ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
டெல்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோஹித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் வழக்கில் ஆஜராக வந்தனர். மூவரின் வக்கீல்களான துரைசாமி, சந்திரசேகர் ஆகியோரும் அவர்களுடன் வந்திருந்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்களும் குவிந்து விட்டனர்.
வழக்கை விசாரித்த பெஞ்ச், அதை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்து 8 வார இடைக்காலத் தடையை அறிவித்தது.
உற்சாக வெள்ளத்தில் ஸ்தம்பித்தது உயர்நீதிமன்றம்
இதைக் கேட்டதும் வக்கீல்கள் உற்சாகக்குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் உயர்நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த வரலாறு காணாத மிகப் பெரிய வக்கீல்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கூட்டமும் பூரிப்பில் மூழ்கியது.
அனைவரும் பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்து முழக்கமிட்டதால் உயர்நீதிமன்றமே கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போனது.
தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்
தூக்குத் தண்டனை 8 வாரங்குக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தமிழகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இனிப்புகளை வழங்கியும், மகிழ்ச்சி முழக்கமிட்டும் சந்தோஷத்தைப் பகிர்நது கொண்டனர்.
பொதுமக்களும் மகிழ்ச்சி
பொதுமக்களுக்கும் இந்த உத்தரவு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 21 வருடமாக சிறையில் கிட்டத்தட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்தவர்களுக்கு தூக்குத் தண்டனை என்பது இரண்டு தண்டனை கொடுப்பதற்குச் சமம். இது நியாயமற்றது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
மனுவில் கூறப்பட்டிருந்தது என்ன?
முன்னதாக தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் நேற்று வழக்கறிஞர் தடா சந்திரசேகர் ரிட் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த மனுக்களில், 1991-ல் கைது செய்யப்பட்ட நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளோம். எங்களுக்கு தூக்கு தண்டனை விதித்து 1998 ஜனவரியில் தடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை உறுதி செய்து 1999 மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு தமிழக ஆளுநருக்கு நாங்கள் 2 முறை அளித்த கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக 26.4.2000-ல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினோம். எனினும், எங்கள் மனு மீது பல ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், உடனடியாக முடிவெடுக்கும்படி நினைவுபடுத்தி அடுத்தடுத்து கடிதம் எழுதினோம். எனினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பின் இம்மாதம் 12-ம் தேதி எங்கள் கருணை மனுக்களை நிராகரித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வரும் செப்டம்பர் 9-ம் தேதி நாங்கள் தூக்கிலிடப்பட உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இது ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிகமாகும். மேலும், இந்த தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, வாடி வருகிறோம்.
இவ்வளவு நீண்ட காலம் நாங்கள் சிறையில் வாடிய பிறகும்கூட, எங்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது ஒரு குற்றத்துக்கு 2 தண்டனை அளிப்பதாகும். இவ்வாறு தண்டனை அளிப்பது சட்ட விரோதமானதாகும். மேலும், இது வாழ்வதற்குரிய சட்ட ரீதியிலான எங்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.
மேலும், கருணை மனுக்களின் மீது உடனடியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை மனுக்களின் மீதான முடிவுகள் தாமதமானதால் ஏராளமான தூக்கு தண்டனை உத்தரவுகளை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் ரத்து செய்துள்ளன.
இந்நிலையில், நாங்கள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பிவிட்டு அதன் முடிவு தெரியாமல் 11 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவித்தோம். வாழ்வோமா, சாவோமா எனத் தெரியாமல் 11 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நாங்கள் தனிமைச் சிறையில் தவித்த தவிப்பும், அனுபவித்த சித்திரவதையும் மரண தண்டனையை விடவும் மிகக் கொடுமையானது.
ஆகவே, 11 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கருணை மனு மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்ததால், எங்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
காப்பாற்ற முடியும்-ராம்ஜேத்மலானி:
முன்னதாக உயர்நீதிமன்றத்திற்கு வந்த ராம்ஜேத்மலானியிடம் செய்தியாளர்கள் வழக்கின் தன்மை குறித்து கேட்டபோது, இது மிகவும் சவாலான வழக்கு. இருப்பினும் திறமையாக வாதாடினால் நிச்சயம் மூவரையும் காப்பாற்ற முடியும். காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
3 comments:
Good news for all tamilan
Good news for all tamilan
Yes Mr. Raja
Post a Comment