பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் உயிரை பறிகொடுக்க மாட்டோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தூக்கு தண்டனைக்கு எதிராகப் போராடும் தமிழக மக்களின் மனநிலைமையைப் பிரதிபலிக்கும் வகையில் கருத்துரிமை களம் அமைப்பின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே மனித நேய மணல் சிற்பம் அமைக்கப்பட்டது.
மனித தலையில் போடப்பட்ட தூக்கு கயிறு அறுந்தது போன்றும், சிங்கத்தின் கையில் தூக்கு இருப்பது போன்றும் அந்த சிற்பம் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
அந்த சிற்பத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரை தூக்கிலிட மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் மாநில அரசோ தமிழக மக்களின் உணர்வுகளுககு மதிப்பு கொடுத்து அந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த பிரமாண்ட மணல் சிற்பம் கடல் நீரிலும், காற்றிலும் அழிந்துவிடலாம். ஆனால் தமிழக மக்களின் மனதில் இருக்கும் உயிர் சிற்பத்தை எதனாலும் அழித்துவிட முடியாது. இலங்கையில் உடன்பிறப்புக்களை பறிகொடுத்தோம். ஆனால் இந்த 3 பேரின் உயிரை பறிகொடுக்க மாட்டோம். அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். மரண தண்டனையை ரத்து செய்ய மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றார்
No comments:
Post a Comment