சென்னையில் வெற்றிபெற்ற ஈழத்திரைப்படங்கள்: சமூக அவலம் பேசிய எலிகள் - Think Out Of The Box - 7

உலகாயுதா அமைப்பு சென்னை வர்த்தக மையத்தில் கடல் கடந்த தமிழ் திரைப்படங்களிற்கான போட்டி நிகழ்வை கடந்த 30.07.2011 அன்று நடாத்தியது. இப் போட்டியில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை லெனின் எம். சிவம் இயக்கிய '1999' திரைப்படமும், சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை சோமிதரன் இயக்கிய 'எரியும் நினைவுகள்' ஆவணப்படமும், சிறந்த குறும்படத்திற்கான விருதை தமிழியம் சுபாஸ் இயக்கிய 'வன்னி எலி' குறும்படம் பெற்றுக்கொண்டது.

இம் மூன்று ஈழத்தமிழர் திரைப்படங்களும் ஏலவே சர்வதேச விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குநர் எஸ். பி. ஜெனநாதன் உற்பட பல தென்னிந்திய திரைப்படத்துறை சார்ந்த பலர் கலந்து சிறப்பித்த இவ் விழாவில், வெற்றி பெற்ற இக் கலைஞர்களுக்கான வெற்றி பெற்ற விருதுகளை, 2010ம் ஆண்டிற்கான இந்திய தேசிய விருது பெற்ற ஆடுகளம் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் வழங்கிக் கௌரவித்தார்.

'வன்னி எலி' குறும்படம் டாக்காவில் சர்வதேச விருது பெற்றதுடன், தென்னிந்தியத் திரையுலகின் பிரபல இயக்குனர்கள் பலரது பாராட்டுதல்களையும் பெற்றிருந்தது. அதற்குரிய சிறப்பான காரணம், அந்தக் குறும்படத்தின் மூல உத்தி. 2009ம் ஆண்டு மே 18ன் பின்னர், ஈழத் தமிழினத்தின் பெருந்தொகை மக்கள் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள்.

வெளியுலகத்துடனான தொடர்புகள் அற்றிருந்த அக்காலங்களில் அவை மிகப்பெரிய திறந்தவெளிச் சிறைக் கூடங்களாகவே இருந்தன. அவற்றுள் நடந்த துன்பங்கள் வெளிவர முடியாதிருந்த இறுக்கமான நிலை. எல்லோரும் மௌனித்திருந்த நிலையில், அம் முகாம்களுக்குள் நுழைந்த இரு எலிகள், அங்கு நடைபெறும் கொடுமைகளை வெளியுலகத்திடம் பேசின.

இவ்வாறு இரு எலிகளின் நகர்வில், ஒரு சமுகத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளிப்படுத்திய சிந்தனை குறித்து இக் குறும்படத்தின் இயக்குனர் தமிழியம் சுபாஸிடம் கேட்டால் அவரும் சொல்லக் கூடிய பதில் 'Think Out Of the Box' என்பதாகத்தான் இருக்கும்.

இரு வருடங்களுக்கு முன் ஒரு சமுகத்தின் அவலத்தை வித்தியாசமாக வெளிப்படுத்திய அக் குறும்படம் இன்று முதல் இணையத்தில் இலவசமாகக் காணமுடிகிறது.


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More