மங்காத்தா படம் குறித்த லேட்டஸ்ட் செய்தி இது... அந்தப் படத்தை வாங்கிய ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன், இப்போது பின்வாங்கிவிட்டது!
அஜீத்தின் 50 வது படமான மங்காத்தா பட விவகாரத்தில் நடக்கும் திடீர் மாறுதல்களுக்கு இணையாக திருப்பங்கள் அந்தப் படத்தில் கூட இருக்குமா என்று தெரியவில்லை.
இந்தப் படத்தை மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரிக்க ஆரம்பித்த போது, திமுக ஆளும் கட்சி. அதனால் செல்லப்பிள்ளை கணக்காக போஷாக்குடன் வளர்ந்தது படம். வெளியிடுவதிலும் சிக்கல் இருக்காது என்பதால் வாங்கிக் கொள்ள நிறைய விநியோகஸ்தர்கள் தயாராக இருந்தனர்.
ஆட்சி மாற்றம் நடந்ததும், எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. இப்போது தயாநிதி அழகிரியை படத்தின் மைனஸாக பார்க்க ஆரம்பித்துவிட்டது அதே விநியோகஸ்தர் தரப்பு. தியேட்டர் தர உரிமையாளர்கள் தயங்கும் நிலை.
எனவே படத்தை கைமாற்றிவிட முடிவு செய்தார் தயாநிதி. பொதுவாக வேறு யார் படம் தயாரித்தாலும், அதை கடைசியில் தயாநிதி, உதயநிதி அல்லது சன் டிவிக்கு விற்றுவிட்டுப் போவதுதான் கடந்த 5 ஆண்டுகளாக நாம் பார்த்தது. இப்போது முதல்முறையாக தயாநிதி அழகிரி அந்த நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்தப் படத்தை இவர் வாங்கப் போகிறார், அவர் வாங்கப் போகிறார் என ஏகப்பட்ட யூகங்கள்.
கடைசியில் நடிகர் சூர்யாவின் உறவினர் ஞானவேல்ராஜா இந்தப் படத்தை வாங்கி வெளியிடுவதாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.
ஆனால் அடுத்த இரண்டே நாட்களில் அவர் பின் வாங்கிவிட்டார் மங்காத்தாவிலிருந்து. இதற்கு பின்னணியாக பல காரணங்களைச் சொல்கிறார்கள். அதில் முக்கியமான காரணம் படத்தின் தொலைக்காட்சி உரிமை சன்டிவிக்கு விற்கப்பட்டதுதான் என்கிறது விவரமறிந்த தரப்பு. ஆனால் இதுகுறித்து விரிவாக பேச மறுத்துவிட்ட ஞானவேல் ராஜா, மங்காத்தா படத்தை நாங்கள் வெளியிடவில்லை. அவ்வளவுதான் என்றார்.
தயாநிதி அழகிரி இதுபற்றி தனது ட்விட்டரில், "மங்காத்தா ஸ்டுடியோ கிரீன் பேனரில் வெளியாகாது. ஆனால் நிச்சயம் ஆகஸ்ட் 31-ம் தேதி ரிலீஸாகிவிடும்," என்று கூறியுள்ளார்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடவிருக்கிறது என்பது லேட்டஸ்ட் தகவல். விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.
0 comments:
Post a Comment