திமுக சார்பில், தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டங்கள் 19ம் தேதி நடைபெறுகிறது. திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த ஜெயலலிதாவின் காழ்ப்புணர்வு எண்ணத்திற்கு மாறாக, உச்ச நீதிமன்றம் கடந்த 9ம் தேதியன்று சமூக நீதி காத்திடும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது.
திராவிடர் இயக்க பாதுகாவலர் கருணாநிதிக்கு கிடத்த வெற்றியாக மக்கள் மனம் மகிழ திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் நாடெங்கும் கொண்டாடினர். மேலும், வருகிற 19ம் தேதி வெள்ளிக்கிழமை திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பாக சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டங்கள் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதில், திமுக சொற்பொழிவாளர்கள் அவர்களுக்கென்று குறிப்பிடப்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணியினர், மாவட்ட நிர்வாகிகள் துணையோடு கூட்டங்களை சிறப்பாக நடத்திட வேண்டும். தென்சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் பேசுகின்றனர்.
திருவள்ளூரில் திமுக பொது செயலாளர் அன்பழகன், காஞ்சிபுரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசுகின்றனர். அதேபோல, தமிழகத்தில் 34 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பல்வேறு திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment