யாரிடமும் உயிர்ப்பிச்சை கேட்கவில்லை, மறுக்கப்பட்ட நீதியைத்தான் கேட்கிறோம்- சீமான்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு மறுக்கப்பட்ட நீதியைத்தான் நாங்கள் கேட்கிறோமே தவிர யாரிடமும் உயிர்ப் பிச்சை கேட்கவில்லை என்று நாம் தமிழர் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத் இடைக்காலத் தீர்ப்பு குறித்து சீமான் கருத்து தெரிவிக்கையில்,

தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. நீதிக்கு கிடைத்த வெற்றி. நாங்கள் யாரிடமும் உயிர் பிச்சை கேட்கவில்லை. மறுக்கப்பட்ட நீதியைத்தான் கேட்கிறோம்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியுடன் திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள். இடைக்கால தடை உத்தரவு, அந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. செங்கொடியின் அர்ப்பணத்திற்கு கிடைத்த வெற்றி.

தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சினையை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று மரண தண்டனையை ரத்துசெய்ய தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.

1 comment:

  1. சரியாதான் சொல்லியிருக்கிறார்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete