இயற்கைக் குணம் மாறாது! - (சிறுகதை - Tamil Short Story)

ஆசிரமம் ஒன்றில் முற்றும் துறந்த சந்நியாசி ஒருவர் இருந்தார். அவருக்கு நான்கு இளம் சீடர்கள் இருந்தார்கள்.

ஆசிரமத்தின் அன்றாடத் தேவைகளை, அந்த ஆசிரமத்தின் மேல் மதிப்பு வைத்திருந்த உள்ளூர் மக்கள் பார்த்துக் கொண்டார்கள்

ஆசிரமம் செழிப்பாக இருந்தது. காலையிலும், மாலையிலும் சாமியார், மக்களை நல்வழிப்படுத்தும் முகமாக உரை நிகழ்த்துவார். கூட்டு வழிபாடு செய்வார்.

ஒரு நாள், அந்த நான்கு சீடர்களில் மூன்று பேர்கள் சாமியாரிடம் வந்து,” ஐயா நாங்கள் அருகிலிருக்கும் புண்ணிய நதிகளிலும், நீர் நிலைகளிலும் தீர்த்தமாடிவிட்டுவர ஆசைப் படுகிறோம். அனுமதி கொடுங்கள்” என்றார்கள்

”ஏன் நம்மூர் ஆற்றிற்கு என்னாயிற்று?” என்று கேட்டார்.

”அதில்தான் தினமும் நீராடிக்கொண்டிருக்கிறோமே! ஒரு மாறுதலுக்காக மற்ற புண்ணிய நதிகளிலும் நீராடிவிட்டுவர விரும்புகிறோம்” என்றார்கள்.

“சென்று வாருங்கள்” என்றார்.

அவர்களில் ஒருவன்,”ஐயா நீங்களும் வர வேண்டும்!” என்றான்.

“இல்லை, நீங்கள் மட்டும் சென்று வாருங்கள்!” என்றார்

மற்ற இருவரும் இப்போது அவனுடன் சேர்ந்து வலியுறுத்தவே, சாமியார் சுற்று முற்றும் பார்த்தார்.

அருகில் இருந்த பாகற்காய் கொடியில் நிறையக் காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தன.

அவற்றில் ஒன்றைப் பறித்து அவர்களிடம் கொடுத்தவர், இப்படிச் சொன்னார்:

“இந்தக்காயை நான் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீராடும் இடங்களில் எல்லாம் இதையும் மூன்று முறைகள் நமச்சிவாயா என்று சொல்லி நீரில் முக்கி எடுத்துக் கொண்டு வாருங்கள்”

அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். உள்ளூர் ஆசாமி ஒருவன் அவர்களுக்கு வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான். இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு நான்கு நதிகளில் நீராடிவிட்டுத் திரும்பினார்கள்.

திரும்பி வந்தவுடன், சாமியாரை நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கினார்கள்.

சாமியார் கேட்டார்,”பாகற்காய் என்ன ஆயிற்று?”

“நீங்கள் சொன்னபடியே பாகற்காயையும் நீராட்டிக் கொண்டு வந்திருக்கிறோம்”

“இன்று அதைச் சமையலில் சேர்த்து விடுங்கள்” என்றார் அவர்.

அப்படியே செய்தார்கள்.

மதியம் சாப்பிடும்போது, சாமியார் கேட்டார்,” பாகற்காயில் ஏதாவது மாறுதல் தெரிகிறதா?”

சீடர்கள் மூவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்,” இல்லை ஐயா, எப்போதும் போல அது கசப்பாகத்தான் இருக்கிறது!”

இப்போது சாமியார், அவர்களுக்குப் புரியும்படியாக அழுத்தமான குரலில் சொன்னார்.

“எத்தனை புண்ணிய நிதிகளில் முக்கி எடுத்தாலும் பாகற்காயின் குணம் போகவில்லை அல்லவா? அதுபோலத்தான் எத்தனை புண்ணிய நதிகளில் நீராடினாலும் அல்லது எத்தனை ஆலயங்களில் வழிபட்டாலும் மனிதனின் இயற்கைக் குணம் மாறாது!”


Tamil Short Stories

6 comments:

மனிதனின் குணம் எப்படியிருந்தாலும் மாறாது என்று அழகிய சிறுகதையில் தெளிவாக சொல்லியிருக்கீறீர்கள்...



வாழ்த்துக்கள்...

//“எத்தனை புண்ணிய நிதிகளில் முக்கி எடுத்தாலும் பாகற்காயின் குணம் போகவில்லை அல்லவா? அதுபோலத்தான் எத்தனை புண்ணிய நதிகளில் நீராடினாலும் அல்லது எத்தனை ஆலயங்களில் வழிபட்டாலும் மனிதனின் இயற்கைக் குணம் மாறாது!”//

முட்டாள்தனமான கதை.

பின்னர் ஏன் புண்ணிய நதிகளில் தீர்த்தமாட வேண்டும் ? "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்று ஏன் நம் முன்னோர்கள் சொன்னார்கள் ?

அந்தச்சாமியார் ஒரு மடையன். புண்ணிய நதிகளில் தீர்த்தமாடலும், ஆலயம் தொழுவதும், நம் இயற்கைக் குணங்களை மாற்ற அல்ல.

அது ச‌ரி ராஜ்குமார், நாம் ஏன் ந‌ம் இய‌ற்கைக்குண‌த்தை மாற்ற‌ வேண்டும் ? அத‌ற்கு என்ன‌ கேடு வ‌ன்த‌து?

சீடர்கள் என்ன தம் இயற்கை குணங்களை மாற்றவா புண்ணிய நதிகளில் தீர்த்தமாட ஆசைப்பட்டார்கள் ? சாமியார் ஏன் அப்ப‌டி முடிவு க‌ட்டிவிட்டார் ?

அவ‌ர்க‌ள் தங்களூர் ந‌தியில் தீர்த்த‌மாடிக் கொண்டு வ‌ருகிறார்க‌ள். பிற‌ புண்ணிய நதிக‌ளிலும் ஆட‌ அவா அவ‌ர்க‌ளுக்கு.

ந‌ம்மூர் கோயில் சிற‌ப்புதான். நம்மூர் நதி சிறப்புதான். ஆனால் ஒவ்வொரு கோயிலுக்கும் நதிக்குமொரு சிற‌ப்புண்டு. அச்சிற‌ப்பால் வ‌ரும் புண்ணிய‌த்தைப்பெற‌ நாம் ப‌ல‌ப‌ல‌ கோயில்க‌ளை அறிந்து செல்கிறோம். அதைப்போல‌வே ந‌திக‌ளும்.

இக்க‌தை இந்தும‌த‌ப் ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை ப‌கடி செய்கிற‌து.

"#கவிதை வீதி # சௌந்தர்" உங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பரே!

"simmakkal"
நண்பரே இந்த கதை இந்து மதத்தை பகடி செய்கிறது என்று நீங்கள் எடுத்துக்கொண்டால் அதற்கு நான் வருந்துகிறேன்! மன்னிக்கவும்...

இதில் உள்ள கருத்து!
மனிதர்கள் எவ்வளவோ தவறுகளை செய்து விட்டு புண்ணிய நதிகளில் நீராடிவிட்டு பாவத்தை கழுவிவிட்டோம் என்று நினைக்கிறார்கள்!
ஆனால், அவர்கள் அங்கு சென்றுவிட்டு செய்த தவரயே மீண்டும் செய்கிறார்கள்... அவர்கள் அவர்களின் குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்...

adipadai nanbigai enbathai viruppam irunthal pinpattralam......
athu enthavithathil eyirkkai kunathai matrum enbathu puriyavillai thozhareh?
krish athreya

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More