நண்பர்களே இன்று முதல் தெனாலி ராமனின் நகைச்சுவை கதைகளை இங்கு தொகுத்து வழங்க போகிறேன். அனைவரும் தங்களின் ஆதரவை கருத்துக்கள் மூலமாக தெரிவிக்கவேண்டும்.
என்னுடைய இந்த முயற்சியை பெரிதும் ஆதரித்து வலைப்பூ நண்பர்கள் குழுவில் இணைந்த என்னுடைய நண்பர்கள் பாபு, நாராயணன், முரளி, பாட்டில் மணி, ஜேகே, கௌரி ஆகியோருக்கு நன்றியை தேரிவித்து கொள்கிறேன்
தெனாலிராமன் வரலாறு:
சுமார் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.
சிறு வயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை.
சிறு வயதிலேயே விகடமாகப் பேசுவரில் வல்லமை பெற்றான். அதனால் அவன் பிற்காலத்தில் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான்.
காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். பின் வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான்.
அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார்.
காளி மகாதேவியின் அருள் கிடைத்தல்
அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. அதனால் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலை விரித்தாடியது.
அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்ய தொடங்கியது. ஆறு, ஏரி, குளம், குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன.
சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்துள்ளது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை வாயாரப் புகழ்ந்து அவரை வணங்கி ஆசி பெற்றனர்.
இதை பார்த்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்? என வினவினார்.
அதற்கு தெனாலிராமன் "மழை பெய்வதும் பெய்யாமல் போவதும் இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன் தங்கள் மகிமையால்தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். காக்கை உட்கார்ந்ததும் பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதை பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததனால் தான் பனம் பழம் விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலவே இவ்வூர் மக்கள் செயலும் இருந்ததால் தான் சிரித்தேன்" என்றான் தெனாலிராமன்.
இதைக் கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து அவன் மேல் கோபப்படவில்லை. தம்பி உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப் பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய் என்று நல்லாசி கூறினார்.
இதைக்கேட்ட தெனாலிராமன் காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தான். அவளின் திருஉருவத்தைக் காண பலவாறு வேண்டி தவம் இருந்தான். கடைசியில் தெனாலிராமன் முன் தோன்றினாள் காளிதேவி. அவளது உருவத்தைப் பார்த்துப் பயப்படுவதற்குப் பதிலாக பலமாக சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்த காளிதேவி, என் கோர உருவத்தைப் பார்த்து எல்லோரும் அஞ்சுவார்கள். நீயோ பலமாகச் சிரிக்கிறாய்? ஏன் என்று வினவினாள்.
அதற்கு தெனாலிராமன் எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. அப்படியிருக்க உனக்கு ஆயிரம் தலை உள்ளது. ஆனால் கைகள் இரண்டே பெற்றுள்ளாய். உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன். அதனால் எனக்கு சிரிப்பு வந்தது என்றான். இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்து விட்டாள்.
பின் மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுத்திகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும் போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன் எனக்கூறி மறைந்தாள் காளிதேவி.
தொடரும்.....
நன்றி மீண்டும் வருக
பிழை ஏதும் இருப்பின் தொடர்பு கொள்க rajkumareco@gmail.com
1 comments:
very good works chidlren will enjoy in thennali kathaikal . for adults also veru useful informetions
Post a Comment