2009ல் நடந்த போரின்போது இலங்கை ராணுவத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கை குறித்த விவாதம் என்று காலையில் குறிப்பிட்ட லோக்சபா செயலகம், பிற்பகலில் அந்த வார்த்தைகளை அப்படியே தலைகீழாக மாற்றி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்து இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்று மாற்றியதால், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்களும், பிற கட்சிகளின் எம்பி்க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இலங்கைப் படுகொலை என்று கூறக் கூடவா மத்திய அரசுக்கு தைரியமும், துணிச்சலும் இல்லை என்று எம்.பிக்கள் குமுறியுள்ளனர்.
நேற்று லோக்சபாவில் எந்தவிவாதமும் நடைபெறவில்லை. ஊழல் புகார்கள் தொடர்பாக பாஜக தலைமையில் நடந்த போராட்டத்தால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இருப்பினும் அவையின் விவாதங்கள் குறித்த பட்டியல் காலையில் வெளியிடப்பட்டது. அதில் 2009ம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கை மீதான விவாதம் என்ற ஒன்றும் இடம் பெற்றிருந்தது. அந்த விவாதத்தில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலுவும், சமாஜ்வாடிக் கட்சி சைலேந்திர குமாரும் இதில் கலந்து கொண்டு பேசுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திடீரென பிற்பகலில் இன்னொரு பட்டியல் வெளியானது. அதில், இலங்கையில் தமிழர் மறுவாழ்வு குறித்த இந்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காக்கத் தேவையான நடவடிக்கைகள் என்று மொட்டையாக அந்த வாசகத்தை மாற்றி விட்டனர்.
லோக்சபா சபாநாயகர் மீரா குமாரின் உத்தரவின் பேரில் இந்த மாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது. இப்படி மாற்றுமாறுமத்திய அரசிடமிருந்து உத்தரவு வந்ததால்தான் வாசக மாற்றம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இது திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பிக்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இலங்கைப் படுகொலை என்று கூறக் கூடவா மத்திய அரசுக்குத் தைரியம் இல்லாமல் போய் விட்டது. அப்படி எதற்காக இலங்கைக்கு இந்தியா பயந்து சாக வேண்டு்ம் என்று திமுக உறுப்பினர்கள் சிலர் ஆவேசமாக கேட்டனர்.
மீரா குமாரிடம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பிதான், இலங்கை தொடர்பான விவாத வார்த்தைகளை மாற்றுமாறு நேரில் வலியுறுத்தினாராம். மத்திய அரசும் கூட இதுகுறித்து மீரா குமாரிடம் பேசியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர்தான் இந்த மாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இலங்கையிலிருந்து வந்த நாடாளுமன்ற சபாநாயகர் குழுவை வரவேற்று சபாநாயகர் மீரா குமார் முகம் மலர, புன்சிரிப்புடன் வரவேற்று மகிழ்ந்தார். சிங்களக் குழுவின் வருகைக்கு அதிமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளின் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது சபாநாயகரை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. தமிழக எம்.பிக்களை கடுமையாக அவர் கண்டித்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இலங்கையின் மனம் நோகாத வகையில் அவர் நடந்து கொண்டிருப்பது தமிழக எம்.பிக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும் மீரா குமாரின் செயலை நேரடியாக தட்டிக் கேட்க முடியாததால், இலங்கைப் பிரச்சினையை இன்னும் தீவிரமாக லோக்சபாவில் எழுப்புவது, இதற்கு பல்வேறு கட்சிகளின் ஆதரவையும் திரட்டுவது என்று தமிழக எம்.பிக்கள் தீர்மானித்துள்ளனராம். லோக்சபாவை முடக்கும் வகையில் அந்தப் பிரச்சினையை எழுப்புவோம் என்றும் தமிழக எம்.பிக்கள் சார்பில் தெரிவிக்கப்ப்டுள்ளது.
0 comments:
Post a Comment