சமச்சீர் கல்வித் திட்டம் இந்த ஆண்டே அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் சமச்சீர் கல்வித் திட்ட நூல்கள் விநியோகிக்கப்படவுள்ளது.
கிட்டத்தட்ட 9 கோடி புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 1.2 கோடி மாணவ, மாணவிகள் சமச்சீர் கல்விப் புத்தகங்களைப் பெறுவார்கள்.
நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்பதாகவும், உடனடியாக அது அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து புத்தகங்கள் அனைத்தும் தயாராக இருப்பதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து நேற்றே பள்ளிகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த வேலை முடிந்ததைத் தொடர்ந்து இன்று முதல் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. அவரவர் வகுப்பறையில் வைத்தே புத்தகங்களை தரவுள்ளனர் ஆசிரியர்கள்.
முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு லாரிகள், வேன்கள் உள்ளிட்டவற்றின் மூலம் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை கல்வித்துறை அதிகாரிகள் முழு வீச்சில் அனுப்பி வைத்தனர்.
புத்தகத்தில் மாற்றம் வருமா?
இதற்கிடையே திமுகவின் நலன்களைப் பிரதிபலிக்கும் அம்சங்கள் புத்தகங்களில் இருந்தால் அவற்றை அரசு நீக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே அதுபோன்றவற்றை அரசு தாள் ஒட்டி மறைத்தும், அந்தப் பக்கங்களை கிழித்தும் புத்தகங்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி செய்ய முடியாத பக்கங்களில் உள்ள பாடங்களுக்குப் பதில் வேறு துணைப் பாடங்கள் தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
0 comments:
Post a Comment