில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டனர். மக்கள் இதற்கு பெரும் ஆதரவை அளித்தனர்.

இதுவரை இப்படி ஒரு பெரு முழக்கக் கூட்டத்தை வேலூர் சிறைச்சாலை காவலர்கள் பார்த்ததில்லை எனும் அளவுக்கு உணர்ச்சிப்பூர்வமான ஊர்வலம் இது.

சிறைச்சாலை வந்தடைந்ததும் ஓங்கி முழக்கமிட தொடங்கிய தமிழுணர்வாளர் படையை கண்டவுடன் ஒரு கணம் அதிர்ச்சியுற்றனர் சிறைக் காவலர்கள்.

தாரை தப்பட்டைகளை முழக்கி பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுவிக்க கோரி மீண்டும் மீண்டும் முழக்கங்களை எழுப்பினர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More