உனக்கு நான் உள்ளேன் தோழா! - சிறுகதை Tamil Short Story

அது ஒரு மிருகங்கள் மற்றும் பறவைகளை விற்பனை செய்யுமிடம் (petshop). அந்தக் கடைக்கு விதம் விதமான வண்ண வண்ண ஆடம்பரக் கார்களில் மக்கள் வந்து தமக்குப் பிடித்த பிராணிகளை வாங்கிச் செல்வது வழக்கம். அந்த கடை கண்ணாடியால் அழகு படுத்தப் பட்டிருந்ததால் பிராணிகளின் அழகும் போவோர் வருவோரைக் கவர்ந்தது. பலர் அங்கு நின்று வேடிக்கை பார்த்துச் செல்வார்கள்.

வேடிக்கை பார்ப்பவர்களோடு பத்தோடு பதினொன்றாக ஒரு ஏழைச்சிறுவனும் நின்று தினமும் வேடிக்கை பார்ப்பான். அவனுக்கும் அங்குள்ள அழகான நாய்க்குட்டிகளில் ஒன்றை வாங்கி விட வெகு நாள் ஆசை.

சிறிது சிறிதாக சேமித்து 10 ரூபாய் சேர்த்தான். பின் கடைக்குச் சென்று கடைக்காரரிடம் நாய்க்குட்டி வாங்க வேண்டுமென்றான். அவரும் நாய்க்குட்டிகளை பார்க்க அனுமதித்தார். அவன் எல்லா குட்டிகளையும் பார்த்து விட்டு ஒதுக்குப் புறமாக படுத்திருந்த அழகான கருப்பு நிற நாய்க்குட்டியொன்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்து, கடைக்காரரிடம் பத்து ரூபாயைக் கொடுத்தான்.

கடைக்காரர் அவனைப் பார்த்து “ஏனடா தம்பி 10 ரூபாய்க்கு யாராவது நாய்க்குட்டி தருவாங்களா?” என்றவாறே குட்டியைப் பறித்துக் கொண்டார். பின்பு பத்து ரூபாயைச் சிறுவனை நோக்கி எறிந்து விட்டு குட்டியைக் கூண்டில் போட எடுத்துச் செல்கையில் தான் பார்க்கிறார், அந்த நாய்க்குட்டி ஒருகால் பலமின்றி மூன்று கால்களுடன் ஊனமானதாக தள்ளாடுவதை.

பின் சிறுவனிடம் வந்து சொன்னார், இந்தக் குட்டியை கொண்டு வரும் போது இதன் கால்கள் முறிந்து விட்டது. இதைக் யாரும் விலை கொடுத்து வாங்க மாட்டார்கள்.கருணைக் கொலைதான் செய்ய நினைத்தேன். நீ வேண்டுமென்றால் இலவசமாக எடுத்துச்செல் என்றார்.

சிறுவன் ஆவலோடு ஓடிச் சென்று நாய்க்குட்டியை வாங்கித் தழுவிக் கொண்டான். பின் தன் 10 ரூபாயைக் கடைக்காரரிடம் கொடுத்து விட்டு, நாய்க் குட்டியை அணைத்து முத்தமிட்டவாறு ”உனக்கு நான் உள்ளேன் தோழா; யார் உன்னை ஊனம் என்றார்கள்” என்றவாறே விந்தி விந்தி நடந்து சென்றான்.


Short Stories in tamil

3 comments:

”உனக்கு நான் உள்ளேன் தோழா; யார் உன்னை ஊனம் என்றார்கள்” என்றவாறே //விந்தி விந்தி நடந்து சென்றான்//

அருமை அருமை நண்பா.

வாழ்த்துக்கள்.

www.panangoor.blogspot.com

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More