போர்க்குற்றம் புரிந்த ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி விசாரணை நடத்தித் தண்டிக்க வேண்டும். தமிழ் ஈழம் அமைக்க பொது ஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடி பிரமாண்ட பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
தமிழ் ஈழக் கொடி, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய படம், மூன்று தமிழர் உயிரைக் காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த இளம் பெண் செங்கொடி ஆகியோரின் புகைப்படங்களைக் கையில் ஏந்தியபடி பல ஆயிரம் தமிழர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்து வந்து இவர்கள் இதில் கலந்து கொண்டனர். ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 18வது கூட்டம் நடைபெற்ற வேளையில் நடந்த இந்தப் பிரமாண்டப் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ்சைச் சேர்ந்த மேயரான ஸ்டீபன் கட்டிக்னான் கூறுகையில், எனது தொகுதியில் 30 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதற்காகவே நான் இங்கு வந்தேன் என்றார். பேராசிரியர் ஜான் நீல்சன் என்பவர் கூறுகையில், இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலை குறித்து மனித உரிமைக் கவுன்சில் விரிவாக விசாரிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும் என்றார்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் விராஜ் மெண்டிஸ். இவர் ஒரு சிங்களர் ஆவார். தமிழர்களின் மனித உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தருபவர். நீண்ட காலமாக தமிழர்களின் போராட்டத்தோடு பங்கேற்றும் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனைச் சேர்ந்த கந்தையா ராஜ மனோகரன் என்பவர் கூறுகையில்,
இலங்கை அரசின் போர்க்குற்றம் பற்றி சர்வதேச அளவிலான சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினார். சுதந்திர தனித்தமிழ் ஈழ விடுதலைக்காக, தாங்கள் போராடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகள் இதுவரை காணாத அளவில் பெரும் திரளான தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம், ரயில், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் திரண்டு வந்திருந்தனர்.
1 comments:
பகிர்வுக்கு நன்றி.
Post a Comment