போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள், போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சென்னை போக்கு வரத்து காவல்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள் தங்களுடைய பாக்கெட்டில் மிக குறைந்த அளவில் மட்டுமே செலவுக்காக பணம் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருக்கும் பணத்தின் சீரியல் எண்ணை அவர்கள் பணியின் போது வைத்திருக்கும்... நோட் புத்தகத்தில் எழுதி வைக்க வேண்டும்.
அதிகாரிகள் சோதனை செய்யும் போது அதற்கு அதிகமாக பணம் வைத்திருந்தால் தகுந்த தண்டனை கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னை மனப்பாக்கம் அருகே போக்கு வரத்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் அந்த வழியாக செல்போனில் பேசிக் கொண்டு வந்த கார் டிரைவரை மடக்கினார்.
அந்த டிரைவரை பார்த்து செல்போன் பேசியபடி ஓட்டியதால் ரூ.1100 கட்ட வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு அவர் காரின் பின் பக்க சீட்டில் அமர்ந்திருக்கும் சாரிடம் பேசுங்கள் என்று கூறியதற்கு சாராக இருந்தாலும், மோராக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஸ்பார்ட் பைன் ரூ.1100 கட்ட வேண்டும், இல்லை என்றால் என்னை கவனித்து விட்டு செல்லுங்கள் என்று கறாராக கூறினார்.
டிரைவருக்கும், போலீசாருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. இதனால் காரின் பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்தவர் கண்ணாடியை திறந்தார். அவரை பார்த்த போலீஸ் காரர் அதிர்ச்சி அடைந்து வணக்கத்தை தெரிவித்தார். காரில் வந்தது சென்னை காவல் துறையில் சட்டம்- ஒழுங்கு பணிபுரியும் உயர் அதிகாரி.
அந்த அதிகாரி போலீஸ்காரரை பார்த்து உன் பாக்கெட்டில் வைத்திருக்கும் பணத்தை எடுங்கள் என்று கூறிய போது, பாக்கெட்டில் அவர் ரூ.1000 வைத்திருந்தார். ஏது இவ்வளவு பணம் என்று கேட்ட போது அவர் ஆடிப் போனார். உடனே காரில் வந்த அதிகாரி, போக்குவரத்து போலீசார் யாரும் ஒழுங்காக பணி செய்வதில்லை என்றும் கலெக்ஷன் செய்வதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள் என்று போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்து விட்டு காரில் சென்று விட்டார். அந்த செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர் கண்டிக்கப்பட்டார்.
இந்த பின்னணியில் தான் அனைத்து போக்குவரத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் இந்த எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்து பணிக்கு வந்து பிறகு வீட்டிற்கு ஏதேனும் பொருட்களை வாங்கி செல்ல பணத்தை கொண்டு வந்தாலும் அதிகாரிகள் சோதனையின் போது மாட்டிக் கொண்டால் உள்ளதும் போய்விடும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்து வருகிறார்கள்.
காவல் துறையில் ஒரு சிலர் செய்யும் தவறினால் அனைவருக்கும் களங்கமும், பாதிப்பும் ஏற்படுவதாக நேர்மையான போலீசாரும் புலம் புகிறார்கள்.
0 comments:
Post a Comment