லோக்பால் மசோதா விவகாரத்தில் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதாகவும், அன்னா குழு உருவாக்கிய ஜன் லோக்பால் மசோதாவை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததையடுத்து அரசுத் தரப்புடன் பேச்சு நடத்த அன்னா ஹசாரே ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து மத்திய அரசின் சார்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அன்னா ஹசாரே தரப்புடன் பேச்சு நடத்தவுள்ளார்.
பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்த 3 பேர் குழுவை அன்னா ஹசாரே நியமிக்கவுள்ளார். இரு தரப்பினரும் விரைவில் பேச்சுவார்த்தையை துவக்கவுள்ளனர்.
அன்னா தொடர்ந்து இன்று 8ம் நாளாக ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். பிரதமர் அல்லது ராகுல் காந்தியுடன் மட்டும் தான் லோக்பால் மசோதா குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அன்னா ஹஸாரே நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானை பிரதமர் மத்தியஸ்தராக நியமித்தால் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைவோம் என்று அன்னா இன்று காலை தெரிவித்தார். பேச்சுவார்த்தையை உடனே துவங்க நாங்கள் திறந்த மனதுடன் தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார், அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோருடன் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார். (அன்னா ஹஸாரே, சரத் பவார், விலாஸ்ராவ் தேஷ்முக், பிரிதிவிராஜ் சவாண் ஆகியோர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
இக் கூட்டத்தையடுத்து ஹசாரே மற்றும் அவரது குழுவினருடன் பேச்சு நடத்த விலாஸ்ராவ் தேஷ்முக்கை மத்திய அரசு நியமித்தது.
அதே நேரத்தில் அன்னா தரப்பில் அரவிந்த் கெஜரிவாலுடன் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தைகளை இன்று காலை ஆரம்பித்தார்.
அன்னாவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று சல்மான் கேட்டுக் கொண்டார். அப்போது, பிரதமர் உறுதியளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் என்று கெஜரிவால் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து அன்னா ஹசாரேவுக்கு பிரதமர் ஒரு அவசர கடிதம் அனுப்பினார்.
அதில், நாம் எல்லோருமே ஊழலுக்கு எதிரான போரில் ஒருங்கிணைந்து செல்வோம். நானும் ஊழலுக்கு எதிரானவனே. லோக்பால் மசோதா விவகாரத்தில் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதாக தனிப்பட்ட முறையில் உறுதியளிக்கிறேன்.
இதனால் உண்ணாவிரதத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். ஜன் லோக்பால் மசோதாவை உடனடியாக நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பத் தயாராக உள்ளேன்.
சபாநாயகர் அனுமதிக்கும்பட்சத்தில் உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவும் தயாராக உள்ளேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதையடுத்து அரசுத் தரப்புடன் பேச்சு நடத்த அன்னா ஹசாரே ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அன்னா தரப்புடன் பேச்சு நடத்த பிரணாப் முகர்ஜியை நியமித்து பிரதமர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, அன்னாவின் சார்பில் 3 பேர் கொண்ட குழு பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தும் என்று அரவிந்த் கெஜரிவால் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வரும் முன் அதை அனைத்துக் கட்சிகளும் கொண்ட நிலைக் குழுவுக்கு அனுப்பி, விவாதித்து, அனுமதி பெற்று பின்னர் சபாநாயகரின் அனுமதி கிடைத்த பின்னரே அதை சமர்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், ஜன் லோக்பால் மசோதாவை இப்போது அரசு ஏற்றுக் கொண்டாலும் நாடாளுமன்ற சட்ட திட்டங்களின்படி அதை நிறைவேற்ற குறைந்தபட்சம் 1 மாத காலமாவது ஆகும்.
இதை அன்னா ஒப்புக் கொண்டால் அவரது உண்ணாவிரதம் விரைவிலேயே முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment