சேவாக் விளையாடும் பயிற்சி ஆட்டம் நாளை தொடக்கம்

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி கண்டுள்ள இந்திய அணி நாளை நார்தாம்ப்டன் ஷயர் அணியுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதன் முக்கியக் கவர்ச்சி என்னவெனில் சேவாக் எவ்வாறு இதில் விளையாடுவார் என்பதே.

தோல்வியிலிருந்து இந்தியாவை மீட்கும் மீட்பராகவே சேவாக் இப்போது பார்க்கப்படுகிறார். இதனால் அவர் நார்தாம்ப்டன் மைதான உள்ளரங்க வலைப்பயிற்சிக்கு வந்த போது அனைத்து ஊடகங்களும் சேவாக் மீதே கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

சேவாகும், கம்பீரும் உள்ளரங்கத்தில் தீவிர பேட்டிங் மற்றும் சில பயிற்சிகளை மேற்கொண்டனர்.

சேவாக் இல்லாததால் கவனம் இழந்த கம்பீர் தனது தைரியமான அதிரடி வழிக்கு சேவாக் வருகையினால் திரும்புவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

காயமடைந்த முக்கியப் பந்து வீச்சாளர் ஜாகீர் கானும் கடந்த 3 நாட்களாக தீவிரப் பந்து வீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கம்பீர், சேவாக், ஜாகீர் கான் செயல்பாடு குறித்து இந்த 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் கூர்ந்து கவனிக்கப்படவுள்ளது.

அதே போல் ஃபார்ம் அவுட் ஆகித் திணறும் தோனி, ஷாட் பிட்ச் பந்தில் திணறுவதாகக் கருதப்படும் சுரேஷ் ரெய்னா ஆகியோரும் முன்னமேயே வலைப்பயிற்சிக்கு வந்தனர்.

ஒரு மணி நேரம் கழித்து சச்சினும், லஷ்மணும் வலைப்பயிற்சிக்கு வந்தனர். ஆட்டக்களம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முழு அணியுடன் களமிறங்கலாம் என்ற எதிர்பார்ப்புக் கூடியுள்ளது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More