தமிழ் இனத்தை அழித்த குற்றத்துக்கு துணை போனது இந்தியா என வரலாறு கூறும்-இலங்கை எம்.பி

ஈழத் தமிழர்கள் இந்தியாவை மட்டுமே நம்பி உள்ளனர். இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இந்திய அரசால் மட்டுமே தீர்வு காண முடியும். இதைச் செய்ய இந்தியா இப்போது கூட முன்வராவிட்டால், இலங்கையில் ஒரு இனத்தை அழித்த குற்றத்திற்கு இந்தியர்கள் துணை போனார்கள் என்று எதிர்கால வரலாறு கூறும் என்று ஈழத் தமிழ் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று சென்னையில் சிறப்பு மாநாடு நடந்தது. அதில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்து கொண்டார்.


அப்போது அவர் பேசியதாவது,


இலங்கையில் போர் முடிந்துவிட்டது. ஆனால் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. தற்போது தான் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.


தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்றோ, சம உரிமை வழங்க வேண்டும் என்றோ இலங்கை அரசுக்கு நினைப்பே இல்லை.


அன்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று ஆளும் கட்சி நினைத்தது. ஆனால் அதன் நினைப்பு பொய்யாகிவிட்டது. தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அமோக வெற்றி பெற்றுத் தந்தனர்.


இலங்கை அரசு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுடன் தான் செயல்படுகிறது. தமிழர் பகுதிகளை முதலில் ராணுவமயமாக்குவது, இரண்டாவதாக புத்தமயமாக்குவது, இறுதியாக சிங்களமயமாக்குவது தான் அதன் திட்டம்.


தமிழர்களுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கவோ, சம உரிமை வழங்கவோ, சுமூகமான அரசியல் தீர்வு காணவோ இலங்கை அரசுக்கு துளியும் விருப்பமில்லை.


இந்நிலையில் இலங்கை அரசு எந்த நாடு சொல்வதையும் கேட்கத் தயாராக இல்லை. ஆனால் இந்தியா சொல்வதை அதனால் மறுக்க முடியாது. தமிழர்களுக்கு அதிகாரப் பங்கு வாங்கிக் கொடுக்க இந்தியாவால் மட்டுமே முடியும்.


ஈழத் தமிழர்கள் இந்தியாவை மட்டுமே நம்பி உள்ளனர். இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இந்திய அரசால் மட்டுமே தீர்வு காண முடியும்.


இதைச் செய்ய இந்தியா இப்போது கூட முன்வராவிட்டால், இலங்கையில் ஒரு இனத்தை அழித்த குற்றத்திற்கு இந்தியர்கள் துணை போனார்கள் என்று எதிர்கால வரலாறு கூறும் என்றார்.

தமிழீழம், இலங்கை செய்திகள், திமிழ் செய்திகள், செய்திகள்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More