தமிழகத்தில் அதிரடி! திமுக தலைவர்கள் அடுத்தடுத்து கைது!

முன்னால் துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் கைது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டார்.

திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருத்துறைப் பூண்டி அருகே மொழிப்போர் தியாகி தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு தஞ்சாவூருக்கு வந்திருந்தார்.

பின்னர் இன்று காலை திருவாரூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். திருவாரூர் மாவட்ட எல்லையில், திருத்துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னும் இடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட தி.மு.க.வினர் காத்திருந்தனர்.

அங்கே மு.க.ஸ்டாலின் வந்ததும், போலீஸார் அவரிடம் ஒரு விசாரணை உள்ளது என்று கூறினர். என்ன என்று கேட்டபோது, சமச்சீர் கல்வியை அமலாக்கக் கோரி திமுகவினர் போராட்டம் நடத்தியபோது பள்ளியில் இருந்து மாணவர்களை வலுக்கட்டாயமாக பஸ்ஸில் திரும்பி அனுப்பினர். அப்போது, கொரடச்சேரி அருகே பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில், திமுகவினரால் திருப்பி அனுப்பப்பட்ட விஜய் என்ற மாணவர் விபத்தில் பலியானார்.

இதற்கு பூண்டி கலைவாணன்தான் காரணம். எனவே விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

பூண்டி கலைவாணனை ஒப்படைக்க இயலாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சாலைமறியல் போராட்டமும் நடந்தது. இதனால் ஸ்டாலினையும் சேர்த்து திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், விஜயன் எம்.பி. உள்பட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடைகள் அடைப்பு

ஸ்டாலின் கைதான சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது திமுகவினர் மத்தியில். திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திமுகவினர் தொடர்ந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீரபாண்டி ஆறுமுகம் கைது

நீதிமன்ற நிபந்தனைப்படி சேலம் காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்ற முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திடீரென மீண்டும் கைது செய்யப்பட்டார்.

கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

பேருந்துகள் உடைப்பு:

வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு, திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தை அழைத்துச் சென்ற போலீஸாருடன் மோதலிலும் ஈடுபட்டனர்.

அவரது கைதுக்கு எதிராக சேலம் நகரில் ஆங்காங்கே வன்முறைகள் நடந்து வருகின்றன. சேலம் பொதுமருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் எதிரில் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சேலம் நகரில் காலை முதல் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதனையடுத்து நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ அன்பழகன் கைது

தென் சென்னை மாவட்ட திமுக செயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் இன்று அதிகாலை திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரும் நில மோசடி வழக்கிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலையில் தியாகராய நகரல் உள்ள அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரை, திருப்பூரில் இருந்து 10 வேன்களில் வந்த நூற்றுக்கும் அதிகமான போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் அளித்துள்ள புகார் தொடர்பாக, ஜெ.அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அன்பழகன் திருப்பூர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உடுமலைப்பேட்டையில் பல லட்சம் மதிப்புள்ள மில் ஒன்றை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கியுள்ளதாக அவர் மீது புகார் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More