மனச்சோர்வு நோய்களிலேயே மிகக் கொடுமையானது சைக்கோடிக் மனச்சோர்வுதான்.
கவிதாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்த விபரீதம் நடந்தது. அவர் தற்கொலைக்கு முயன்றார் என்று மருத்துவமனையில் சேர்த்தார்கள். ‘திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லை. மாப்பிள்ளை பிடிக்கவில்லை’ என்றெல்லாம் பல காரணங்கள் சொல்லப்பட்டன.
அவரது உடம்பில் இருந்த ரத்தக் காயங்களைப் பார்த்த மருத்துவர்கள், அவருக்கு வந்திருக்கும் பிரச்னையை ஆழமாக அலசிப் பார்க்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான் தனக்குத்தானே ரத்தக் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு, அதைப் பார்த்து ரசிப்பதில் ஒருவித சந்தோஷத்தை கவிதா அனுபவித்து வந்த உண்மை தெரியவந்தது. கத்தியாலும் பிளேடாலும் அவர் தன் கைகளில் அறுத்துக் கொண்டிருக்கிறார்.
‘‘கவிதா ஒரு வகையான சைக்கோடிக் மனச்சோர்வால் (Psychotic Depression) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். உடனே சிகிச்சைக்கு உட்படுத்தினால்தான் அவரைக் குணப்படுத்த முடியும்’’ என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.
மனச்சோர்வு நோய்களிலேயே மிகக் கொடுமையானது சைக்கோடிக் மனச்சோர்வுதான். இவர்களிடம் அடிப்படையான சில குறைகள் வெளிப்படையாகத் தென்படும். சக மனிதர்கள் மீது வெறுப்பு, மற்றவர்களால் கைவிடப்பட்டு விட்டோமோ என்ற மனநிலை, இதனால் பிரச்னைகளில் இருந்து விடுபட உயிரை மாய்த்துக் கொள்வதுதான் ஒரேவழி என்ற எண்ணம் எழும். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த எண்ணத்தில் இருந்து விடுபட்டு, சகஜநிலைக்கு வந்தவர்கள்போல் காணப்படுவார்கள்.
சைக்கோடிக் மனச்சோர்வு, லட்சத்தில் நூறு பேருக்கு இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அந்த நூறு பேரில் ஒருவராக நாம் இருக்கக்கூடாது என்றால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடனே மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.
அறிகுறிகள்:
நம்பிக்கைக்குரியவர்களே கைவிட்டது போன்ற உணர்வு அடிக்கடி எழுதல், மனதை ஒரு முகப்படுத்த முடியாமை, சின்னச் சின்ன விஷயங்களில் கூட தீர்மானம் எடுக்க முடியாமை, சுற்றியிருப்பவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழகமுடியாத நிலை, பொழுது போக்குகளில் ஆர்வமின்மை, யாரோடும் ஒத்துப் போகாமல் எதையும் எதிர்க்கும் மனப்பான்மை, அமைதியின்மை, எரிந்து விழுதல், பசியின்மை, பாலியலில் ஈடுபாடின்மை, அடிக்கடி தலையில் பாரம், என்று இந்த நோய்க்கு பல அறிகுறிகள் இருக்கின்றன.
மூளையில் உள்ள செரட்டோனின் என்ற இரசாயனப் பொருளின் மாற்றத்திற்குத் தக்கவாறுதான் மனச்சோர்வு மனிதனைத் தாக்குகிறது. அந்த இரசாயனத்தை சமநிலையில் வைத்திருக்கக் கூடிய மருந்துகள், சிகிச்சைகள் இப்போது எல்லா நாடுகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
கூடியமட்டிலும் சில பயிற்சிகளை நாள்தோறும் கடைப்பிடித்துவந்தால் சைக்கோடிக் மனச்சோர்வு நோய் நம்மை அண்டாது பாதுகாக்க முடியும். அவற்றுள் சில:
1. உடற் பயிற்சிகள்:
காலையில் எழுந்ததும். பூனை தன் உடலை நீட்டி சோம்பல் முறிப்பதைப் பார்த்திருக்கிறோம். இதேபோல் நாமும் உடலை நீட்டி பயிற்சி செய்தால் மூட்டுக்களிலும் தசைகளிலும் உள்ள விரைப்புகள் நீங்கி, மூளைக்கு நிறைய ரத்தம் பாயும். சுறுசுறுப்புத் தானாக வரும்.
இது தவிர, ஸ்கிப்பிங், ஓடுதல், அதிகாலை நடைப்பயிற்சி ஆகியவை அவசியம்.
2. யோகா, தியானம்:
ஒருவருக்குப் போதிய நேரமும் விருப்பமும் இருந்து யோகா செய்தால் போதும், உளச்சோர்வு நோய் அருகில் வரவே வராது. ஏனென்றால் உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே இணையச்செய்வது யோகா பயிற்சி மட்டுமே.
அதேபோல், குளித்து முடித்தவுடன், கண்களை மூடிக்கொண்டு, மனதில் வரும் எந்தப் பொருளின் மீதும் மனதைச் செலுத்தி ஒருமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு சில நிமிடங்கள் தியானம் செய்வதால் மனதிற்குப் புத்துணர்ச்சியும், சிந்தனைத் தெளிவும் கிட்டும்.
3. உணவில் கட்டுப்பாடு:
எடை அதிகரிப்பும், உடல் பருமனும்தான் சைக்கோடிக் மனச்சோர்வு நோய்க்கு ஆரம்பகால நுழைவாயில்கள் (நோய் தாக்கிய பின்னர் உடல் இளைத்துவிடும் என்பது வேறு விஷயம்). அதற்குக் கட்டுப்பாடான உணவுதான் சிறந்த சிகிச்சை. காய்கறிகள், பழங்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். அரிசியில் செய்யப்பட்ட உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நெய், பாலாடைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
4. புகை, மது கூடாது:
புகை பிடிப்பதால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படும். அதனால் சைக்கோடிக் மனச் சோர்வு நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். இந்நோய் தாக்கப்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையாகி பல விபரீத முடிவுகளை எடுப்பது வாடிக்கையாகிவிட்டது. அதனால் இரண்டுமே முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
5. நிம்மதியான தூக்கம்:
ஒருநாளைக்கு 6 மணி நேரமாவது நல்ல தூக்கத்தில் இருக்க வேண்டியது அவசியம். களைத்துப்போன உடலுக்கும் மனதிற்கும் நல்ல தூக்கத்தால்தான் புத்துணர்ச்சி தரமுடியும். குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குப்போவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
6. வேலையில் அக்கறை:
செய்யும் வேலையில் அதிக அக்கறை எடுத்து ஒருமனத்துடன் செயல்பட்டால் மனச்சோர்வுக்கு இடமே இருக்காது. வேலை நேரத்தைத் திட்டமிடத் தெரியாதது, அளவுக்கு அதிகமான வேலைப் பளுவை இழுத்துப் போட்டுக்கொள்வது, மனச்சோர்வை தூண்டக்கூடியவை. இவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
7. போட்டி மனப்பான்மையைத் தவிர்த்தல்:
தேவையற்ற, முறையற்ற பேராசையையும் போட்டியையும் தவிர்க்க வேண்டும். போட்டி மனப்பான்மை வளர வளர, மனம் பலவீனப்படுவதோடு, எப்போதும் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சச்சரவுகளையுமே சந்திக்க வேண்டிவரும். இவைதான் பலருக்கு மனச்சோர்வு நோய் வரக் காரணம்.
8. சமுதாயத்தோடு ஒத்துப்போதல்:
நல்ல சமூக உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் இரு தரப்பிலும் நல்ல துணையை, தோழமையை உருவாக்கும். உறவுகளுடன் சேர்ந்து பொழுதுபோக்கு அம்சங்களில் கலந்துகொள்வது, இசை, பாட்டு என்று கேட்பதும், கற்றுக்கொள்வதும் சமூக உறவோடு கலப்பதற்கு உதவும்.
சைக்கோடிக் மனச்சோர்வு அளவிற்கு அதிகமாக இருக்கும்போது, நரம்பு மண்டலம் சிதைந்து விடும். அச்சம், சோர்வு, உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமை என்று தோன்றி பல விபரீத செயல்களுக்கு இட்டுச் செல்லும். அதனால், மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டவுடன், ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று, உடலையும் மனதையும் முழு செக்கப் செய்துகொள்வது பல வழிகளிலும் உதவக்கூடும்.
8 comments:
thank u very much i like more this website
by
manjulaponnarasu
Welcome manjulaponnarasu... thanks for your comments...
sir i need health tips
நல்ல விவரமான பதிவு.
பகிர்வுக்கு நன்றிகள்.
"துளசி கோபால்" வருகைக்கு நன்றி...
use full hints
nalla visayam nanbarae nandri..
பகிர்வுக்கு நன்றிகள்.
Joshva
Post a Comment