இந்திய கடல் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் உள்நோக்கத்துடன் இலங்கைக்கு, கடந்த 2005ம் ஆண்டில் இருந்து சீனா உதவி வருவதாக அமெரிக்க செனட் சபைக்கு அளித்த அறிக்கையில் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.சீனாவின் தென் கடல் பகுதியில் இருந்து மியான்மர், வங்கதேசம், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, மொரீசியஸ், பாகிஸ்தான் என கடல் மார்க்கமாக நெருங்கி வந்து, இந்தியாவின் வடக்கில் உள்ள கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தவே சீனா உள்நோக்கத்துடன், தந்திரத்துடன் செயல்படுவதாக அமெரிக்க வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாகவும், இலங்கை பற்றி அமெரிக்க செனட் சபைக்கு அளித்த எட்டு பக்க அறிக்கையில் வல்லுனர்கள் கூறியிருப்பதாவது:"ஸ்டிரிங் ஆப் பேர்ல்ஸ்' என்றழைக்கப்படும் இந்நாடுகளின் கடல் பகுதிகளில் துறைமுகம் மற்றும் விமானப்படை தளம் அமைப்பது, ராணுவத்தை நவீனப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக இந்நாடுகளுடனான உறவுகளை சீனா பலப்படுத்தி வருகிறது. இந்திய கடல் பகுதியில், துறைமுகம் கட்டுவதற்கு, சீனா திட்டமிட்டு வருவது பற்றி, இந்திய பாதுகாப்பு துறை திட்ட மதிப்பீட்டாளர்கள் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளனர்.இலங்கையின் தென்கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள ஹம்பன்டோடா என்ற இடத்தில் துறைமுகம் கட்டுவதற்கு, சீனா முதலீடு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் குவாடர், வங்கதேசத்தில் சிட்டகாங்க், பர்மாவில் சித்வே ஆகிய இடங்களில் துறைமுகங்கள் கட்ட சீனா உதவி உள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை கடந்த 2009ம் ஆண்டில் நிறுத்தும்படி, மேற்கத்திய நாடுகள் கட்டாயப்படுத்தியதால் இலங்கை அரசு அப்போது பதட்டமடைந்தது.போரில் ராணுவத்தை எப்படி கொடுமையான முறையில் பயன்படுத்தி வெற்றி கொள்வது என்பது பற்றிய பயிற்சியும், இலங்கை ராணுவத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளை வெற்றி கண்டதால், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவுக்கு அந்நாட்டு அரசு மற்றும் சிங்கள மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதி கட்டப் போரின் போது, தமிழர்களை, இலங்கை ராணுவம் கையாண்ட விதம் சர்வதேச அளவில் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனால், இதுதொடர்பான சர்வதேச நாடுகளின் கேள்விகளுக்கு முக்கியத்துவம் அளிக்க இலங்கை அரசுக்கு விருப்பம் இல்லை.இலங்கையில் போர் குற்றங்கள் நடந்தது தொடர்பாக சர்வதேச குற்றவியல் கோர்ட் விசாரிக்க வேண்டுமானால், ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலின் ஒப்புதல் வேண்டும். இக்கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளாக ரஷ்யா மற்றும் சீனா உள்ளன. இவை இரண்டும் இலங்கையின் நட்பு நாடுகள் என்பதால், இலங்கைக்கு எதிரான விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கமாட்டார்கள்.அதேசமயம், ஐ.நா., மற்றும் சர்வதேச நாடுகள் போர் குற்றம் தொடர்பான விசாரணைக்கு வலியுறுத்தினால், இது சிங்களர்களிடம் அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவுக்கு இருக்கும் செல்வாக்கை அதிகரிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
0 comments:
Post a Comment