வேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகனை சந்தித்தார் வைகோ

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வேலூர் மத்திய சிறையில் சந்தித்துப் பேசினார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை உறுதி செய்யும் ஜனாதிபதி அலுவலக உத்தரவு (கருணை மனு ரத்து ) நகல் இன்று வேலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இந் நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று வேலூர் சிறையில் மூவரையும் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக நேற்று பேரறிவாளன் எழுதிய நூலின் இந்திப் பதிப்பு டெல்லியில் வெளியிடப்பட்டது. வைகோ தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர் ஏ.பி.பரதன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ள ராஜீவ் காந்தி கொலை வழக்கு-உண்மை கடிதங்கள் என்ற இந்தி மொழி பெயர்ப்பின் பணியை எழுத்தாளர் சரவணா ராஜேந்திரன் செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் நிருபர்களிடம் வைகோ கூறுகையில்,

மத்திய அரசு நினைத்தால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும். தமிழ்நாட்டு முதல் அமைச்சர் அவர்கள், கருணை உள்ளத்தோடு, தாய் உள்ளத்தோடு இந்த மூன்று உயிர்களையும் காப்பற்ற வேண்டும் என்று கட்சியினரையெல்லாம் கடந்து அனைவரும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

மத்திய அரசு இந்தக் கட்டத்தில் கூட இதைத் தடுத்து நிறுத்த முடியும். எப்படியாவது இந்த மூன்று உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று கோருகிறோம் என்றார்.

முதல்வர் கையில் தான் உள்ளது-பேரறிவாளனின் தந்தை:

இந் நிலையில் இந்த மூவரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, ஜோலார் பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் உண்ணாவிரம் நடைபெற்றது. பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோர் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றனர்.

குயில்தாசன் கூறுகையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரின் உரிரை காப்பாற்றுவது தமிழக முதல்வரின் கையில் தான் உள்ளது. எனது மகனை காப்பாற்றி என்னிடம் ஒப்படைக்குமாறு அவரை வேண்டுகிறேன் என்றார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More