என் இனிய தமிழ் மக்களே என எத்தனை காலம்தான் ஏமாற்றுவேன்...! - பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்களே என கரகரப்பான குரலில் பேசி இன்னும் எத்தனை காலத்துக்குதான் உங்களையெல்லாம் ஏமாற்றுவேன், என இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டார்.


ஈரோடு வ.உ.சி. பூங்காவில் மக்கள் சிந்தனை பேவை சார்பில் முதல் புத்தகதிருவிழா நடந்தது. அதன் நிறைவு விழாவில் இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், "இந்த புத்தக திருவிழாவில் அறிவு சார்ந்தவர்கள் பலர் பேசி இருக்கிறார்கள்.ஆனால் எனக்கு அப்படி பேச தெரியாது. காட்டாற்று வெள்ளம் போல் பேசுவேன். என் இனிய தமிழ் மக்களே என்ற கரகரப்பான குரலில் பேசி நான் இன்னும் எத்தனை காலம் தான் உங்களை ஏமாற்றுவேன், எனினும் இந்த பாரதிராஜாவுக்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள் நீங்கள். சமுதாயநோக்கம் - சமூக பார்வை நமக்கு இருக்க வேண்டும்.

நாம் எந்த செயலை செய்தாலும் அதை துணிச்சலுடன் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் எதிலும் வெற்றி பெற முடியும். கருத்தம்மா படத்துக்கு கிடைத்த விருது இந்த தமிழ் மக்கள் எனக்கு கொடுத்த அங்கீகாரம். அதனால்தான் என் இனிய தமிழ் மக்களே... என்று கூறுகிறேன்.

நல்ல புத்தகங்களை படிப்பது போன்று மகிழச்சியான விஷயம் எதுவும் இல்லை. புத்தகங்களை படிப்பது குழந்தைகளை கொஞ்சுவது போன்றது. படைப்பாளிகள் எதிர்காலத்துக்கு வழி சொல்பவர்கள். இவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் பேர் உள்ளனர். வீடுகளில் பூஜை அறைக்கு பதில் புத்தகங்களை வாங்கி நூலகமாக வையுங்கள்.

அதில் உள்ள புத்தகங்களை கொண்டு உங்கள் குழந்தைகளை படிக்க வையுங்கள். நம்முடைய தொப்புள் கொடி உறவுகள் அறுந்த போது தமிழனாக இருந்து நாம் என்ன செய்தோம். பார்த்து கொண்டுதானே இருந்தோம். மொழி-இனம் என்ற உணர்வு நமது ரத்த நாளத்தில் குறைந்து வருகிறது," என்றார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More