பஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை - பகுதி 1
"அரசே! கவலைப் படாதீர்கள். இவர்களுக்கு சமமான அர்வுடியவர் இல்லை என்று சொல்லும்படி நான் ஆறு மாதத்திற்குள் மாற்றிக் காட்டுகிறேன். நீங்கள் அதுவரை பொறுமையாக நாளை கணக்கிட்டு கொண்டிருங்கள்" என்றார் உறுதியான குரலில்.
அவ்வுரையை கேட்ட அரசன் மிகவும் மகிழ்ந்தான். சோமசன்மாவுக்கு உபசாரம் செய்தான். அவர் வசத்தில் தன் பிள்ளைகளையும் முறைப்படி ஒப்படைத்தான். தந்தையின் கடமைகளில் ஒரு தலையாய கடமை நிறைவேற்றபட்ட திருப்தி அப்போது உண்டாயிற்று.
சோமசன்மா அரச குமாரர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். முறைப்படி நீதி சாஸ்திரத்தை, "கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி சர்க்கரைக் கட்டியாகிய கல்கண்டாக கொடுப்பதுபோல்" கற்பிக்க எண்ணி பஞ்சதந்திரக் கதையாகக் கூறத் தொடங்கினார்.
"ஓ... ராஜ குமாரர்களே உங்களுக்கு வேடிக்கையான சில கதைகளைச் சொல்லப் போகிறேன். கேளுங்கள் கவனமாக" என்றார்.
"ஆசானே! அதென்ன கதை? சொல்லுங்கள்" என்றார்கள் அவர்கள்.
"நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போவது பஞ்சதந்திரக் கதையாகும் மிகவும் சுவாரசியமாக இருக்கும்" என்றார் அவர் அவர்களின் ஆர்வத்தை தூண்டும் நிலையில்.
"அந்த பெயருக்கு என்ன அர்ச்சம்?" என்று கேட்டான் ஒருவன்.
"பஞ்சதந்திரம் என்றால் ஐந்து தந்திரங்கள் என்று பொருள். அவை மித்திரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்கிரகம், அர்த்த நாசம், அசம்பிரேட்சிய காரித்துவம் என்பன."
"அப்படியென்றால்?" மற்றொருவன் கேட்டான்.
"சொல்லுகிறேன். மித்திரபேதம் என்றால் சினேகத்தைக் கொடுத்துப் பகை உண்டாக்கல். சுகிர்லாபம் என்பது தங்களுக்குச் சமமானவர்களோடு கூடி பகையில்லாமல் வாழ்ந்திருத்தல். சந்திவிக்கிரகம் என்பது பகைவரை அடுத்துக் கெடுத்தல், அர்த்த நாசம் என்பது தன் கையில் கிடைத்த பொருளை அழித்தல். அசம்பிரேட்சிய காரித்துவம் என்பது ஒரு காரியத்தைத் விசாரிக்காமல் செய்தல் என்று அர்த்தம். இக்கதைகளை கேட்டால் இவ்வுலக நடைமுறைகளையும் அதில் உண்டாகும் பிரச்சனைகளைச் சமாளிக்கிற விதங்களையும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
உடனே அரசகுமாரர்கள் ஒரே குரலில் "ஐயா! அவைகளை எங்களுக்கு இப்போதே தெளிவாக விளங்கும்படி சொல்ல வேண்டும்" என்று வேண்டினார்கள்.
கதை என்றாலே காதுகள் சிலிர்க்கும். அத்துடன் தந்திரக் கதைகள் என்றால் உள்ளம்கூடத் துள்ளுமே!
"சொல்லுகிறேன். இக்கதைகளை உங்களுக்கு அறிவில் தெளிவை உண்டாக்குவதாக!" என்று கதையைக் கூற ஆரம்பித்தார்.
பஞ்சதந்திரக் கதைகள் எந்தப் பிரபஞ்சத்தில் இப்படித்தான் பிறந்தன. வளர்ந்தன. இன்றும் அழியா நிலையில் மக்களிடயே மிகுந்த வரவேற்போடு உலா வருகின்றன.
அத்தகைய சுவாரசியம் மிக்க கதைகளை இனி வரும் படைப்புகளில் காண்போம்...
0 comments:
Post a Comment