2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் விற்பனை செய்வதில்லை என்று அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவோடு சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் சேர்ந்து தான் முடிவெடுத்தனர் என்று திமுக எம்பி கனிமொழி சிபிஐ நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில், இன்று கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில் குமார் இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும், இது தொடர்பாக ராசா, பிரதமர், சிதம்பரம் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான ஆதாரத்தையும் (minutes of the meeting) அவர் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.
இந்த விவகாரத்தில் எனக்குத் தெரியாமலேயே ராசா தன்னிச்சையாக முடிவெடுத்துவிட்டார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வரும் நிலையில், கனிமொழி இன்று சமர்பித்த ஆதாரம், அவருக்கு எதிராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வழக்கறிஞர் சுஷில் குமார் கூறுகையில், கனிமொழியால் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவிட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அவரை கைது செய்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று நாடாளுமன்றத்திலேயே பிரதமரும் சிதம்பரமும் கூறியுள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் விற்பனை விஷயத்தில் பிரதமரும், நிதியமைச்சராக இருந்த சிதம்பரமும் சேர்ந்து தான் ராசாவுடன் முடிவெடுத்துள்ளனர். இதனால், நாட்டுக்கு இழப்பு என்ற புகாரே தவறானது என்பது உறுதியாகிறது.
எப்போது நாட்டுக்கு இழப்பு என்ற வாதம் தனது பலத்தை இழக்கிறதோ.. அப்போதே கனிமொழி மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டும் பலம் இழக்கிறது.
அதே போல இந்த விவகாரத்தில் நாட்டுக்கு ரூ. 1.76 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தணிக்கை அதிகாரி யூகத்தின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்னும் ஏற்கவில்லை. இதனால் அந்த அறிக்கையை ஒரு சாட்சியாக இந்த நீதிமன்றம் ஏற்க முடியாது என்றார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் லாபம் அடைந்ததாக் கூறப்படும் ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் வயர்லெஸ் ஆகியவற்றின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களான எடிசலாட் மற்றும் யூனிநார் ஆகியவற்றுக்கு விற்பனை செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனாலும் அவர்கள் தங்களது உரிமங்களை விற்பனை செய்யவில்லை. எனவே அதில் இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றார்.
0 comments:
Post a Comment