டெல்லியில் இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவதாக அன்னா ஹஸாரே அறிவித்திருந்த நிலையில் அதிகாலையிலேயே அவரையும், அவரது குழுவினரையும் டெல்லி போலீஸார் அதிரடியாக கைது செய்து பெயர் குறிப்பிடாத இடத்திற்குக் கொண்டு சென்று விட்டனர். இதனால் டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.
லோக்பால் வரைவு மசோதா விவகாரம் தொடர்பாக இன்று தனது 2வது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவதாக ஹஸாரே அறிவித்திருந்தார். இதற்கு மத்திய அரசும், காங்கிரஸும், மத்திய அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவருக்கு ஜந்தர் மந்தர் பகுதியில் இடம் தர காவல்துறையும் மறுத்தது. கடைசியில் 20க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்து ஜெயப்பிரகாஷ் நாராயண் பார்க்கில் உண்ணாவிரதம் இருக்க அனுமதித்தது.
இருப்பினும் இவற்றில் 6 நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று அன்னா குழுவினர் அறிவித்தனர். அவற்றை ஏற்க மாட்டோம், மீறுவோம் என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து உண்ணாவிரதத்திற்குக் கொடுக்கப்பட்ட அனுமதியை டெல்லி காவல்துறை திரும்பப் பெற்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் திடீரென அன்னா ஹஸாரே, அவரது குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோரை போலீஸார் திடீரென கைது செய்து அப்புறப்படுத்தி பெயர் குறிப்பிடாத இடத்திற்குக் கொண்டு சென்று விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதுகுறித்து அரவிந்த் கேஜ்ரிவால் தொலைபேசி மூலம் பேசுகையில், எங்களைக் கைது செய்துள்ளனர். எங்கு எங்களைக் கொண்டு செல்கின்றனர், அடைக்கப் போகின்றனர் என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. அதுகுறித்து போலீஸ் தரப்பில் எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றார்.
அமைதி காக்க அன்னா ஹஸாரே கோரிக்கை
கைது செய்யப்பட்ட அன்னா ஹஸாரே பேசுகையில், மக்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும். அமைதி காக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான நமது போராட்டத்தை நிறுத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்னா ஹஸாரே தடையை மீறி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்று அறிவித்ததால்தான் அவரையும், அவரது குழுவினரையும் போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று டெல்லியின் பல பகுதிகளில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை மீறி ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா பகுதியில் அன்னாவின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து அருகில் உள்ள சத்ரசால் ஸ்டேடியத்திற்குக் கொண்டு சென்றனர்.
டெல்லியில் மகாத்மா காந்தி நி்னைவிடம் உள்ள ராஜ்காட், டெல்லி கேட் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளில் போலீஸார் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
அன்னா கைதைத் தொடர்ந்து டெல்லியில் பதட்டம் நிலவுகிறது. அவரது ஆதரவாளர்கள் டெல்லியில் பெருமளவில் குவிந்து வருகின்றனர். ஜெயப்பிரகாஷ் நாராயண் பார்க்கைச் சுற்றிலும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
என்னைக் கைது செய்தாலும், சிறையில் என்னுடைய உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருந்தார் அண்ணா ஹசாரே. திட்டமிட்டபடி அவரது உண்ணாவிரதம் தொடருமா என்பது தெரியவில்லை.
1 comments:
அசாரேவுக்கு எதிராக அருந்ததி ராய், அருணா ராய்: சுற்றுலா போராளிகளுக்கு உண்மை போராளிகள் எதிர்ப்பு!
http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_22.html
Post a Comment