12,000 கோடி ரூபாய் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது!


செவ்வாய் கிரகத்துக்கு (Mars) அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு அனுப்பியுள்ள 'க்யூரியாசிட்டி' விண்கலம் இன்று அட்டகாசமாக தரையிறங்கியது.
பூமியிலிருந்து ஏவப்பட்டு 8 மாத பயணத்துக்குப் பின் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்து, பத்திரமாக தரையிறங்கியுள்ளது.
அணு சக்தியில் இயங்கும் இந்த ஒரு டன் எடை கொண்ட விண்கலம் ஒரு நடமாடும் ஆய்வுக் கூடமாகும். 6 சக்கரங்கள் கொண்ட இந்தக் கலன் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளது.
கடந்த 8 மாதங்களில் 567 மில்லியன் கி.மீ. தூரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ள க்யூரியாசிட்டி அந்த கிரகத்தின் தென் பகுதியில் உள்ள கேல் கிரேட்டர் எனப்படும் மாபெரும் பள்ளத்தாக்கில் தரையிறங்கியுள்ளது. இது ஒரு பெரிய மலைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது.
மணிக்கு 13,000 கி.மீ. வேகத்தில் பயணித்து வந்த இந்த விண்கலத்தின் வேகம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியவுடன் அதன் ஈர்ப்பு விசை காரணமாக அதிகரித்தது. இருப்பினும் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி மிக மிக பத்திரமாக தரையிறக்கியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள்
செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரையிறங்கிய நேரம் அங்கு பிற்பகலாகும். இப்போது செவ்வாய் கிரகத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஐஸ் கட்டிகளால் ஆன மேகங்கள் சூழ்ந்த இந்த கிரகத்தில் இப்போதைய வெப்ப நிலை மைனஸ் 12 செல்சியல் ஆகும்.
கிட்டத்தட்ட ரூ. 12,000 கோடி செலவில் இந்த விண்கலத் திட்டத்தை நாஸா செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அமெரிக்கா தவிர 12 நாடுகளும் நிதியுதவி செய்துள்ளன.

No comments:

Post a Comment