பேரறிவாளன், முருகன், சாந்தனை விடுவிக்க கோரி மனித சங்கிலி- வைகோ

ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தனை விடுவிக்கக் கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்திலும், உலகெங்கும் உள்ள தமிழர்கள், உள்ளம் வேதனைத் தீயால் வெந்து கொண்டு இருக்கின்ற நிலையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று இளம் தமிழர்களுடைய உயிர்களை காக்க வேண்டும். அறிவிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையைத் தடுக்க வேண்டும்.

மூன்று தமிழர் உயிர் காக்கும் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்து உள்ளவாறு, 22-ம் தேதி திங்கள் கிழமை மாலை, தலைநகர் சென்னையில் எம்.ஜி.ஆர்.நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. அனைத்து அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், தமிழ் உணர்வாளர்களின் அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள், இக்கூட்டத்தில் பங்கு ஏற்கிறார்கள்.

இன்றைய கால கட்டத்தில் நடைபெறுகின்ற இந்த முக்கியமான கூட்டத்தில், நானும் பங்கு ஏற்கிறேன். கழக தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன். வருகின்ற 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி இணைப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், வணிக பெருமக்கள், சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் மூன்று உயிர் காக்கும் மனித நேயத்தோடு பங்கு ஏற்க இருகரம் கூப்பி வேண்டுகிறேன். குறிப்பாக, தாய்மார்கள் பெருமளவில் பங்கு ஏற்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More