ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத்

சினிமாவை தவிர்த்து ரசிகர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும். சுதந்திரமான சிந்தனை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மன்றங்களைக் கலைத்தேன், என்கிறார் அஜீத்.

நடிகர் அஜீத்குமார் தனது ரசிகர் மன்றங்களை கடந்த மே மாதம் கலைத்துவிட்டார். அஜீத் அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்த்துக் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மன்றத்தை அஜீத் கலைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும் மங்காத்தா படத்துக்கு பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டி கொண்டாடினார்கள். மன்றத்தைக் கலைத்ததால் படம் ஓடாது என்று சிலர் கூறி வந்த நிலையில், அதைப் பொய்யாக்கி மங்காத்தா ஹிட் படமாகியுள்ளது.

இந்த நிலையில் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன் என்பது பற்றி அஜீத் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள பந்தம் இறுகி வருகிறது. ரசிகர்கள் வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நலன் எனக்கு முக்கியமாக படுகிறது. சினிமாவை தவிர்த்து அவர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு சார்ந்தது. அதை தனிப்பட்டவர்கள் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும். இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ரசிகர்மன்றத்தை கலைத்தேன்.

எனது முடிவை பலரும் பாராட்டினார்கள். அரசியல் முடிவுகளை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அமைப்பில் இருந்துதான் செய்ய வேண்டும் என்பது அல்ல.

சமூகத்தில் இரண்டு பிரிவு மக்கள் உள்ளனர். ஒரு பிரிவினர் நேரடியாக களம் இறங்குவார்கள். இன்னொரு பிரிவினர் தனி மனிதனாக இருந்து கொண்டு என்ன செய்யலாம் என்று கேட்பவர்கள். நான் இதில் இரண்டாவது வகை.

எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. என் சக்திக்கேற்ப மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். ஒவ்வொருவரும் இதுபோல் செயல்பட்டால் உலகம் சிறப்பாக மாறும்.

மங்காத்தா படத்தில் நரைத்த தாடியுடன் வந்தேன். பில்லா-2 படத்தில் இளமையாக வருகிறேன்.

இப்படத்துக்கு பின் என் வயதுக்கேற்ற வேடங்களைத் தேர்வு செய்து நடிப்பேன்," என்றார் அஜீத்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More