இருட்டறை நிகழ்ச்சியில் பெண்களிடம் சில்மிஷம்: என்ஜினியர் உள்பட 2 பேர் கைது

சென்னை அமைந்தகரையில் உள்ள ஸ்கைவாக் வணிக வளாகத்தில் நடந்த பேய் வீடு இருட்டறை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 பெண்களிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த என்ஜினியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அமைந்தகரையில் உள்ளது ஸ்கைவாக் வணிக வளாகம். அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக 3வது மாடியில் நடத்தப்படும் பேய் வீடு இருட்டறை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

நேற்று முன்தினம் இரவு 2 திருமணமான பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களது கணவன்மார்கள் வெளியே நின்று கொண்டிருந்தனர். இருட்டறைக்குள் அந்த பெண்களிடம் 2 வாலிபர்கள் செக்ஸ் சில்மிஷம் செய்துள்ளனர். உடனே அவர்கள் அலறியடித்துக் கொண்டு இருட்டறையை விட்டு வெளியே ஓடி வந்தனர். சில்மிஷ வாலிபர்களுக்கு அங்கிருந்தவர்கள் தர்ம அடி கொடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அமைந்தகரை இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த 2 வாலிபர்களையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்திரன் (25), ஹாரீஸ் (30) என்பது தெரிய வந்தது. அதில் சுரேந்திரன் சாப்ட்வேர் என்ஜினியர் ஆவார். அவர்கள் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கின்றனர்.

அவர்கள் 2 பேரையும் மன்னித்து விட்டுவிடுமாறு அந்த பெண்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு போலீசார், வேண்டும் என்றால் நீதிமன்றத்தில் சமாதானமாகப் போகங்கள், தற்போது நாங்கள் எதுவும் செய்ய இயலாது என்றனர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More