பராமரிக்காவிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் தாஜ் மஹால் இடியும் அபாயம்-ஆய்வாளர்கள்

நாசம் அடைந்து கொண்டிருக்கும் அடித்தளத்தை சீர்செய்யவில்லை என்றால் இன்னும் 5 ஆண்டுகளில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் இடிந்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலக அதிசயங்களில் ஒன்று காதல் சின்னமான தாஜ் மஹால். 358 ஆண்டுகளுக்கு முன்பு ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ் மஹால் நினைவாகக் கட்டிய பளிங்கு மாளிகை தான் தாஜ் மஹால். உத்தர பிரதேச மாநிலத்தி்ல் உள்ள ஆக்ராவில் யமுனா நதிக்கரையோரம் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைதியாகக் காட்சித் தரும் தாஜ் மஹாலைப் பார்க்க ஆண்டு ஒன்றுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஆக்ரா வருகின்றனர்.

தாஜ் மஹால் அமைந்திருக்கும் யமுனா நதி, நிறுவனக் கழிவுகளால் மாசுபட்டுள்ளது. இதனால் தாஜ் மஹாலின் அடித்தளம் அரிக்கப்பட்டு வருகிறது. இப்படியே விட்டுவிட்டால் அடித்தளம் முழுவதுமாக அரிக்கப்பட்டு தாஜ் மஹால் விழுந்துவிடும்.

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் 2 முதல் 5 ஆண்டுகளில் தாஜ்மஹால் இடிந்துவிடும் என்று ஆக்ரா எம்.பி. ராம்சங்கர் கதேரியா டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கட்டிடக் கலையின் அதிசயமாகத் திகழும் தாஜ் மஹால் ஏற்கனவே பொலிவிழந்து வருகிறது. யமுனா நதியில் தண்ணீர் இல்லாததால் மரத்தால் ஆன அடித்தளம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக அதன் அடித்தளத்தைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அடித்தளம் நன்றாக இருக்கின்றது என்றால் எதை மறைக்கிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து பேராசிரியர் ராம் நாத் கூறுகையில், தாஜ் மஹால் யமுனா நதியின் கரையோரம் அமைந்துள்ளது. ஆனால் தற்போது யமுனா நதி வற்றிவிட்டது. இதை தாஜ் மஹாலைக் கட்டியவர்கள் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்கள். யமுனா இல்லை என்றால் தாஜ் மஹாலும் இல்லை என்றார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More