டெல்லிச ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என்று சர்வாதிகாரி ராஜபக்சேவின் தம்பியும், ஈழ மக்களை சரமாரியாக சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்டவருமான கோத்தபயா ராஜபக்சே விஷமத்தனமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹெட்லைன்ஸ் டுடே டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
தமிழக மீனவர்களுக்கு முதலில் அட்வைஸ் கூறட்டும்
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் ஜெயலலிதா கூறியுள்ள கருத்துக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. இது காரணமே இல்லாதது. இலங்கையில் வசிக்கும் மக்கள் அவர்கள், சிங்களர்களோ அல்லது தமிழர்களோ, அவர்கள் இலங்கையர்கள். எங்களது மக்களைப் பற்றி மற்றவர்களை விட நாங்கள்தான் அதிகம் கவலைப்படுகிறோம்.
உண்மை அறியாமல் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இலங்கைத் தமிழர்களின் நலன் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால், முதலில் அவர் தனது மாநில மீனவர்களை இலங்கை கடற்பகுதிக்குள் ஊடுறுவக் கூடாது என்று தடை செய்ய வேண்டும். இலங்கை கடற்பகுதியில் ஊடுறுவி பெருமளவில் மீன்பிடிப்பது தமிழக மீனவர்கள்தான். இலங்கைத் தமிழ் மீனவர்களின் உரிமைகளை அவர்கள் தட்டிப் பறித்து வருகிறார்கள்.
எனவே முதலில் தமிழக மீனவர்களை ஜெயலலிதா தடுத்து நிறுத்த வேண்டும். தனது பகுதிக்குட்பட்ட தமிழர்கள் குறித்து அவர் கவலைப்படட்டும். இதைத்தான் அவர் முதலில் செய்ய வேண்டும்.
தனது வேலையை ஜெயலலிதா கவனிக்கட்டும்
தனது வேலையை ஜெயலலிதா முதலில் கவனமாக செய்யட்டும். இலங்கையில் போர் பாதித்த பகுதிகளில் தமிழ் மக்களின் நிலைமை குறித்து அவர் கவலைப்படத் தேவையில்லை.
இலங்கையில் போரால் பாதிக்கப்பட் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு குறித்து நாங்கள் உண்மையான கவலையில் உள்ளோம். அதுகுறித்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதை தமிழக அரசுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இவர்கள் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், சர்வதேச விசாரணையை அவர் கோரக் கூடாது. அதனால் என்ன பயன் கிடைத்து விடும்?
சர்வதேச விசாரணையைக் கோருவதில் எந்தவிதமான நியாயமும் இல்லை. சர்வசே தலையீடால் இந்தப் பிரச்சினை எப்படித் தீரும். இது இறையாண்மை மிகக நாடு.நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. சர்வதேச சமுதாயத்திற்கு இங்கு வேலையில்லை. அப்படி ஒரு தலையீடு தேவை என்பது தவறான எண்ணமாகும்.
உலகில் சில நாடுகள் வேண்டுமானால் இந்தக் கோரிக்கையுடன் வலம் வருபவர்களுக்கு ஆதரவாக செயல்படலாம். ஆனால் பிற நாடுகள் அனைத்தும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளன. ரஷ்யா முதல் சீனா வரை, ஏன், இந்தியாவே கூட எங்களுக்குத்தான் ஆதரவாக உள்ளன. பாகிஸ்தானும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளது. ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் எங்களுக்கு உதவி வருகின்றன. அதுதான் உண்மையான சர்வதேச சமுதாயம். உலகில் உள்ள சிலர் கூடி பேசிவிட்டால் அது சர்வதேச சமுதாயமாக மாறி விடாது.
தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க முடியாது
தமிழ் மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரங்களை விட கூடுதலான அதிகாரங்கள் வழங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றும் கூறலாம்.
தற்போது உள்ள இலங்கை அரசியல் சட்டம், அனைவரும் இணைந்து வாழத் தேவையான அம்சங்களை உள்ளடக்கியதாகவே உள்ளது. இதை விட அதில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்றே நான் கருதுகிறேன். இப்போது விடுதலைப் புலிகள் இல்லை, எனவே வேறு எந்த மாற்றமும் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.
இதை விட இவர்களுக்கு (தமிழர்களுக்கு) வேறு என்ன செய்து விட முடியும். இப்போதும் கூட நாங்கள் உள்ளாட்சித் தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். விரைவில் மாகாணத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. புதிய முதல்வர்கள் வரவுள்ளனர். அமைச்சர்கள் வரவுள்ளனர். எனவே இதைத் தாண்டி வேறு எந்த அதிகாரமும் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை.
தமிழர்களுக்கு நிறைய செய்து விட்டோம்
நாங்கள் தமிழ் மக்களுக்கு நிறையச் செய்து விட்டோம். எனவே இதற்கு மேலும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார் கோத்தபயா.
0 comments:
Post a Comment