மனைவியிடம் பாராட்டுப் பெற்ற விவசாயி!

அந்த ஊரில் ஒரு உழவன் இருந்தான். அவன் அன்று ஒரு நாள் சந்தைக்குச் சென்றான். சந்தையில் ஆயிரம் ருபாய் கொடுத்து ஒரு மாடு வாங்கினான். ஊர் திரும்பும் வழியில் அவனைச் சந்தித்த ஒருவன், இந்த மாட்டை இழுத்துக் கொண்டு ஏன் தொல்லைப்படுகிறீர்கள்? இதற்குப் பதில் என் ஆட்டை வாங்கிக் கொள்ளுங்கள், நிறைய பால் தரும் ஒரே ஆண்டில் நிறைய குட்டிகள் போடும்” என்றான்.

அவனும் மாட்டைக் கொடுத்து விட்டு ஆட்டை வாங்கிக் கொண்டு புறப்பட்டான். சிறிது நேரம் சென்றதும் கோழி ஒன்றுடன் வந்த ஒருவன், “இந்தக் கோழி நாள்தோறும் முட்டை இடும், வளர்ப்பதும் எளிது. உங்கள் ஆட்டிற்கு இதை மாற்றிக் கொள்வோமா?” என்று கேட்டான்.

ஆட்டைக் கொடுத்துவிட்டுக் கோழியுடன் புறப்பட்டான் அவன். ஊருக்கு அருகில் வந்து கொண்டிருந்த அவனைச் சந்தித்தான் ஒருவன். தன் கையிலிருந்து முட்டையைக் காட்டி, “இதை உடனே சமைத்துச் சாப்பிடலாம், அதனால் கோழிக்கு மாற்றிக் கொள்வோமா?” என்று கேட்டான். அவனும் உடனே கோழியைத் தந்துவிட்டு முட்டையைப் பெற்றுக் கொண்டான்.

இந்தச் சம்பவத்தை வேடிக்கைப் பார்த்த ஒருவன், “என்ன இவ்வளவு பெரிய முட்டாளாக இருக்கிறாய்? மாட்டைக் கொடுத்து முட்டையுடன் வரும் உன்னைக் கண்டு உன் மனைவி கோபம் கொண்டு திட்டப்போகிறாள்” என்றான்.

“என் மனைவி என்னைப் பாராட்டுவாளே தவிர, ஒருநாளும் திட்டமாட்டாள்” என்றான்.

“1000 ருபாய் பந்தயம், உன் மனைவி உன்னைத் திட்டுவாள்” என்றான் அவன்.

“சரி, நீயும் என்னுடன் வா” என்றான் உழவன்.

இருவரும் உழவனின் வீட்டை அடைந்தனர். கணவனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த மனைவியிடம் நடந்ததை எல்லாம் சொன்னான்.

“நல்ல காரியம் செய்தீர்கள். யார் மாட்டைப் பார்த்துக் கொள்வது? அதுபோல் ஆடு வளர்ப்பது மட்டும் சாதாரண செயலா என்ன? கோழி இங்கே இருந்தால் ஒரே குப்பையாகிவிடும், உடனே சாப்பிடுவதற்கு முட்டை வாங்கி வந்தீர்களே, உங்கள் திறமை யாருக்கு வரும்” என்று பாராட்டினாள் அவள்.

உழவனிடம் வந்தவன் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஆயிரம் ருபாயைத் தந்தான். “நீ செய்தவை முட்டாள்தனமான செயல்கள், ஆனால் உன் மனைவி பாராட்டுகிறாள். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே” என்றான் அவன்,

அதற்கு, “நான் என்ன செய்தாலும் பிறர் எதிரில் என்னை என் மனைவி குறை கூறமாட்டாள், பாராட்டவே செய்வாள். இதை அறிந்தே நான் பந்தயம் கட்டினேன்” என்றான் அவன்.!

1 comments:

அதற்கு, “நான் என்ன செய்தாலும் பிறர் எதிரில் என்னை என் மனைவி குறை கூறமாட்டாள், பாராட்டவே செய்வாள். இதை அறிந்தே நான் பந்தயம் கட்டினேன்” என்றான் அவன்.!//

பாராட்டத்தக்க பயனுள்ள பகிர்வு.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More