ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கோத்தபய ராஜபக்சே அளித்த பதில்கள், ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பான அவருடைய அறியாமையையும், பன்னாட்டு அழுத்தத்தால் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும்தான் காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:
ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி எடுத்த சிறப்பு நேர்காணலில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சே அளித்துள்ள பதில்கள், இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் இலங்கை அரசை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதையே காட்டுகிறது.
“தீர்மானம் நிறைவேற்றியதெல்லாம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக்கொள்ளும் முயற்சி. உண்மைகளை அறியாமல் நிறைவேற்றப்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்கள். ஜெயலலிதாவிற்கு தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், இலங்கையின் கடற்பரப்பிற்குள் வந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்தட்டும். அதை அவர் முதலில் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். இதிலிருந்து மீனவர் பிரச்சனை தமிழர்களுக்குத் தெரியாது என்று நினைத்துப் பேசியுள்ளார்.
மீனவர் பிரச்சினை - உண்மை என்ன?
தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிக்கிறார்கள், அது இலங்கை தமிழ் மீனவர்களைப் பாதிக்கிறது என்கிறார். இதில் உண்மை என்னவெனில், இந்திய கடற்பகுதிக்கு வந்து மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்ட 70க்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இவர்கள் யாவரும் சிங்கள மீனவர்களே, ஈழத் தமிழ் மீனவர்கள் அல்லர். அது மட்டுமின்றி, ஏதோ தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதால் ஈழத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது போல் கோத்தபய பேசியுள்ளார்.
ஆனால், ஈழத் தமிழ் மீனவர்கள் ஆழ் கடலிற்கு வந்து மீன் பிடிக்க முடியாத வகையில் அவர்களை குறைந்த தூரத்திற்கு மட்டுமே கடலில் சென்று மீன் பிடிக்க சிறிலங்க அரசு அனுமதிக்கிறது. அவர்கள் நீண்ட தூரம் சென்று மீன் பிடிக்க முடியாத அளவிற்கே டீசல் வழங்குகிறது. இந்த உண்மையை சாதுரியமாக மறைத்து விட்டு, எல்லைத் தாண்டி மீன் பிடிப்பது பற்றிப் பேசுகிறார்.
ஈழத்து மீனவர்களும், இந்திய மீனவர்களும் எவ்வித தடையுமின்றி இராமேஸ்வரத்தி்ற்கும், மன்னாருக்கும், வடக்கே யாழ்ப்பாணம் வரையிலும் தொன்றுதொட்டு மீன் பிடித்து வருகிறார்கள் என்பது கோத்தபயவிற்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் தமிழக மக்களுக்கும் அரசுக்கும் தெரியும்.
“தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட வேண்டும், மறுவாழ்வு தரப்பட வேண்டும், அதுதான் முக்கியமானது. அதை விட்டுவிட்டு போர்க் குற்றம் என்றெல்லாம் சத்தமிடுவது எந்தப் பயனையும் தராது. அந்த மக்கள் குடியேற உதவ வேண்டும். அதை விட்டுவிட்டு, போர்க் குற்றம் பற்றிப் பேசுவது, பன்னாட்டு விசாரணை கோருவது என்பதெல்லாம் வீணானது” என்று கோத்தபய கூறியுள்ளார்.
முதல்வரின் தீர்மானத்தை சரியாக படிக்காத கோத்தபய
இவர் தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை சரியாக படிக்கவில்லை என்பது தெரிகிறது. போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், இன்னமும் தமிழர்கள் முகாம்களிலேயே உள்ளனர். அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தம் செய்யப்படவில்லை. அவர்களுக்கு தேவையான உதவிகளையும் இலங்கை அரசு செய்யவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வருகிறது. எனவே அந்நாட்டு அரசுக்கு எதிரான, மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கோருகிறது. இத்தீர்மானம் குறித்து விளக்கமளித்த தமிழக முதல்வர் கூட, ‘இலங்கை அரசை வழிக்குக் கொண்டுவரவே பொருளாதாரத் தடை அவசியமாகிறது’ என்று கூறினார்.
அதுமட்டுமல்ல, போர் முடிந்த பிறகும் அங்கு தமிழர்கள் எப்படிப்பட்ட அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் தமிழக முதல்வர் நன்றாகவே அறிந்துள்ளார். அதனால்தான், அங்கு அமைதி திரும்பிவிட்டது என்று பறைசாற்ற விரும்பும் இலங்கை அரசு சூழ்ச்சியுடன் நிறைவேற்ற முற்பட்ட கொழும்பு, தூத்துக்குடி கப்பல் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று தனது கட்சியின் சார்பாக தீ்ர்மானம் நிறைவேற்றினார்.
சட்டமன்ற தீர்மானத்தின் விளைவுகள்
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை என்று கோத்தபய கூறுகிறார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதன் விளைவே இலங்கைக்கு எதிராக நிதித் தடை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற அயலுறவுக் குழு நிறைவேற்றியுள்ள தீர்மானம் ஆகும்.
அதுமட்டுமின்றி, இலங்கையில் நடந்த போர் குறித்து பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது. அது நிறைவேறினால், ஐ.நா.பாதுகாப்புப் பேரவையிலயே இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை தொடங்க அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரும் நிலை ஏற்படும்.
இலங்கையின் பாதுகாப்புச் செயலராக இருந்தாலும், அமெரிக்காவின் பிரஜையாகவும் உள்ள கோத்தபய ராஜபக்சேவிற்கு இதுவெல்லாம் நன்றாகத் தெரியும், இருந்தாலும் சாதுரியமாக மறைக்கப் பார்க்கிறார்.
ஏன் ஓடிவந்தார் காரியவம்சம்?
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும், அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தமிழக முதல்வரை சந்தித்ததும் ஏற்படுத்திய பீதியினால்தான் டெல்லியில் இருந்து இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் ஓடோடி வந்து தமிழக முதல்வரைச் சந்தித்தார் என்பது கோத்தபயவிற்கும் தெரியும்.
எனவே இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை மறைக்க கோத்தபய முயற்சித்துள்ளார். அவர் இழுத்து இழுத்து, வார்த்தைகளைத் தேடி பதில் கூறியதில் இருந்தே அந்த அச்சம் வெளிப்படுகிறது. அந்த அச்சம் நிச்சயம் நிஜமாகும். விரைவில் அந்நாட்டு அரசுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை தொடங்கும், அதில் ஈழத் தமிழர்களை ராஜபக்ச கும்பல் இனப்படுகொலை செய்தது உறுதியாகும்.
இதில் தமிழக மக்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பன்னாட்டு விசாரணைக்கு எதிராகவும் தங்கள் அரசுக்கு ஆதரவாக இந்தியாவும், சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும் நிற்கின்றன என்று கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் மீது மத்திய காங்கிரஸ் அரசு சாதித்துவரும் மெளனத்தின் பொருளை கோத்தபய தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கை அரசுக்கு எதிரான பன்னாட்டு விசாரணையில் மத்திய காங்கிரஸ் அரசின் மற்றொரு முகமும் வெளியாகும் போது உண்மை உலகிற்குத் தெரியவரும்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment