யாரை யாரிடமிருந்து பிரித்தாலும், எங்கு அனுப்பினாலும் நெஞ்சுரத்துடன் பணியாற்றுவோம்- கருணாநிதி

விஜயாலயசோழன் கணைகளை இழந்து போர்க்களத்துக்கு தன்னந்தனியாக வந்ததுபோல், யாரை நம்மிடம் இருந்து பிரித்தாலும், யாரை எங்கு அனுப்பி வைத்தாலும் கழகத்தை காக்கும் உறுதியையும், நெஞ்சுரத்தையும் பெரியாரும், அண்ணாவும் நமக்கு அளித்திருக்கிறார்கள். அதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் தனிச் செயலாளர் சண்முகநாதனின் தம்பி சிவாஜியின் மகன் சுதர்சன்-துர்கா தேவி திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

சண்முகநாதன் என் பிள்ளைகளில் மூத்த பிள்ளை. என்னை வழி நடத்தி செல்பவர் அவர் என்றால் மிகை ஆகாது. அறிவு கூர்மையும், என் குடும்பத்தின் மீது அன்பும், தனிப்பட்ட முறையில் என் மீது பாசமும் கொண்டவர்.

தி.மு.க.வில் சொற்பொழிவாளனாக நான் சுற்றி திரிந்த காலத்தில் நான் பார்த்து இருக்கிறேன். நான் பேசிய கூட்டங்களுக்கெல்லாம் வந்து குறிப்பு எடுப்பார். எதிர்க்கட்சியினரின் பேச்சை குறிப்பு எடுத்து அரசுக்கு அனுப்பும் போலீஸ் சி.ஐ.டி. அவர் என்பதை தென்னவன் மூலம் தெரிந்து கொண்டேன்.

1967-ல் நான் அமைச்சராக பொறுப்பு ஏற்றபோது இவர் எப்படி குறிப்பு எடுத்து இருந்தார் என்பதை கோப்புகளை பார்த்து தெரிந்து கொண்டேன். என் பேச்சில் ஒரு வரி பிசகாமல் குறிப்பு எடுத்து இருந்தார். அவரது திறமையை பார்த்து எனது சுருக்கொழுத்தராக அவரை நியமிக்கும்படி அண்ணாவிடம் கேட்டேன். அவரும் சண்முகநாதனை எனது உதவியாளராக நியமித்தார். அன்று முதல் இன்று வரை எனது உதவியாளராக செயல்பட்டு வருகிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை காரணமாக நான் கைப்பட எழுதுவது இல்லை. கலைஞர் கடிதம், அறிக்கைகள் மற்றும் கட்டுரைகளை நான் வாய்மொழியாக சொல்ல சண்முகநாதன் எழுதி வெளியிடுகிறார். சண்முகநாதன் இல்லாவிட்டால் கருணாநிதி இல்லை என்று நான் சொல்வேன். இன்றளவும் என்னோடு இருந்து எனது பணிகளை ஆற்றி வருகிறார்.

விஜயாலயசோழன் கணைகளை இழந்து போர்க்களத்துக்கு தன்னந்தனியாக வந்ததுபோல், யாரை நம்மிடம் இருந்து பிரித்தாலும், யாரை எங்கு அனுப்பி வைத்தாலும் கழகத்தை காக்கும் உறுதியையும், நெஞ்சுரத்தையும் பெரியாரும், அண்ணாவும் நமக்கு அளித்திருக்கிறார்கள்.

அதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும். இந்த விழாவில் நாம் ஒன்றை மறந்து விடக்கூடாது. நாடு போகும் போக்கை பார்த்தால் நமது கலை, கலாச்சாரம், நாகரீகத்துக்கு எதிர்காலம் உண்டா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழ் வருடத்தை மாற்றி விட்டதாக கூறுகிறார்கள். ஆண்டாண்டாக கொண்டாடியதை மாற்றலாமா? என்றெல்லாம் கேட்கிறார்கள்? தெருவில் போவோர்களா மாற்றினார்கள்? இன்றைக்கு நாங்களாக எதையும் மாற்றவில்லை.

1921-ல் மறைமலை அடிகள் தலைமையில் 500 தமிழ் புலவர்கள் செந்தமிழ் கற்றோர் கூடி பச்சையப்பன் கல்லூரியில் நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் தை ஒன்று என்பதுதான். அதுதான் தமிழ் ஆண்டின் தொடக்க நாள்.

திருவள்ளுவர் பெயரால் ஆண்டு கணக்கை தொடங்க வேண்டும் என்று எண்ணத்தில் அது அறிவிக்கப்பட்டது. அவர்கள் என்ன ஒன்றும் தெரியாதவர்களா? தமிழை உணராதவர்களா? மரபை அறியாதவர்களா? இதற்கு எல்லாம் நம்முடைய பதிலை செயல்மூலம் காட்ட வேண்டும்.

அதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை. சண்முகநாதனை போல வலிமை இருக்குமானால் அந்த நிலையை உருவாக்கிடலாம். நாகரீகம், கலை, காலாச்சாரம், பண்பாடு வாழ என்றென்றும் துணை நிற்போம் என்றார் அவர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More