பத்மநாபசாமி கோவிலின் 6வது ரகசிய அறையைத் திறக்கக் கூடாது. அதற்கு கடவுள் அனுமதி கிடைக்கவில்லை. மீறித் திறந்தால் அதில் உள்ள விஷ ஜந்துக்களால் அறையைத் திறந்தவரின் வம்சமே பூண்டோடு அழிந்து போய் விடும் என தேவ பிரஸ்னம் பார்த்த ஜோதிடர்கள் பீதியைக் கிளப்பி எச்சரித்துள்ளனர்.
பத்மநாபசாமி கோவிலில் உள்ள ஆறு ரகசிய அறைகளையும் திறந்து பார்த்து ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் ஒரு கமிட்டியை அமைத்து உத்தரவிட்டது. அந்தக் கமிட்டியும் இதுவரை 5 அறைகளைத் திறந்து பார்த்து விட்டது. அதில் பல லட்சம் கோடி மதிப்புடைய பொக்கிஷங்கள் கிடைத்துள்ளன. ஆனால் 6வது அறையைத் திறக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அந்த அறையின் கதவில் பாம்பு படம் வரையப்பட்டிருப்பதால் அறையைத் திறந்தால் கேடு விளையும் என அச்சம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருவிதாங்கூர் மன்னர், தேவ பிரஸ்னம் (கடவுளிடம் உத்தரவு கேட்பது) பார்க்க உத்தரவிட்டார். அதன்படி கடந்தநான்கு நாட்களாக தேவ பிரஸ்னம் பார்க்கப்பட்டது.
மூன்று நாட்கள் மட்டுமே முதலில் திட்டமிடபப்பட்டிருந்தது. அதில் கடவுளிடமிருந்து அறையைத் திறக்க உத்தரவு கிடைக்கவில்லை என்றுகூறப்பட்டது. இதையடுத்து நேற்றும் ஒரு நாள் பார்க்கப்பட்டது.
அதுகுறித்து ஜோதிடர் பத்மநாப சர்மா கூறுகையில்,
கோயில் கணக்கு வழக்குகளில் ஏராளமான முறைகேடு நடக்கிறது. கோயில் ஊழியர்கள் மிக சாமர்த்தியமாக கள்ளக் கணக்கு எழுதுகின்றனர். தினமும் நடைபெறும் பூஜைகள், தினசரி வரவு செலவு கணக்கிலும் முறைகேடு செய்கின்றனர்.
கோயிலின் மூலஸ்தானமான அனந்தன்காடு உள்பட சில முக்கிய இடங்கள் பராமரிப்பின்றி இருக்கின்றன. அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். 100 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள பாதாள அறையை எந்த காரணத்தை கொண்டும் திறக்கக் கூடாது. அந்த அறைக்கு செல்ல தெய்வத்துக்கு மட்டுமே அனுமதி உள்ளது.
இந்த அறையை தொடுவதற்கு கூட வேறு யாருக்கும் உரிமை இல்லை. இதை மீறி அறையை திறந்தால், திறப்பவர்களின் வம்சமே அழிந்துவிடும். பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களால் அவர்களுக்கு அழிவு ஏற்படும்.
இந்த அறையை திறப்பதற்கான முயற்சி நடக்கிறது என்று தெரிந்ததுமே அதை தடுக்க, பரிகார பூஜை செய்திருக்க வேண்டும். அதை செய்யாதது பெரிய தவறு. எனவே, இனியும் தாமதிக்காமல் அறையை திறக்காமல் இருக்க சிறப்பு பரிகார பூஜை நடத்த வேண்டும்.
இந்த அறையை திறக்காமல் இருக்க பக்தர்களும் கூட்டு பிரார்த்தனை நடத்த வேண்டும். கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் கடைசி வாரிசு வரை, கோயிலை தீயவர்களிடம் இருந்து பாதுகாக்க தர்ம யுத்தம் நடத்துவோம் என சத்தியம் செய்ய வேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை எந்த காரணம் கொண்டும் மதிப்பீடு செய்யக்கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது. கோயில் பொக்கிஷங்கள் வெளி உலகின் கவனத்திற்கு வரக்கூடாது என்றார்.
இந்தத் தகவல் பரவியதைத் தொடர்ந்து நேற்ற இரவு முதல்வர் உம்மன் சாண்டி கோவிலுக்கு திடீரென வருகை தந்தார். அங்கு கோவில் நிர்வாகிகள், அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 6வது அறையைத் திறக்கக் கூடாது என்று தேவ பிரஸ்னத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பத்மநாபசுவாமி கோயிலில் இருக்கும் பொக்கிஷம் சாதாரணமானது அல்ல. அது பக்தர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. எனவே, அந்த அறையை திறப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டால் பக்தர்களின் விருப்பத்தை கேட்டு தெரிவிக்கப்படும் என்றார்.
இதற்கிடையே, ஜோதிடர்களின் இந்த எச்சரிக்கை குறித்து உச்சநீதிமன்றம் அமைத்த நகைகள் மதிப்பீட்டுக் குழுவின் தலைவரான அனந்த போஸ் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
1 comments:
இந்த காலத்திலும் இதெல்லாம் சாத்தியமா?
இது அங்கிருக்கும் வரை கேரளாவுக்கு கிமினர்களால் பெரும் ஆபத்து என்பது தான் உண்மை
Post a Comment