சிலந்தி… சிலந்தி… - சிறுகதை Tamil Short Stories

ஸ்காட்லாந்தின் மன்னனாக பொறுப்பேற்றான் ராபர்ட் புரூஸ் என்ற மன்னன்.

இருப்பினும் கொஞ்சமும் மன நிம்மதி இல்லை. இங்கிலாந்து நாட்டிற்கும், ஸ்காட்லாந்திற்குமிடையே மன வேறுபாடு அதிகரித்தபடி இருந்தது. இங்கிலாந்தின் மேல் படையெடுத்தும், தோல்வியே கிடைத்தது.

புரூஸ், ஸ்காட்லாந்தில் நிச்சயமற்ற ஆட்சிப் பதவி வகித்து வரலானான். அவனுக்குப் போட்டியாக, “ஜான் பாலியால்’ என்பவன், தானும் மன்னன் ஆகவேண்டும் என்பதில் மும்முரமாக ஈடபடலானான்.

இந்த சிக்கலை இங்கிலாந்தின் மன்னன், “எட்வர்டு’ தீர்த்து வைப்பதன் மூலம், இருநாட்டுப் பகையும் முடிவுக்கு வரும் என்று எண்ணி, அங்கு சென்றனர்.

இவர்களுக்கு சரியானபடி முடிவு கூறாமல், எட்வர்டு கேவலப்படுத்தினான். “”பேதைகளே… இந்த நாடு எங்களுக்குச் சொந்தம். நீங்கள் என் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். மன்னனாக ஆகக் கூடாது, விடவும் மாட்டேன்,” என்று தன் மார்பைத் தட்டினான்.

புரூசுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. தன் நாட்டை இழிவாகச் சொன்னவனை விடக்கூடாது என்று எண்ணியபடி, மேலும் படையெடுத்தான். இங்கிலாந்து மன்னனோ தக்க பதிலடி கொடுத்தான். பலமுறை போர் நடந்தது. இறுதி வரை ஆங்கிலேயர் வெற்றி பெற்றதோடு அல்லாமல், ஸ்காட்லாந்தில் மன்னர்கள் அமர்ந்து பதவி ஏற்கும், “புனிதக்கல்லை’ பெயர்த்துச் சென்று லண்டன் நகரில் புதைத்தனர்.

ராபர்ட் புரூஸ் மிகுந்த துன்பத்துடன் மலைப்பகுதியில் உள்ள குகை ஒன்றை அடைந்தான். ஓரிடத்தில் ஓய்வெடுக்கலானான். ஒருபுறம் இருந்து தோன்றிய சூரிய ஒளியில், இவன் எதிரே சிலந்தி வலை ஒன்று தெரிந்தது. சிலந்தி வலையின் ஒரு இழையில், சிலந்தி ஒதுங்கிக் கொண்டு இருந்தது. அச்சிலந்தியானது அந்த இழையை எதிரே உள்ள குகையின் சுவற்றுடன் இணைத்துவிட முயற்சி செய்து கொண்டிருந்தது.

லேசான காற்று இழையில் தொங்கிய சிலந்தி, ஊசலைப் போல் ஆடலாயிற்று. ஒரு முறையல்ல, இரு முறையல்ல… சிலந்தி பலமுறை முயன்றது. சிறிதும் சோர்ந்து போகவில்லை.

புரூஸ், சிலந்தியை உன்னிப்பாகக் கவனித்தான். கடைசியாக சிலந்தி தன் இழையை மறுமுனையுடன் இணைத்தது. சிறிது நேரம் நின்றுவிட்டு வலையைப் பின்ன ஆரம்பித்தது.

நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த புரூஸ், அதையே தன் லட்சியமாகக் கொண்டு, துள்ளி எழுந்தான். தன் வீரர்களைத் திரட்டினான். 30 ஆயிரம் பேர் இருக்கின்றனர். எதிரி நாட்டிலோ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இருக்கின்றனர். இம்முறை வெல்ல வேண்டும் என்று உறுதியுடன் அஞ்சா நெஞ்சுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்த்து, பெரு வெற்றி பெற்றான். ஆங்கிலேயரது படைவீரர்கள் சிதறி ஓடினர்.

ராபர்ட் புரூஸ், சிலந்தியை வழிகாட்டியாகக் கொண்டே எதிரியை விரட்டியடித்து, வரலாற்றில் முதல் இடத்தைப் பெற்றான். அவனது புகழுக்கு சிலந்தியே காரணம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More