முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் முழக்கமிட்டார். பின்னர் தூக்கு தண்டனையை எதிர்த்து அவர் வெளிநடப்பு செய்தார்.
மூவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதிய அட்டையை ஏந்தியபடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார் திருமாவளவன்.
அவையின் மையப் பகுதிக்குச் சென்ற அவர் அட்டையை உயர்த்தி பிடித்து மூன்று பேரின் தூக்கு தண்டனையயும் உடனே ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் முழக்கமிட்டார். பின்னர் அவர் வெளிநடப்பு செய்தார்.
வெளியே நிருபர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை மத்திய அரசு உடனே ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும்.
மரண தண்டனை கொள்கையையே மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
சேலத்தில் ரயில் மறியல்:
இந் நிலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரியில் மனித சங்கிலி:
அதே போல இந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தர்மபுரியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பாமக, மதிமுக மற்றும் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் இதில் கலந்து கொண்டனர்.
முதல்வரை சந்திப்பேன், பேரறிவாளனை மீட்பேன்-தாய் அற்புதம்மாள்:
இந் நிலையில் பேரறிவாளனின் தாயார் நிருபர்களிடம் பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் என் மகனுக்கு தூக்கு என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மகனை தண்டனையில் இருந்து மீட்போம்’. இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிடுவேன் என்றார்.
No comments:
Post a Comment