அக் 9-ம் தேதி ரஜினியைச் சந்திக்கிறார் ஷாரூக்கான்!

வரும் அக்டோபர் 9-ம் தேதி, அதாவது ஞாயிற்றுக்கிழமை போயஸ் கார்டனில் ரஜினியைச் சந்திக்கிறார் நடிகர் ஷாரூக்கான்.

அன்று ஷாரூக்கானின் ஐபிஎல் அணி சென்னையில் விளையாடுகிறது. எனவே நிச்சயம் அன்றைக்கு தான் சென்னையில் இருப்பேன் என்றும், ரஜினியைச் சந்திப்பேன் என்றும் ஷாரூக்கான் கூறியுள்ளார்.

ஆனால் அவரது சந்திப்பு குறித்து ரஜினி வீட்டில் யாரும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன்பு நிருபர்களிடம் பேசிய ஷாரூக்கான், "நான் ரஜினியின் தீவிர ரசிகன். நிச்சயம் அவரை சென்னையில் சந்தித்து மரியாதை செலுத்த விரும்புகிறேன். அடுத்த முறை சென்னை செல்லும்போது நிச்சயம் சந்திப்பேன். அவரைப் பற்றி பேசும்போதே சிலிர்ப்பாக உள்ளது.

அக்டோபர் 4-ம் தேதி ராணா படத்தில் அவர் நடிப்பார் என்றும் அப்போது ராஒன் காட்சியை எடுத்துக் கொள்ளலாம் என்றும் சௌந்தர்யா கூறியிருந்தார். ஆனால் ரஜினி சார் ராணாவில் நடிக்கவில்லை. ஆனாலும் சௌந்தர்யா தன் வாக்கை காப்பாற்றினார்.

படப்பிடிக்கு தனது தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவுடன் வந்தார் ரஜினி சார். என் வாழ்க்கையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆம், ரஜினி சாருடன் நான் நடித்தேன். பின்னர் அந்தக் காட்சியை சௌந்தர்யா எடிட் செய்து, மீண்டும் ரஜினி சாருக்கு காட்டி அனுமதி பெற்றார்," எனும் ஷாரூக், எந்திரன் சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார்.

"ரோபோ படத்தை எனது குழந்தைகள் வீட்டில் உள்ள திரையரங்கில் பார்க்க விரும்பினார்கள். ஆனால் பிரிண்ட் கிடைக்கவில்லை. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட லதா மேடம், உடனே கவுரியிடம் (ஷாரூக் மனைவி) பேசினார். மும்பையில் உள்ள விநியோகஸ்தரிடம் பிரிண்டுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னார். என் குழந்தைகள் ரோபோவை பார்த்து மகிழ்ந்தனர். இப்படி பல விஷயங்களில் ரஜினி சார் குடும்பத்துக்கு நான் ஆயுள் முழுக்க கடன்பட்டிருக்கிறேன்," என்றார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More